உலக செஸ் சாம்பியன்ஷிப்: 2-வது சுற்றில் குகேஷ் டிரா

சிங்கப்பூர்,

இந்திய கிராண்ட்மாஸ்டர் குகேஷ் – நடப்பு சாம்பியன் சீனாவின் டிங் லிரென் இடையிலான உலக செஸ் சாம்பியன்ஷிப் போட்டி சிங்கப்பூரில் நடந்து வருகிறது. இது 14 சுற்றுகளை கொண்டது. வெற்றிக்கு ஒரு புள்ளியும், டிராவுக்கு அரைபுள்ளியும் வழங்கப்படும். முதலில் 7½ புள்ளியை எட்டும் வீரர் உலக சாம்பியன் பட்டத்தை சொந்தமாக்குவார். தமிழகத்தை சேர்ந்த குகேஷ் முதல் சுற்றில் 42-வது நகர்த்தலில் தோல்வியை தழுவினார்.

இந்த நிலையில் நேற்று நடந்த 2-வது சுற்றில் குகேஷ் கருப்புநிற காய்களுடன் விளையாடினார். இருவரும் ராஜாவுக்கு முன் உள்ள சிப்பாயை இரண்டு கட்டம் நகர்த்தி சவாலை தொடங்கினர். 12-வது நகர்த்தலில் பரஸ்பரமாக ராணியை வெட்டு கொடுத்தனர். அதன் பிறகு தடுப்பாட்ட யுக்தியில் கவனம் செலுத்தியதால், 23-வது நகர்த்தலில் இருவரும் டிராவில் முடிக்க ஒப்புக் கொண்டனர். 2-வது சுற்று முடிவில் டிங் லிரென் 1½-½ என்ற புள்ளி கணக்கில் முன்னணியில் உள்ளார்.

18 வயதான குகேஷ் கூறுகையில், ‘இன்றைய நாள் எனக்கு நல்ல விதமாக அமைந்தது. இது போன்று மேலும் பல நல்ல நாட்கள் வரும் என்று நம்புகிறேன்’ என்று குறிப்பிட்டார். இன்று பிற்பகல் 2.30 மணிக்கு தொடங்கி நடக்கும் 3-வது சுற்றில் குகேஷ் வெள்ளைநிற காய்களுடன் ஆடுகிறார்.


Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.