புதுடெல்லி: ராஜஸ்தானின் புகழ் வாய்ந்த அஜ்மீர் தர்கா, இந்துக்களின் சிவன் கோயிலை இடித்து கட்டப்பட்டதாக வழக்கு தொடுக்கப்பட்டுள்ளது. இந்த வழக்கை விசாரித்த அஜ்மீர் சிவில் ஷெஷன்ஸ் நீதிமன்றம், சம்பந்தப்பட்ட மூன்று தரப்புக்கும் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
அஜ்மீரில் சூபி ஞானியான காஜா மொய்னுத்தீன் சிஷ்தியின் பெயரில் ஒரு பழம்பெரும் தர்கா அமைந்துள்ளது. இங்கு நாடு முழுவதிலும் இருந்து முஸ்லிம்கள் பெருமளவில் வருகை புரிவது வழக்கம். இந்த தர்காவானது அங்கிருந்த சிவன் கோயிலை இடித்து கட்டப்பட்டுள்ளதாகப் புகார் உள்ளது. ராஜஸ்தானின் முதல்வராக காங்கிரஸின் அசோக் கெல்லாட் இருந்தபோது இந்த புகார் அளிக்கப்பட்டது. இதை இந்துத்துவா அமைப்பான மஹராணா பிரதாப் சிங் சேனாவின் அப்போதைய தேசியத் தலைவரான ராஜ்வர்தன் சிங் பார்மர் கடந்த மே, 2022-ல் அளித்திருந்தார். அதில் ராஜ்வர்தன் சிங், தர்காவினுள் களஆய்வு நடத்தப்பட வேண்டும் எனவும் வலியுறுத்தி இருந்தார்.
இந்த நிலையில், அஜ்மீர் நீதிமன்ற சிவில் செஷன்ஸ் சிவில் நீதிமன்றத்தில் ஒரு வழக்கு தொடுக்கப்பட்டுள்ளது. இதற்கான மனுவை மற்றொரு இந்துத்துவா அமைப்பான இந்து சேனாவின் தலைவர் விஷ்ணு குப்தா அளித்திருந்தார். மனுவை நீதிபதி மன்மோஹன் சண்டேல் இன்று (நவ.27) விசாரணைக்கு ஏற்றார்.
இந்த வழக்கில் இந்து சேனாவுக்காக வழக்கறிஞர்கள் ராம் நிவாஸ் பிஷ்னோய் மற்றும் ஈஷவர்சிங் ஆகியோர் ஆஜராகி வாதிட்டனர். தர்காவின் ஜன்னல்களில் ஸ்வஸ்திக் மற்றும் தாமரையின் உருவச் சின்னங்கள் அமைந்துள்ளன எனத் தெரிவித்தனர். இவை இந்துக்கள் வணங்குவதாக உள்ளதால், தர்காவானது சிவன் கோயிலை இடித்து கட்டப்பட்டதாக வாதிடப்பட்டது. எனவே, தர்காவினுள் கள ஆய்வு நடத்தவும் நீதிமன்றம் இந்திய தொல்பொருள் ஆய்வகத்துக்கு உத்தரவிடவும் கோரப்பட்டது. இதற்கான ஆதாரமான 1910-இல் வெளியான ஹர்விலாஸ் ஷர்தா வெளியீட்டின் நூல் நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.
இதையடுத்து அஜ்மீர் தர்காவின் நிர்வாகக் குழு, ராஜஸ்தான் மாநில சிறுபான்மை துறை மற்றும் இந்திய தொல்பொருள் ஆய்வகம் ஆகியோருக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. இவர்கள் பதில்களை பெற்ற பின் மீண்டும் வழக்கை டிசம்பர் 5-ம் தேதி நீதிமன்றம் விசாரிக்க உள்ளது. இதற்கு முன்பாக உத்தரப் பிரதேசம் சம்பலில் அமைந்த ஜாமா மசூதி, மீதும் கோயில் எனக் புகார் எழுந்தது. இது விஷ்ணுவின் கல்கி அவதாரத்தின் கோயில் என அம்மாவட்ட சிவில் நீதிமன்றத்தில் வழக்கு தொடுக்கப்பட்டது. இதன் மீது உத்தரவிடப்பட்ட களஆய்விற்கு பின் கலவரம் உருவாகி 4 உயிர்கள் பலியானது நினைவுகூரத்தக்கது.