மெக்சிகோ, சீனா, கனடா நாட்டிலிருந்து அமெரிக்காவில் இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு அதிக வரி விதிக்க டொனால்டு டிரம்ப் திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
டொனால்டு டிரம்ப் அமெரிக்காவின் அடுத்த அதிபராக வரும் ஜனவரி மாதம் 20-ம் தேதி பதவியேற்க உள்ளார். இந்த நிலையில், மெக்சிகோ மற்றும் கனடா நாடுகளிலிருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு தலா 25 சதவீதமும், சீனாவின் இறக்குமதிக்கு 10 சதவீதமும் கூடுதல் வரி விதிக்க டிரம்ப் திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.
டிரம்ப் தனது தேர்தல் பிரச்சாரங்களில், அமெரிக்கா உடன் இந்தியா மிகப் பெரிய வர்த்தக துஷ்பிரயோகத்தில் ஈடுபட்டு வருவதாக குற்றம்சாட்டிய நிலையில் இந்த வரி விதிப்பு குறித்த தகவல் வெளியாகி உள்ளது.
இதன் மூலம், உற்பத்தி துறைக்கான வேலைவாய்ப்புகளை மீண்டும் அமெரிக்காவுக்கே திரும்ப கொண்டு வரவும், வர்த்தக பேரங்களை அதிகரிக்கவும் டிரம்ப் திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.
அமெரிக்காவிற்கு சுமார் 5.7 பில்லியன் டாலர் மதிப்பிலான பொருட்களை சுங்க வரி இல்லாமல் ஜிஎஸ்பி திட்டத்தின் கீழ் இந்தியா ஏற்றுமதி செய்து மிகப்பெரும் பலனை அடைந்து வந்தது. ஆனால், கடந்த 2019-ம் ஆண்டில் இந்த அந்தஸ்த்தை இந்தியா இழந்தது.
இதனிடையே, அமெரிக்காவுக்கு பெருமளவிலான போதைப் பொருள்கள் குறிப்பாக, செயற்கை ஓபியாய்டு ஃபென்டானில் என்ற போதைப் பொருள் மெக்சிகோ வழியாக அமெரிக்காவுக்கு கடத்தப்படுவதாக புகார் உள்ளது. இதுதொடர்பாக பலமுறை எச்சரித்தும் சீன அரசு நடவடிக்கை எதுவும் எடுக்கவில்லை என்று டிரம்ப் தெரிவித்துள்ளார். எனவே, போதைப்பொருள் கடத்தலை தடுக்கும் வரை சீன இறக்குமதிக்கு கூடுதல் வரி விதிக்க டிரம்ப் திட்டமிட்டுள்ளதை பெர்ன்ஸ்டைன் ஆய்வறிக்கை சுட்டிக்காட்டியுள்ளது.