சென்னை: வங்கக் கடலில் நிலை கொண்டுள்ள ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் அடுத்த 12 மணி நேரத்தில் புயலாக மாறும் என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மிக கனமழை எச்சரிக்கை காரணமாக, தமிழகத்தின் பல மாவட்டங்களுக்கு இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
தென்கிழக்கு வங்கக் கடல் பகுதியில் மையம் கொண்டுள்ள ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் மணிக்கு 13 கி.மீ வேகத்தில் நகர்கிறது என தெரிவிக்கப்பட்டுள்ளது. நாகையில் இருந்து 400 கி.மீ தொலைவிலும், புதுச்சேரியில் இருந்து 510 கி.மீ தொலைவிலும், சென்னைக்கு தெற்கு தென்கிழக்கே 590 கி.மீ தொலைவிலும் நிலைகொண்டுள்ளது.
தென்மேற்கு வங்கக் கடல் பகுதியில் நேற்று முன்தினம் நிலை கொண்டிருந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம், நேற்று காலை ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்றது. இந்நிலையில், இது அடுத்த 12 மணி நேரங்களில் புயலாக மாறும் என இன்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக தமிழக கடலோர பகுதிகளில் கனமழை தொடரும். சென்னை, கடலூர் மற்றும் புதுச்சேரி உள்ளிட்ட பகுதிகளில் கடல் சீற்றத்துடன் காணப்படுகிறது என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் இன்று அநேக இடங்களிலும், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். கடலூர், மயிலாடுதுறை மாவட்டங்கள் மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் அதிகனமழையும் (ரெட் அலர்ட்), ஒரு சில இடங்களில் கன முதல் மிக கனமழை பெய்யக்கூடும்.
சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம், அரியலூர், திருவாரூர், நாகப்பட்டினம், தஞ்சாவூர், புதுக்கோட்டை மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரியில் ஓரிரு இடங்களில் கன முதல் மிக கனமழையும், ராணிப்பேட்டை, திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, பெரம்பலூர், திருச்சி, சிவகங்கை மற்றும் ராமநாதபுரம் மாவட்டங்களின் ஓரிரு இடங்களில் கனமழையும் பெய்ய வாய்ப்புள்ளது என வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது.
மழை விடுமுறை: கனமழை எச்சரிக்கையை அடுத்து சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், கொடைக்கானல், அரியலூர் மாவட்டங்களில் பள்ளிகளுக்கு மட்டும் இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. திருவள்ளூர், விழுப்புரம், திருவாரூர், கடலூர், மயிலாடுதுறை, தஞ்சாவூர், நாகை, புதுச்சேரி மற்றும் காரைக்காலில் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல இன்று (நவ.27) சென்னை பல்கலைக்கழக தேர்வுகள் ஒத்திவைக்கப்பட்டுள்ளன.
சென்னையில் இன்று வானம் பொதுவாக மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய கன முதல் மிக கனமழை பெய்யக்கூடும். இன்றும், நாளையும் தென்மேற்கு வங்கக் கடல் மற்றும் அதனை ஒட்டிய மத்திய மேற்கு வங்கக் கடல் பகுதிகளில் காற்றின் வேகம் மணிக்கு 60 முதல் 80 கிமீ வேகத்தில் அதிகபட்சமாக 90 கிமீ வேகத்தில் வீசக் கூடும். எனவே, இப்பகுதிகளுக்கு செல்ல வேண்டாமெனவும், ஆழ்கடலில் இருக்கும் மீனவர்கள் உடனடியாக கரைக்கு திரும்பவும் அறிவுறுத்தப்படுகிறார்கள்.