Chennai Super Kings Latest News Updates: இந்தியன் பிரீமியர் லீக் (Indian Premier League) எனப்படும் டி20 கிரிக்கெட் லீக் இந்திய கிரிக்கெட்டில் மட்டுமின்றி உலக கிரிக்கெட்டிலும் மிகப்பெரிய தாக்கத்தை செலுத்தி வருகிறது. அந்த வகையில், வரும் 2025ஆம் ஆண்டுக்கான ஐபிஎல் சீசனுக்கான வீரர்கள் ஏலம் நேற்று முன்தினமும், நேற்றும் நடைபெற்றது.
சௌதி அரேபியாவின் ஜெட்டா நகரில் நடைபெற்ற கடந்த இரண்டு நாள்களாக நடைபெற்ற இந்த ஐபிஎல் 2025 மெகா ஏலத்தில் (IPL 2025 Mega Auction) 182 வீரர்களை 10 அணிகளும் சேர்ந்து மொத்தம் ரூ.639.15 கோடி கொடுத்து பெற்றிருக்கிறது. இதில் 62 பேர் வெளிநாட்டு வீரர்கள் ஆவார்கள். அதிகபட்சமாக லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணி ரூ.27 கோடி கொடுத்து ரிஷப் பண்டை வாங்கியிருக்கிறது. இதன்மூலம் ரிஷப் பண்ட் தலைமையில் லக்னோ வரும் 2025ஆம் ஆண்டில் களமிறங்கும் என தெரிகிறது.
அதிக தொகைக்கு ஏலம்: டாப் 5 வீரர்கள்
ரிஷப் பண்ட்டை தொடர்ந்து, ஷ்ரேயாஸ் ஐயரை பஞ்சாப் அணி ரூ.26.75 கோடிக்கும், ஷ்ரேயாஸ் ஐயரை கொல்கத்தா அணி ரூ.23.75 கோடிக்கும், அர்ஷ்தீப் சிங் மற்றும் யுஸ்வேந்திர சஹாலை பஞ்சாப் அணி தலா ரூ.18 கோடிக்கும் பெற்றிருக்கிறது. இவர்கள்தான் இந்த ஏலத்தில் அதிக தொகைக்கு ஏலம் போன டாப் 5 வீரர்கள் ஆவார்கள். இவர்கள் அனைவரும் இந்திய வீரர்கள் என்பதும் கவனிக்கத்தக்கது.
பிளான் போட்டு தூக்கிய சிஎஸ்கே
ஆனால், 5 முறை சாம்பியன் பட்டம் வென்ற சிஎஸ்கே அணியோ (Chennai Super Kings) அதிகபட்சமாகவே ரூ.10 கோடியை மட்டுமே ஒரு வீரருக்கு செலவழித்தது. மற்ற அணிகள் அனைத்தும் ரூ.10 கோடியை தாண்டி குறைந்தபட்சம் ஒரு வீரரையாவது எடுத்த நிலையில், சிஎஸ்கே ரூ.10 கோடிக்கு நூர் அகமது மற்றும் ரூ.9.75 கோடிக்கு அஸ்வின் ஆகியோரை எடுத்தது. இதன்மூலமே, சிஎஸ்கே (CSK) ஒரு பெரிய திட்டத்துடன் ஏலத்திற்கு சென்றிருப்பதை தெரிந்துகொள்ள முடிகிறது. அந்த வகையில், சிஎஸ்கே எடுத்துள்ள 25 வீரர்களில் யார் யார் பிளேயிங் லெவனில் இருப்பார்கள் (CSK Probable Playing XI), யார் யார் இம்பாக்ட் பிளேயர் (CSK Impact Player) வரிசையில் இருப்பார்கள் என்பதை இங்கு காணலாம். அதற்கு முதலில் சிஎஸ்கே எடுத்த 25 வீரர்களின் பட்டியலை இங்கு காணலாம்.
சிஎஸ்கேவின் மொத்த ஸ்குாட்
ருதுராஜ் கெய்க்வாட் (கேப்டன்), டெவான் கான்வே, ராகுல் திரிபாதி, ரச்சின் ரவீந்திரா, ஷிவம் துபே, விஜய் சங்கர், ரவீந்திர ஜடேஜா, எம்எஸ் தோனி (விக்கெட் கீப்பர்), ரவிசந்திரன் அஸ்வின், சாம் கரன், ஆண்ட்ரே சித்தார்த், தீபக் ஹூடா, ராமகிருஷ்ண கோஷ், ஷ்ரேயாஸ் கோபால், வான்ஷ் பேடி (விக்கெட் கீப்பர்), நூர் அகமது, மதீஷா பத்திரனா, கலீல் அகமது, அன்சூல் காம்போஜ், முகேஷ் சவுத்ரி, குர்ஜப்னீத் சிங், நாதன் எல்லிஸ், ஜேமி ஓவர்டன், கமலேஷ் நாகர்கோடி
சிஎஸ்கேவின் டாப் ஆர்டர்
இதில் நிச்சயம் ருதுராஜ் கெய்க்வாட் மற்றும் டெவான் கான்வே இருவரும் ஓப்பனர்களாக களமிறங்குவார்கள். 2023ஆம் ஆண்டு சீசனில் இருவரும் ஓப்பனிங் இறங்கி மிரட்டியது அனைவருக்கும் ஞாபகத்தில் இருக்கும். இதில் கான்வேவுக்கு பேக்-அப் ஆப்ஷனாகவும் ரச்சின் ரவீந்திராவை பார்க்கலாம். இல்லையெனில் அவரை 3ஆவது வீரராக இறக்கலாம்.
இருப்பினும், இந்திய சூழலில் ராகுல் திரிபாதி 3ஆவது பேட்டராக சிறப்பாக செயல்பட்டுள்ளார். அவரை இறக்கும்பட்சத்தில் பவர்பிளேவுக்கு பின் பவுண்டரிகள் வருவதில் தடை ஏதும் இருக்காது. 4ஆவது வீரராக கூட ரச்சின் இறக்கப்படலாம். ராகுல் திரிபாதிக்கு பேக்-அப்பாக தீபக் ஹூடா இருக்கிறார்.
சிஎஸ்கேவின் மிடில் ஆர்டர்
அதன்பின் ஷிவம் தூபே, ரவீந்திரா ஜடேஜா, ரவிசந்திரன் அஸ்வின், தோனி என நம்பர் 8 வரை நீண்ட பேட்டிங் ஆர்டருடன் சிஎஸ்கே களமிறங்கலாம். இதில் ஜடேஜா, அஸ்வின், தோனி ஒரு இடத்தில் இறங்காமல் போட்டி சூழலின் அடிப்படையில் மாறி மாறி இறங்குவார்கள் எனலாம். இதனை நாம் கடந்த காலங்களிலும் சிஎஸ்கேவில் பார்த்திருக்கிறோம். தூபே சொதப்பினால் விஜய் சங்கர் பேக் அப் இருக்கிறார்.
பந்துவீச்சாளர்களும், பேக்அப்பும்…
இதில் இரண்டு சுழற்பந்துவீச்சாளர்களும் வந்துவிட்டார்கள். கூடுதலாக நூர் அகமது தேவைப்பட்டால் எடுத்துக்கொள்ளலாம் அல்லது ஜேமி ஓவர்டன், சாம் கரன் ஆகியோரில் ஒருவரை எடுத்துக்கொள்ளலாம். அதேபோல் இந்திய வேகப்பந்துவீச்சாளர்களில் அன்ஷுல் கம்போஜ் மற்றும் கலீல் அகமது ஆகியோர் இறங்குவார்கள். இம்பாக்ட் வீரராக ஒரு இந்திய வீரர் வெளியேற பதிரானா பௌலிங்கில் இறங்குவார். இதுவே சிஎஸ்கேவின் முதல் பிளேயிங் லெவனாக இருக்கும்.
கான்வே, ரச்சின், சாம் கரன்/ ஜேமி ஓவர்டன்/ நூர் அகமது, பதிரானா என நான்கு வெளிநாட்டு வீரர்கள் வந்துவிடுகிறார்கள். சாம் கரன்/ ஜேமி ஓவர்டன் ஆகியோர் 8ஆவது அல்லது 9ஆவது வீரராக வந்தால் ஃபினிஷிங் ரோலில் தோனியை தாண்டியும் பேட்டர்கள் இருக்கிறார்கள். சுழற்பந்துவீச்சுக்கு அஸ்வின், ஜடேஜா இருக்க பதிரானா, அன்சூல் கம்போஜ், கலீல் அகமது என வேகப்பந்துவீச்சாளர்களும் இருப்பார்கள். நூர் அகமது அல்லது வேகப்பந்துவீச்சாளர்களும் வந்துவிடுவார்கள். எனவே இது சிஎஸ்கேவுக்கும், சேப்பாக்கத்திற்கும் ஏற்ற பிளேயிங் லெவனாக இருக்கும். வெளி மைதானங்கள் செல்லும்போது சிற்சில மாற்றங்கள் இருக்கலாம்.
சிஎஸ்கே பிளேயிங் லெவன் (கணிப்பு)
ருதுராஜ் கெய்க்வாட் (கேப்டன்), டெவான் கான்வே, ராகுல் திரிபாதி, ரச்சின் ரவீந்திரா, ஷிவம் தூபே, ரவீந்திரா ஜடேஜா, எம்.எஸ். தோனி (வி.கே), ரவிசந்திரன் அஸ்வின், சாம் கரன்/நூர் அகமது/ஓவர்டன், கலீல் அகமது, அன்ஷுல் கம்போஜ். இம்பாக்ட் வீரர்: பதிரானா.