மும்பை தீவிரவாத தாக்குதலின்போது அஜ்மல் கசாபை கொல்ல நினைத்தேன், ஆனால் அப்போது எனக்கு வயது 9 என உயிர் பிழைத்த பெண் தெரிவித்துள்ளார்.
கடந்த 2008-ம் ஆண்டு நவம்பர் 26-ம் தேதி (26/11) கடல் மார்கமாக மும்பையில் ஊடுருவிய பாகிஸ்தான் தீவிரவாதிகள் 10 பேர் , சத்ரபதி சிவாஜி ரயில் முனையம், ஓபராய் டிரைடன்ட், தாஜ்மகால் பேலஸ் ஓட்டல் உள்ளிட்ட பல பகுதிகளில் தாக்குதல் நடத்தினர். இதையடுத்து, பாதுகாப்புப் படையினர் பதில் தாக்குதல் நடத்தினர். 29-ம் தேதி வரை நீடித்த இந்த மோதலில் வெளிநாட்டினர் மற்றும் 18 வீரர்கள் உட்பட 166 பேர் உயிரிழந்தனர்.
அதேநேரம், பாதுகாப்புப் படையினரின் பதில் தாக்குதலில் 9 தீவிரவாதிகள் உயிரிழந்தனர். ஒரே ஒரு தீவிரவாதி (அஜ்மல் கசாப்) மட்டும் உயிருடன் பிடிபட்டார். அவருக்கு 2012-ம் ஆண்டு நவம்பர் 21-ம் தேதி மரண தண்டனை நிறைவேற்றப்பட்டது. இந்த தாக்குதலில் சுமார் 300 பேர் காயமடைந்தனர்.
இந்நிலையில், மும்பை தீவிரவாத தாக்குதலின் 16-வது நினைவு தினம் நேற்று அனுசரிக்கப்பட்டது. இதையொட்டி, இந்த தாக்குதல் தொடர்பான வழக்கு விசாரணையின்போது தீவிரவாதி அஜ்மல் கசாபை அடையாளம் காட்டிய முக்கிய சாட்சியும் காயமடைந்தவருமான தேவிகா ரொட்டவான் (25) பிடிஐ செய்தி நிறுவனத்திடம் தனது அனுபவத்தை பகிர்ந்து கொண்டார். அவர் கூறியதாவது:
மும்பை தாக்குதல் நடந்தபோது எனக்கு வயது 9. 16 ஆண்டுகள் கடந்தாலும் என்ன நடந்தது என்பது எனக்கு நினைவு உள்ளது. 2008 நவம்பர் 26-ம் தேதி நானும் என் தந்தையும் புனே நகரில் உள்ள என் மூத்த சகோதரனை பார்ப்பதற்காக ரயிலில் செல்ல திட்டமிட்டு, சத்ரபதி சிவாஜி மகராஜ் ரயில் முனையம் சென்றோம். அப்போது வெடிகுண்டு வெடித்தது. அதத் தொடர்ந்து துப்பாக்கிச்சூடு நடந்தது. இதில் ஏராளமானோர் காயமடைந்தனர்.
என்னுடைய காலிலும் துப்பாக்கி குண்டு பாய்ந்து படுகாயம் அடைந்தேன். அறுவை சிகிச்சை செய்து காலில் இருந்த குண்டை அகற்றினர். ஆனாலும் இன்னமும் எனக்கு கால் வலி உள்ளது. காயத்திலிருந்து குணமடைய ஒரு மாதத்துக்கு மேல் ஆனது. அதன் பிறகு மும்பை குற்றப் பிரிவு போலீஸார் எங்கள் குடும்பத்தினரை அணுகி, மும்பை தாக்குதல் தீவிரவாதியை அடையாளம் காட்டுமாறு கோரினர். நானும் என் தந்தையும் தீவிரவாதிகளை நன்றாக பார்த்ததால் அடையாளம் காட்ட ஒப்புக்கொண்டோம். இதன்படி அஜ்மல் கசாபை அடையாளம் காட்டினோம்.
தாக்குதல் நடந்தபோதே அஜ்மல் கசாபை கொல்ல நினைத்தேன். ஆனால் அப்போது எனக்கு வயது 9. எனவே, அஜ்மலை நீதிமன்றத்தில் அடையாளம் காட்டியதைத் தவிர வேறு எதுவும் என்னால் செய்ய முடியவில்லை. தீவிரவாதத்தை ஒழிக்க வேண்டும். சமுதாயத்தில் நடைபெறும் தவறுகளை சுட்டிக்காட்ட பொதுமக்கள் முன்வர வேண்டும். தீவிரவாதம் பாகிஸ்தானில் இருந்து தொடங்குகிறது. அதைத் தடுக்க வேண்டும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.
இதனிடையே, மும்பையின் பாந்த்ரா கிழக்கு பகுதியில் வாடகை வீட்டில் வசித்து வரும் தேவிகா, தனக்கு இடபிள்யூஎஸ் குடியிருப்பு ஒதுக்கீடு திட்டத்தின் கீழ் வீடு ஒதுக்க வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளார். இதுகுறித்து பரிசீலிக்குமாறு மாநில அரசுக்கு மும்பை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மும்பை தாக்குதலில் காயமடைந்தவர்களுக்கு முதல்கட்டமாக வழங்கப்பட்ட தலா ரூ.3.26 லட்சம் இழப்பீட்டை தேவிகா ஏற்கெனவே பெற்றுள்ளார். மேலும் இவருடைய மருத்துவ சிகிச்சைக்காக அரசு ரூ.10 லட்சம் வழங்கியது குறிப்பிடத்தக்கது.