கரூர்: “மத மோதல்களை ஏற்படுத்த சில தீயசக்திகள் நடவடிக்கை மேற்கொண்டு இருக்கிறார்கள்” என பாஜக மாநில ஒருங்கிணைப்பு குழு அமைப்பாளர் ஹெச்.ராஜா தெரிவித்தார்.
கரூர் தனியார் திருமண மண்டபத்தில் இன்று (நவ.26) பாஜக மாநில பயிலரங்க கூட்டம் நடைபெற்றது. மாநில ஒருங்கிணைப்பு குழு அமைப்பாளர் ஹெச்.ராஜா தலைமை வகித்தார். சிறப்பு அழைப்பாளர்களாக மாநில இணை பொறுப்பாளர் சுதாகர் ரெட்டி, முன்னாள் மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன், பாஜக சட்டமன்ற தலைவர் நயினார் நாகேந்திரன், தேசிய மகளிர் அணி தலைவர் வானதி சீனிவாசன் ஆகியோர் பங்கேற்று சிறப்புரையாற்றினர்.
செய்தியாளர்களிடம் ஹெச்.ராஜா கூறியது: “பாஜகவின் உட்கட்சி தேர்தல் தொடர்பான பயிலரங்கம் நடைபெற்றது. தமிழகத்தில் பல மாவட்டங்களில் ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. குறிப்பாக தென்மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. வெள்ளம் என்றால் சென்னை மட்டும் தான் என மாநில அரசு கவலைப்பட்டு கொண்டு இருந்தது.
ஆனால், கடந்த மாதம் கோவை, மதுரை, திருநெல்வேலி ஆகிய இடங்களில் கடுமையான மழை பாதிப்பு ஏற்பட்டது. ஆகவே, அனைத்து மாவட்டங்களிலும் மழைக்கான எச்சரிக்கையை அடிப்படையாக எடுத்துக்கொண்டு அரசு மக்கள் மீட்பு நடவடிக்கைகள், நிவாரண நடவடிக்கைகளில் ஆயத்தப்படுத்தி கொள்ள வேண்டும். மேலும் உடனடியாக பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண உதவிகள் ஏற்பாடு செய்ய வேண்டும்.
கடந்த 4 நாட்களில் சமூக வலைதளங்களில் இந்து விரோத பதிவுகள் வந்து கொண்டிருப்பது வன்மையாக கண்டிக்கத்தக்கது. கார்த்திகை மாதம் தொடங்கியதில் இருந்து சபரிமலைக்கு மாலையிட்டு பக்தர்கள் செல்லுகிற சமயத்தில் ஐயப்ப சுவாமியை பற்றி கேலியும், கிண்டலுமாக சிலர் பேசி வருகிறார்கள். இதற்கு தமிழக காவல்துறை உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும். மிக மோசமான சூழ்நிலை வந்து கொண்டிருக்கிறது. மத மோதல்களை ஏற்படுத்த சில தீயசக்திகள் நடவடிக்கை மேற்கொண்டு இருக்கிறார்கள். இதற்கு பின்னால் கிறிஸ்தவ மத தலைவர்கள் நிச்சயமாக இருக்கமாட்டார்கள்.
நடிகை கஸ்தூரியை பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டது. ஏன் இவர்களை கைது செய்ய நடவடிக்கை எடுக்கவில்லை. காவல் துறையே இந்து விரோதமாக இருக்கிறதா என்ற சந்தேகம் வருகிறது. அரசாங்கம் இந்து விரோதம் என்பது தெரியும். ஏனென்றால் துணை முதல்வர் சனாதானத்தை மலேரியா கொசு மாதிரி அழிக்க வேண்டும் என பேசிய இந்து விரோதி தான்.
இதுபோன்று மற்ற மத தெய்வங்களை பற்றி பாட்டு போடுவது, நடனம் ஆடுவது போன்ற சூழ்நிலை வந்தால் தமிழகத்தில் மத மோதல்கள் தான் வரும். எனவே உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும். அதானி விவகாரத்துக்கும், பிரதமருக்கும் என்ன சம்பந்தம். வங்கதேச அரசு மின்சாரத்திற்கான தொகையை கொடுக்கவில்லை. அப்போது அமெரிக்கா நிர்பந்தம் செய்தும் அதானி மின் விநியோகத்தை நிறுத்திவிட்டார்.
அதனால் இப்படியொரு குற்றச்சாட்டு வந்துள்ளது. அதானிக்கு எதிராக குற்றச்சாட்டு வந்துள்ளது. இதில் தமிழ்நாடு, ஆந்திரா, சட்டீஸ்கர், ஒடிசா ஆகிய 4 மாநிலங்களில் அதானி சூரிய மின் சக்தி ஒப்பந்தம் வாங்குவதற்காக லஞ்சம் கொடுத்தார். இந்த 4 மாநிலங்களிலும் பாஜக ஆட்சியில்லை. அதனால் பாஜகவிற்கு எந்தவிதமான பங்களிப்பும் இல்லை. இந்த குற்றச்சாட்டுக்கும், எனக்கும் சம்பந்தம் இல்லை என அதானி கூறுகிறார். யாருமே சம்பந்தம் இல்லை என்று கூறும்போது பிரதமர் எதற்கு பதில் அளிக்க வேண்டும்” என்றார்.
பாஜக மாவட்டதலைவர் வி.வி.செந்தில்நாதன் உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர். முன்னதாக, அரசியலமைப்பு தினத்தையொட்டி அம்பேத்கர் உருவப்படத்திற்கு மாலை அணிவித்து சட்ட முகவுரையை அனைவரும் வாசித்தனர்.