மாமல்லபுரம் சாலை விபத்தில் உயிரிழந்த 5 பெண்களின் குடும்பத்தினருக்கு தலா ரூ.2 லட்சம் நிதியுதவி

சென்னை: பழைய மாமல்லபுரம் சாலையில் நிகழ்ந்த சாலை விபத்தில் உயிரிழந்த 5 பெண்களின் குடும்பத்தினருக்கு தலா ரூ.2 லட்சம் நிவாரண நிதி வழங்கி முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: “செங்கல்பட்டு மாவட்டம், திருப்போரூர் வட்டம், பழைய மாமால்லபுரம் சாலை, பையனூர் மதுரா பண்டிதமேடு சந்திப்பில் இன்று (27.11.2024) பிற்பகல் 2.20 மணியளவில் திருப்போரூர் வட்டம், பையனூர் கிராமம், பாளையத்தம்மன் கோவில் தெருவைச் சேர்ந்த ஆந்தாயி (வயது 71) க/பெ.முத்தன், லோகம்மாள் (வயது 56) க/பெ.சின்ராஜ், யசோதா (வயது 54) க/பெ.கோவிந்தசாமி, விஜயா (வயது 53) க/பெ.சாமிநாதன் மற்றும் கௌரி (வயது 52) க/பெ.குப்பன் ஆகிய 5 பெண்கள் சாலையோரத்தில் மாடு மேய்த்துக் கொண்டிருந்தனர்.

அப்போது திருப்போரூரிலிருந்து மாமல்லபுரம் நோக்கி சென்று கொண்டிருந்த கார் ஒன்று எதிர்பாராதவிதமாக மோதிய விபத்தில் மேற்குறிப்பிட்ட 5 பெண்களும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர் என்ற துயரகரமான செய்தியை அறிந்து மிகுந்த அதிர்ச்சியும் வேதனையும் அடைந்தேன். மேலும், இவ்விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கும் அவர்களது உறவினர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும் ஆறுதலையும் தெரிவித்துக்கொள்வதோடு, உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தலா இரண்டு இலட்சம் ரூபாய் முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து வழங்கிடவும் உத்தரவிட்டுள்ளேன்” என தெரிவித்துள்ளார்.

நடந்தது என்ன? – செங்கல்பட்டு மாவட்டம் மாமல்லபுரம் அடுத்த பண்டிதமேடு என்ற பகுதியில் ஏராளமான கழுவேலி இடங்கள் அமைந்துள்ளன. இங்கு, அப்பகுதியை சேர்ந்த பொதுமக்கள் மேய்ச்சலுக்காக தங்களது கால்நடைகளை அழைத்து வருவது வழக்கம். இந்நிலையில், இன்று பிற்பகல் அப்பகுதியை சேர்ந்த பெண்கள் சிலர் கால்நடைகளை அழைத்துக் கொண்டு பழைய மாமல்லபுரம் (ஒஎம்ஆர்) சாலையோரம் நின்றிருந்ததாக தெரிகிறது.

அப்போது, திருப்போரூரில் இருந்து மாமல்லபுரம் நோக்கி சென்ற கார் ஒன்று ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து சாலையோரம் இருந்த பெண்கள் மீது மோதியதாக கூறப்படுகிறது. இதில், காயமடைந்த அப்பகுதியை சேர்ந்த யசோதாம்மாள், லோகம்மால், கவுரி, விஜயா, ஆனந்தாயி ஆகிய 5 பெண்கள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். தகவலறிந்த மாமல்லபுரம் போலிஸார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்ற மீட்புப் பணிகளை மேற்கொண்டனர்.

இந்த சாலையில் வாகனங்கள் அதிவேகமாக இயக்கப்படுத்துவதாகவும், இதனால் அடிக்கடி உயிரிழப்பு ஏற்படுவதாகவும் கூறி அப்பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள் ஓஎம்ஆர் சாலையில் மறியலில் ஈடுபட்டனர். அவர்களிடம், போலிஸார் சமாதான பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். மறியல் காரணமாக ஓஎம்ஆர் சாலையில் சுமார் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.