'நீதிபதியின் பணி கத்தி முனையில் நடப்பதைப் போன்றது' – தலைமை நீதிபதி சஞ்சீவ் கண்ணா

புதுடெல்லி,

நீதித்துறையின் பணி ஜனநாயகத்துடன் நேரடியாக தொடர்புடையது என சுப்ரீம் கோர்ட்டு தலைமை நீதிபதி சஞ்சீவ் கண்ணா தெரிவித்துள்ளார். இது தொடர்பாக 75-வது அரசியலமைப்பு தினத்தை முன்னிட்டு டெல்லியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் அவர் பேசியதாவது;-

“நீதிபதியின் பணி என்பது கத்தி முனையில் நடப்பதைப் போன்றது. ஒவ்வொரு தீர்ப்பிலும் உரிமையும், கடமையும் சமமாக இருக்க வேண்டும். வழக்கில் வெற்றி பெற்றவர்கள் கொண்டாட்டத்தில் திளைக்கும் நேரத்தில், தோல்வி அடைந்தவர்களிடம் இருந்து விமர்சனங்கள் வருவதும் வழக்கமானதுதான்.

இந்தியாவின் அரசியலமைப்பு நீதிமன்றங்கள் உலகிலேயே மிகவும் சக்திவாய்ந்தவை என்று சிலர் கருதுகின்றனர். அதே சமயம், சிலர் நாங்கள் எங்களுடைய அரசியலமைப்பு கடமையில் இருந்து விலகிவிட்டதாகவும், மக்களின் தீர்ப்புக்கு எதிராக இருப்பதாகவும் கருதுகின்றனர்.

நீதித்துறை அனைத்து நிலைகளிலும் செயல்படுகிறது. அரசியலமைப்பு கடமைக்கு நாங்கள் கட்டுப்பட்டுள்ளோம். நாங்கள் வெளிப்படையாக இருக்கிறோம். பொது மக்களின் நலன் மற்றும் உரிமைகளை பாதுகாப்பதில்தான் எங்கள் கவனம் உள்ளது. நாங்களும் பொதுமக்களுக்கு பதில் சொல்ல வேண்டியவர்கள்தான். எங்கள் பொறுப்புகளை பற்றி நாங்கள் அறிந்திருக்கிறோம்.

நீதித்துறை என்பது அரசியல் நிர்வாகத்தின் உறுதியான தூண். இரண்டும் ஒன்றை ஒன்று சார்ந்துள்ளது, அதே சமயம் சுதந்திரமாகவும் செயல்படுகிறது. நீதித்துறையின் சுதந்திரம் என்பது அரசியலமைப்பு, அடிப்படை உரிமைகள் மற்றும் அரசியல் நிர்வாகத்தை இணைக்கும் பாலமாகும்.”

இவ்வாறு தலைமை நீதிபதி சஞ்சீவ் கண்ணா தெரிவித்தார்.


Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.