வட கிழக்கு பருவ மழை ஆரம்பிச்சிடுச்சு. இந்த காலகட்டத்துலதான் பறவைகள் ‘வலசை போதல்’ நிகழ ஆரம்பிக்கும். இந்த மழை மாதங்கள்ல சில பறவைகள் தாம் வசிக்கிற அதே நாட்டுக்குள்ள ஓரிடத்துல இருந்து ஓரிடத்துக்கு இடம் பெயரும். பல பறவைகள் கண்டம் விட்டு கண்டமே இடம் பெயரும். இந்த நிகழ்வைத்தான் நாம ‘வலசை போதல்’னு சொல்றோம்.
‘இந்த மழைக்காலத்துல ஏங்க பறவைகள் கண்டம் விட்டு கண்டம் தாண்டி வரணும், நிம்மதியா அதுங்க நாட்டுலேயே இருக்கலாமே’ அப்படிங்கிற கேள்வி நமக்கெல்லாம் வருது இல்லியா..? இதையே சுற்றுச்சூழல், வனவிலங்குகள் தொடர்பான ஏராளமான புத்தகங்களை எழுதியுள்ள எழுத்தாளரும் சுற்றுச்சூழல் பரப்புரையாளருமான கோவை சதாசிவம் அவர்களிடம் கேட்டோம்.
ஏன் இந்த நேரத்துல வெளிநாட்டுப்பறவைகள் இந்தியாவுக்கு வருது..?
”நம்ம நாட்ல வடகிழக்கு பருவ மழை ஆரம்பிக்கிற இதே காலகட்டத்துல ஐரோப்பிய நாடுகள்ல பனிப்பொழிவு அதிகமா இருக்கும். நகரமே பனி மூடி இருக்கும். ஏரிகள்ல இருக்கிற நீரெல்லாம் பனியா உறைஞ்சு போயிருக்கும். விளைவு, அந்த ஏரிகள்ல வசிக்கிற உயிரினங்களை உணவுக்காக நம்பியிருந்த பறவைகள், இந்தியா மாதிரி வெப்ப மண்டல நாடுகளுக்கு வர ஆரம்பிக்கும். நம்ம நாட்ல இந்த சீசன்ல நீர் நிலைகள் நிரம்பியிருக்கும். அதனால, நீர்ல வாழுற உயிரினங்கள் அதிகமாகும். உள்நாட்டுப் பறவைகளும் வலசை வந்த வெளிநாட்டுப் பறவைகளும் அந்த உயிரினங்களைச் சாப்பிட்டு உயிர் வாழும். வட கிழக்கு பருவ மழைக்காலத்துல வெளிநாட்டுப் பறவைகள் இந்தியாவுக்கு வர்றதுக்குக் காரணம் இதுதான்.
வலசை போதலுக்கு முன்னாடி, அதாவது குளிர்காலம் தொடங்குறதுக்கு முன்னாடி, பறவைகள் நிறைய சாப்பிட்டு உடம்புல கொழுப்புச்சத்தை அதிகமாக்கிக்கும். அது எதுக்குத் தெரியுமா? இப்படி சேர்த்துக்கிட்ட கொழுப்பை எரிபொருளா பயன்படுத்திதான் நாடு விட்டு நாடு, கண்டம் விட்டு கண்டம் பறவைகள் பறந்து வருது.
உலகிலேயே நீண்ட தூரம் வலசை போற பறவை..!
வரித்தலை வாத்துதான் உலகத்திலேயே மிக நீண்ட தூரம் வலசை வர்ற பறவை. சைபீரியாவுல இருந்து 14 ஆயிரம் கி.மீட்டர் கடந்து மங்கோலியா, திபெத், இமய மலை சிகரத்தையும் கடந்து தமிழ்நாட்ல திருப்பூர் வரைக்கும் அதுங்க வர்றதை பறவை ஆர்வலர்கள் படமெடுத்து ஆவணப்படுத்தியிருக்காங்க. இவ்ளோ தூரம், அந்தப் பறவை வலசை வர்றதுக்கு காரணம் உணவுக்காகத்தான்.
வலசை வர்ற பறவைகள் இனப்பெருக்கம் செய்யுமா?
மற்ற நாடுகளுக்கு வலசை போகிற பறவைகள் அந்த நாடுகள்ல இனப்பெருக்கம் செய்யுமான்னு கேட்டீங்கன்னா, செய்யவே செய்யாது. இரை தேடி வலசை வர்ற வெளிநாட்டுப் பறவைகளை பலரும் இணை தேடி இனப்பெருக்கம் செய்ய வருதுன்னு நம்பிட்டிருக்காங்க. ஆனா, அது உண்மை கிடையாது. வலசை வர்ற பிற நாடுகள்ல பறவைகள் மறந்தும்கூட கூடு கட்டி முட்டையிட்டு குஞ்சுப் பொரிக்காது. கிட்டத்தட்ட 3 மாசம் வலசை வந்த நாட்ல இருக்கிற வெளிநாடுப் பறவைகள், பிறகு, அது பிறந்த ஐரோப்பிய நாடுகளுக்கே திரும்பிப் போயிடும். அந்த நேரத்துல ஐரோப்பிய நாடுகள்ல இளவேனிற் காலமா இருக்கும். தங்களோட நாட்ல, அந்த இளவேனிற் காலத்துலதான் அந்தப் பறவைகள் இனப்பெருக்கம் செய்யும்.
பறவைகளை அடையாளம் தெரிஞ்சிக்கணும்…
வலசை வர்ற சில பறவைகள் இந்தியாவுல இனப்பெருக்கம் செய்யுதேன்னு சிலர் கேட்கலாம். அந்தப் பறவைகள் நம்ம நாட்டுப்பறவைகள். அவை உள்நாட்டுக்குள்ளேயே வலசை வர்ற பறவைகள். ஓர் உதாரணம் சொல்லணும்னா, கூழைக்கடா. அதனாலதான் அவை இங்கேயே இனப்பெருக்கம் செய்யுது.
மஞ்சள் மூக்கு நாரை, அரிவாள் மூக்கன், கூழைக்கடா, வர்ண நாரை, நாமக்கோழி, நீலத்தாடைக்கோழி, முக்குளிப்பான், கரண்டி வாயன் இவையெல்லாம்கூட நம்ம நாட்டுப் பறவைகள்தன். இவற்றை வெளிநாட்டுப்பறவைகள்னு சிலர் நினைச்சிட்டிருக்காங்க. செங்கால் நாரை வெளிநாட்டுப்பறவை. அது நம்ம நாட்ல கூடு கட்டி இனப்பெருக்கம் செய்யாது. அதை நம்ம நாட்டுப் பறவை சிலர் நம்பிட்டிருக்காங்க. எவை உள்நாட்டுப்பறவைகள், எவை வெளிநாட்டு பறவைகள்னு நமக்கெல்லாம் அடையாளம் தெரிஞ்சிருக்க வேண்டியது மிக மிக அவசியம்னு நான் நினைக்கிறேன்.
தொலைந்து போகாதா?
பறவை ஓர் ஆச்சரியமான உயிரினம். ஆக்ஸிஜன் குறைவா இருக்கிற இமயமலையையேத் தாண்டி இந்தியாவுக்குள்ள வர்ற உயிரினம் பறவைகள். எந்த வழியில நம்ம நாட்டு வந்துச்சோ, அதே வழியில மறுபடியும் அதுங்களோட தாய் நாட்டுக்குத் திரும்பிப் போயிடும். வலசை போகும் பறவைகள் ‘V’ வடிவத்துல ஒண்ணா பறந்துப் போறதை பார்த்திருக்கீங்களா? அப்படிப் போறப்போ ஏதாவது ஒரு பறவை வழி தவறிப்போனாலும் சில பறவைகள் ஒண்ணா பறந்துபோய், அதை கூட்டத்துக்குள்ள கூட்டிட்டு வந்திடும். அதனால, எந்தப் பறவையும் தொலைந்து போகாது.
வானத்துலேயே வட்டமிட்டிருக்கிறதுக்கு இதான் காரணமா?
உலகத்தோட தட்ப வெப்பநிலை பறவைகளுக்கு மிக நுட்பமா தெரியும். ஆனா, அதுல இப்போ ஒரு சிக்கல் நிகழ்ந்திட்டிருக்கு. ஒருகாலத்துல பருவ மழை பெய்தது. அதனால, பறவைகளால தட்ப வெப்ப நிலையை துல்லியமா தெரிஞ்சி இருந்துச்சிங்க. பருவ மழை புயல் மழையா மாறிப்போன இந்தக் காலக்கட்டத்துல, அப்படிப்பட்ட பகுதிகளுக்கு வலசை வர்ற பறவைகள் கீழே இறங்க முடியாம பரிதாபமா வானத்துலயே வட்டமிட்டுக்கிட்டிருக்கும்.
பறவைகள் குழம்பிப்போகும். ஏன்னா…
வலசை வர்ற பறவைகளை சிலர் வேட்டையாடிடுவாங்க. அது மிகப்பெரிய பாவம்னுதான் சொல்வேன். ஏன்னா, ஓரு நாட்ல இருந்து இன்னொரு நாட்டுக்கு வர்றப்போ பறவைகளோட எண்ணிக்கை வேட்டையாடிகளால குறையுறப்போ அந்தப் பறவைகள் குழம்பிப் போயிடும். ஆனா, அதுக்காகவும் பறவைகள் தங்களோட பயணத்தை நிறுத்திக்காது. உள்நாடு, வெளிநாடு நமக்குத்தான்… பறவைகளுக்கு உலகமே ஒரு நாடுதான்” என்கிறார் கோவை சதாசிவம்.
நீங்கள் விரும்பி படித்த தொடர்கள், இப்போது ஆடியோ வடிவில்… புத்தம் புதிய விகடன் ப்ளே… உங்கள் அன்றாட பணிகளை கவனித்துக் கொண்டே ரசித்து கேட்க, உடனே இன்ஸ்டால் செய்யுங்கள்…