மகாராஷ்டிராவில் நடந்த சட்டமன்றத் தேர்தலில் பா.ஜ.க தலைமையிலான மஹாயுதி கூட்டணி அமோக வெற்றி பெற்றுள்ளது. ஆனால் தற்போது முதல்வராக இருக்கும் ஏக்நாத் ஷிண்டே முதல்வர் பதவியை விட்டுக்கொடுக்க மறுத்து வருகிறார். பா.ஜ.கவோ தேவேந்திர பட்னாவிஸை முதல்வராக்க வேண்டும் என்பதில் தீவிரமாக இருக்கிறது. இவ்விவகாரத்தில் ஒருமித்த கருத்து எட்டப்படாத காரணத்தால் புதிய அரசு பதவியேற்பதில் தாமதம் ஏற்பட்டுள்ளது. தொடர்ந்து பா.ஜ.கவும், சிவசேனாவும் முதல்வர் பதவி தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றன. ஆனால் மகாராஷ்டிரா சட்டமன்றத்தின் பதவிக்காலம் நேற்றே முடிந்துவிட்டது. புதிய சட்டமன்றம் இன்னும் அமைக்கப்படவில்லை. இதையடுத்து மகாராஷ்டிராவில் ஜனாதிபதி ஆட்சியை அமல்படுத்தவேண்டும் என்று சிவசேனா(உத்தவ்) கோரிக்கை விடுத்துள்ளது.
இது குறித்து அக்கட்சி எம்.பி.சஞ்சய் ராவுத் அளித்த பேட்டியில், ”மஹாயுதி கூட்டணி அமோக வெற்றி பெற்றும் ஆட்சியமைக்க முடியாத நிலையில் இருக்கின்றது. புதிய முதல்வர் குறித்தோ அல்லது ஆட்சியமைப்பது குறித்தோ இன்னும் முடிவு செய்யாமல் இருக்கின்றனர். ஆட்சியமைக்க முடியாவிட்டால் ஜனாதிபதி ஆட்சியை அமல்படுத்தவேண்டும். மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தில் மோசடி நடப்பதாக நாங்கள் காங்கிரஸ் ஆட்சியில் இருந்தபோதே பிரச்னையை கிளப்பி இருக்கிறோம். பா.ஜ.கவும் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரம் குறித்து கேள்வி எழுப்பி இருந்தது. இது தொடர்பாக பிரதமர் நரேந்திர மோடியின் பழைய வீடியோக்களை கேட்டுப்பாருங்கள்.
மின்னணு வாக்குப்பதிவு இயந்திரம் மோசடி என்று குறிப்பிட்டார். இப்போதும் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தை நீக்கிவிட்டு ஓட்டுச்சீட்டு முறையில் தேர்தல் நடத்தினால் 25 தொகுதியில் கூட பா.ஜ.கவால் வெற்றி பெற முடியாது. மீண்டும் ஓட்டுச்சீட்டு முறையை கொண்டு வரவேண்டும். அதில் என்ன முடிவு கிடைத்தாலும் நாங்கள் ஏற்றுக்கொள்கிறோம்” என்று தெரிவித்தார்.
புதிய அரசு அமைப்பதில் தாமதம் ஏற்படுவது குறித்து பா.ஜ.க தலைவர்களிடம் இது குறித்து விசாரித்தபோது, `முதல்வர் பதவி குறித்து முடிவு செய்யப்பட்டுவிட்டது. இப்போது இலாகா ஒதுக்கீடு குறித்து பேச்சுவார்த்தை நடந்து வருகிறது. அதனால்தான் ஆட்சியமைப்பதில் தாமதம் ஏற்பட்டுள்ளது. இதில் உடன்பாடு எட்டப்பட்டுவிட்டால் உடனே புதிய அரசு பதவியேற்கும்” என்று தெரிவித்தனர்.
இது குறித்து சட்டநிபுணர்களிடம் பேசியபோது, “சட்டமன்றத்தின் பதவிக்காலம் முடிவதற்குள் புதிய அரசு பதவியேற்கவேண்டும் என்று அரசியலமைப்பு சொல்லவில்லை. அதோடு சட்டமன்றத்தின் பதவிக்காலம் முடியும் முன்பு ஆட்சியமைக்கப்படாவிட்டால் தானாக ஜனாதிபதி ஆட்சியும் அமல்படுத்தப்படும் என்ற விதியும் இல்லை” என்று தெரிவித்தனர். இதற்கு முந்தைய காலக்கட்டத்தில் சட்டமன்றத்தின் பதவிக்காலம் முடிந்த பிறகு ஆட்சியமைத்த சம்பவங்கள் நடந்திருப்பதை சுட்டிக்காட்டினர்.