புதிய சபாநாயகர் கலாநிதி அசோக ரன்வலவுக்கு சீன பாராளுமன்ற சபாநாயகரின் வாழ்த்து

ஊடக அறிக்கை

புதிய சபாநாயகர் கௌரவ கலாநிதி அசோக ரன்வலவுக்கு சீன பாராளுமன்ற சபாநாயகரின் வாழ்த்து

இலங்கைக்கான சீனத் தூதுவர் கீ சென்ஹொங் சபாநாயகர் கௌரவ கலாநிதி அசோக ரன்வலவை அண்மையில் பாராளுமன்றத்தில் சந்தித்தார். இச்சந்திப்பில் பாராளுமன்ற செயலாளர் நாயகம் குஷானி ரோஹணதீரவும் கலந்துகொண்டார்.

சீன தேசிய மக்கள் காங்கிரசின் நிலைக்குழுவின் தலைவர் (சீன பாராளுமன்ற சபாநாயகர்) ஸாவோ லெஜி (Zhao Leji)  அவர்களின் வாழ்த்துக்களை இதன்போது சீனத் தூதுவர் பத்தாவது பாராளுமன்றத்தின் புதிய சபாநாயகராகத் தெரிவுசெய்யப்பட்டுள்ள கௌரவ கலாநிதி அசோக ரன்வலவிடம் தெரிவித்தார்.

இரு தரப்பினருக்கும் இடையில் கலந்துரையாடல் இடம்பெற்றதுடன், இலங்கைக்கும் சீனாவுக்கும் இடையிலான நீண்ட கால ஒத்துழைப்புக்களை நினைவு கூர்ந்த புதிய சபாநாயகர், ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவின் தலைமையிலான புதிய அரசாங்கத்திலும் இரு நாடுகளுக்கும் இடையிலான உறவுகளை மேலும் வலுப்படுத்துவதற்கு எதிர்பார்ப்பதாகத் தெரிவித்தார்.

இங்கு கருத்துத் தெரிவித்த சீனத் தூதுவர் குறிப்பிடுகையில், இரு நாடுகளின் சட்டவாக்க நிறுவங்களின் உறவுகளை மேலும் வலுப்படுத்த வேண்டும் எனவும், புதிய பாராளுமன்றத்திலும் இலங்கை – சீன பாராளுமன்ற நட்புறவுச் சங்கத்தை ஸ்தாபிக்க எதிர்பார்ப்பதாகத் தெரிவித்தார்.

அத்துடன், பொருளாதார அவிபிருத்தி, கலப்பின விதைவகைகளை விருத்தி செய்தல் உள்ளிட்ட விவசாயம் சம்பந்தப்பட்ட விடயங்கள், நீர் முகாமைத்துவம், மசகு எண்ணெய் சுத்திகரிப்பு, வெளிநாட்டு முதலீடு மற்றும் ஏற்றுமதித் துறையில் இரு நாடுகளுக்கும் இடையிலான ஒத்துழைப்புக்களை விரிவுபடுத்துவது தொடர்பில் இதன்போது கவனம் செலுத்தப்பட்டது.
 
எம். ஜயலத் பெரேரா,
பணிப்பாளர் சட்டவாக்க சேவைகள் / பணிப்பாளர் தொடர்பாடல் (பதில்),
இலங்கை பாராளுமன்றம்.
0703139114

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.