மகாராஷ்டிரா சட்டமன்றத் தேர்தலில் உத்தவ் தாக்கரே தலைமையிலான சிவசேனாவிற்கு வெறும் 12 இடங்கள் மட்டுமே கிடைத்திருக்கிறது. இத்தேர்தல் எதிர்க்கட்சிகளுக்கு மிகப்பெரிய பின்னடைவாக அமைந்துள்ளது. இத்தேர்தலில் உத்தவ் தாக்கரே கட்சிக்கு கிடைத்த எம்.எல்.ஏ.க்கள் தங்களது அணிக்கு வருவார்கள் என்று ஏக்நாத் ஷிண்டே ஆதரவாளர்கள் தெரிவித்துள்ளனர். இது உத்தவ் தாக்கரேயிக்கு அச்சுறுத்தலை ஏற்படுத்தி இருக்கிறது. எனவே தனது எம்.எல்.ஏ.க்களிடம், `நாங்கள் கட்சி மாறமாட்டோம்’ என்று உத்தவ் தாக்கரே எழுதி வாங்கிக்கொண்டுள்ளார். தேர்தலில் தோல்வி அடைந்ததற்கு மின்னணு வாக்குப்பதிவு இயந்திரம் தான் காரணம் என்று உத்தவ் தாக்கரே கட்சியினர் குற்றம்சாட்டியுள்ளனர்.
இன்று சரத் பவார் மற்றும் உத்தவ் தாக்கரே ஆகியோர் தங்களது கட்சி சார்பாக தேர்தலில் போட்டியிட்டு தோல்வி அடைந்த வேட்பாளர்களை அழைத்து தோல்விக்கான காரணம் குறித்து விவாதித்தனர். இக்கூட்டத்தில் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்திற்கு எதிராக தேசிய அளவில் போராட்டம் நடத்த முடிவு செய்யப்பட்டது. அதோடு வாக்குச்சீட்டு முறையை மீண்டும் கொண்டு வர உத்தரவிடக் கோரி கோர்ட்டில் வழக்கு தொடரவும் இக்கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது. இது குறித்து தேவேந்திர பட்னாவிஸ் கூறுகையில், ”ஜார்க்கண்டில் காங்கிரஸ் கூட்டணி வெற்றி பெற்றதால் அங்கு நியாயமாக நடந்ததாக கூறுகின்றனர். ஆனால் தேர்தல் தோல்வியால் மகாராஷ்டிராவில் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தில் மோசடி செய்துவிட்டதாக கூறுகின்றனர்” என்றார். உத்தவ் தாக்கரே தொடர்ந்து தேவேந்திர பட்னாவிஸை விமர்சனம் செய்து வருகிறார்.
இது பா.ஜ.கவிற்கு கடும் கோபத்தை உண்டாக்கி இருக்கிறது. இது குறித்து கருத்து தெரிவித்துள்ள மாநில பா.ஜ.க தலைவர் சந்திரசேகர் பவன்குலே,“உத்தவ் தாக்கரே தொடர்ந்து தேவேந்திர பட்னாவிஸை விமர்சனம் செய்து கொண்டிருந்தால் அவரிடம் இருக்கும் 20 எம்.எல்.ஏ.க்களில் 18 பேர் அவரை கைவிட்டுவிடுவார்கள். அவரிடம் இரண்டு எம்.எல்.ஏ.க்கள் மட்டும்தான் இருப்பார்கள். இந்துத்துவா பாதையில் இருந்து விலகிய பிறகுதான் உத்தவ் தாக்கரேயின் வீழ்ச்சி ஆரம்பமானது.
காங்கிரஸ் கட்சியுடன் தொடர்ந்து கூட்டணி வைத்தால் அவரது நிலைமை மேலும் மோசமடையும். காங்கிரஸ் கட்சியை விட மோசமான அரசியல்வாதியாக மாறும் நிலை ஏற்படும். உத்தவ் தாக்கரே ஒவ்வொரு முறையும் தேவேந்திர பட்னாவிஸை விமர்சனம் செய்யும்போதும் பட்னாவிஸ் வலுவடைந்து கொண்டே செல்கிறார். சூரியனை போல் பிரகாசிக்கிறார். தேவேந்திர பட்னாவிஸை உத்தவ் தாக்கரே விமர்சனம் செய்வது அவரது கட்சில் எம்.எல்.ஏ.க்களுக்கே பிடிக்கவில்லை” என்று தெரிவித்தார்.