நீர்ப்பாசனத் திணைக்களம் மற்றும் மகாவலி அபிவிருத்தி அதிகார சபையின் நீர்த்தேக்கங்களுக்குப் பொறுப்பான பொறியியலாளர்கள் மற்றும் தொழிநுட்ப உத்தியோகத்தர்கள் பணியிடங்களில் தொடர்ந்து இருக்குமாறு கமத்தொழில், கால்நடை வளங்கள், காணி மற்றும் நீர்ப்பாசன அமைச்சு அறிக்கை விடுத்துள்ளது.
கமத்தொழில், கால்நடை வளங்கள், காணி மற்றும் நீர்ப்பாசன அமைச்சரின் ஆலோசனையின் பேரில், அமைச்சின் செயலாளர் டி.பி. விக்ரமசிங்க இந்த அறிக்கையை வெளியிட்டுள்ளார்.
விடுமுறையில்; இருக்கும் உத்தியோகத்தர்களின் விடுமுறையை உடனடியாக இரத்துச் செய்யுமாறும் மகாவலி அதிகாரசபையின் உத்தியோகத்தர்கள் பிரதேச செயலாளர்களுக்கு, அவர்களின் பிரதேசங்களில் அனர்த்தங்களினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் வழங்குவதற்கு தேவையான ஆதரவை வழங்குமாறும் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அமைச்சு மட்டத்தில், செயலாளர் தலைமையில் நீர்ப்பாசனத் திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம், மகாவலி அபிவிருத்தி அதிகார சபையின் பணிப்பாளர் நாயகம் மற்றும் கமத்தொழில் திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் ஆகியோர் அடங்கிய குழு, தற்போதுள்ள நிலைமையை தொடர்ந்து கண்காணித்து மீளாய்வு செய்து தேவையான நடவடிக்கைகளை உடனடியாக மேற்கொள்ளுமாறும். தற்போது நீர்த்தேக்கங்களில் இருந்து நிரம்பி வழியும் பராக்கிரம சமுத்திரம் மற்றும் ராஜாங்கனை குளத்தை அண்மித்து வாழ்கின்ற மக்கள் அவதானமாக இருக்குமாறும் அந்த அறிவிப்பில் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
அத்துடன். அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்டுள்ள அக்கரைப்பற்று மற்றும் நில்வலா கங்கைகளை அண்மித்த தாழ்நிலப் பிரதேசங்களில் வாழும் மக்களுக்கு தேவையான பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள உரிய நிறுவனங்களின் அதிகாரிகள் உடனடியாக செயற்பட வேண்டும் என்றும், கடும் மழை காரணமாக எதிர்காலத்தில் பேரிடரால் சேதமடையும் பிரதேசங்களை அடையாளம் கண்டு, அப்பிரதேச மக்களுக்கு அறிவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கமத்தொழில், கால்நடை வளங்கள், காணி மற்றும் நீர்ப்பாசன அமைச்சின் செயலாளர் டி.பி. விக்ரமசிங்க மேலும் சுட்டிக்காட்டியுள்ளார்.