குமரி: பாம்பன் புதிய ரயில் பாலத்தில் சமீபத்தில் ஆய்வு மேற்கொண்ட ரயில்வே பாதுகாப்பு ஆணையர் ஏ.எம்.சவுத்ரி தனது அறிக்கையில் பல்வேறு குறைபாடுகளை சுட்டிக்காட்டி, சில பரிந்துரைகளை வழங்கியுள்ளார்.
பாம்பன் கடலில் புதிய ரயில் பாலம் கட்டுமானப் பணிகள் அண்மையில் முடிவடைந்தது. இந்த ரயில் பாலத்தை கடந்த நவம்பர் 13, 14ம் தேதிகளில் ரயில்வே பாதுகாப்பு ஆணையர் ஏ.எம்.சவுத்ரி ஆய்வு செய்தார். இதுதொடர்பாக அவர் இந்திய ரயில்வே வாரியத்தின் செயலருக்கு சமர்ப்பித்துள்ள அறிக்கையில், ”புதிய பாலத்தை திட்டமிடுவதற்கு முன்பு ரயில்வே வாரியம் தொழில்நுட்ப ஆலோசனைக் குழுவை அமைக்க வேண்டும். ஆனால், பாம்பன் புதிய ரயில் பாலத்தில் அந்த நடைமுறை பின்பற்றப்படவில்லை. இந்தப் பாலத்தில் அரிப்பு, துருப்பிடித்தல் பிரச்சினைகளுக்குத் தீர்வுகாண போதுமான நடவடிக்கைகள் எடுக்கப்படவில்லை.
பாம்பன், மண்டபம், ரயில் நிலையங்கள், பாலம் கட்டுப்பாட்டு அறை ஆகியவற்றில் பணிபுரியும் ஊழியர்கள் அனைவரும் ரயில் சேவை தொடங்கும் முன்பு, பணி விதிகள் பற்றிய புரிதல் குறித்து உறுதிமொழி பெற வேண்டும். பாம்பன் பாலம் கட்டுப்பாட்டு அறையில் புதிதாக வழங்கப்பட்ட இன்டர்லாக் சர்க்யூட்களில் பல மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. இது பாதுகாப்பற்ற சூழ்நிலைகளுக்கு வழிவகுக்கும். ரயில் சேவையை தொடங்குவதற்கு தகுதி வாய்ந்த அதிகாரியால், முறையாக அங்கீகரிக்கப்பட்ட வயரிங் வரைப்படங்கள் வழங்கப்பட வேண்டும்.
பாம்பன் புதிய ரயில் பாலத்தில் 50 கி.மீ. வேகத்தில் ரயிலை இயக்கலாம். அதேநேரம், பாம்பன் கடல் பகுதியில் 58 கி.மீ. வேகத்தில் காற்று வீசினால் புதிய ரயில் பாலத்தில் ரயிலை இயக்கக் கூடாது. ஒவ்வோர் ஆண்டும் புதிய பாலத்தின் மத்தியப் பகுதியில் உள்ள செங்குத்து தூக்குப் பாலத்தை ஆய்வு செய்வதுடன், அந்த ஆய்வு அறிக்கைகள் ஆணையத்திடம் சமர்ப்பிக்கப்பட வேண்டும்’ என்று இவ்வாறு அறிக்கையில் ஏ.எம்.சவுத்ரி கூறியுள்ளார்.
ரயில்வே பாதுகாப்பு ஆணையர் பல்வேறு குறைபாடுகளை சுட்டிக்காட்டி, அதை சரிசெய்யுமாறு கூறியுள்ளதால், பாம்பன் புதிய ரயில் பாலத்தை திறப்பது கால தாமதமாகும் என தெரியவந்துள்ளது.