Sivakarthikeyan: 'ஒரு வேளை எலான் மஸ்க் இதைச் செய்தால்…!' – IFFI திரைப்பட விழாவில் எஸ்.கே கலகல

கோவா சர்வதேச திரைப்பட விழாவில் நடிகர் சிவகார்த்திகேயன் எலான் மஸ்க், ட்விட்டர் (எக்ஸ்)குறித்து நகைச்சுவையாகப் பேசியுள்ளார்.

கோவா சர்வதேச திரைப்பட விழாவில் கலந்துகொண்டு பேசிய சிவகார்த்திகேயன் ட்விட்டர் உள்ளிட்ட சமூக வலைதளங்களின் பயன்பாட்டைக் குறைப்பது குறித்துப் பேசினார்.

IFFI-ன் 55வது திரைப்பட விழா நவம்பர் 20ம் தேதி முதல் நடைபெற்று வருகிறது. மத்திய அரசு சார்பில், நடத்தப்படும் இந்த இந்திய சர்வதேச திரைப்பட விழா, கோவாவில் 28-ம் தேதி வரை நடைபெற இருக்கிறது. இதில் பல்வேறு சினிமா பிரபலங்கள் கலந்துகொண்டுள்ளனர். இந்த விழாவில் நடிகையும், அரசியல்வாதியுமான குஷ்பு, நடிகர் சிவகார்த்திகேயனைப் பேட்டி எடுத்திருகிறார். 

சமூக வலைதளங்கள், மன அழுத்தம் எனப் பல விஷயங்கள் குறித்துப் பேசிய சிவகார்த்திகேயன் கடந்த இரண்டு ஆண்டுகளாக மிகக் குறைந்த அளவிலேயே ட்விட்டர் பயன்படுத்துவதாகக் குறிப்பிட்டார்.

“கடந்த இரண்டு ஆண்டுகளாக நான் சமூக வலைதளங்கள் பயன்படுத்துவதைக் குறைத்திருக்கிறேன். நீங்கள் இணையதளம் பயன்படுத்தினால் சமூக வலைதளங்கள் பயன்படுத்துவதைக் குறையுங்கள். இது என் எளிமையான அறிவுரை. முக்கியமாக ட்விட்டரை பயன்படுத்துவதைத் தவிருங்கள்.” என அட்வைஸ் செய்தார்.

சிவகார்த்திகேயன்

அத்துடன், “ஒருவேளை எலான் மஸ்க் என் ட்விட்டர் பக்கத்தை ப்ளாக் செய்தால், அது எனக்கு முதல் வெற்றியாக இருக்கும் என நினைக்கிறேன்.” என்றார் சிவகார்த்திகேயன்.

குஷ்பு உடனான உரையாடலில் தந்தையின் மரணத்துக்கு பின்னான மனநிலை குறித்துப் பேசினார் சிவகார்த்திகேயன். “நான் மிகவும் மன அழுத்தத்திலிருந்தேன். சோகத்திலிருந்து வெளிவர மேடைகளைப் பயன்படுத்தினேன். கைத்தட்டல்கள்தான் எனக்கு தெரபி” என்று பேசினார் சிவகார்த்திகேயன்.

தன்னுடைய முதல் மேடை கல்லூரியில் அமைந்ததாகவும், தனது நண்பர்கள் மேடை ஏற உற்சாகப்படுத்தியதாகவும் பேசினார் சிவா.

சுவாரஸ்யமாக, “2006-ம் ஆண்டு முதல் எந்தவொரு படத்தையும் திருட்டு பதிப்பில் பார்த்ததில்லை. அந்தளவுக்கு சினிமாவை நேசிக்கிறேன்” என்றும் பேசினார்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.