மேஜர் ஜெனரல் கேபீஎ ஜயசேகர (ஓய்வு) டபிள்யூடபிள்யூவீ ஆர்எஸ்பீ வீஎஸ்வீ யூஎஸ்பீ என்டிசீ பீஎஸ்சீ பிரதி பாதுகாப்பு அமைச்சராக (25 நவம்பர் 2024) நேற்றைய தினம் கொழும்பு – 07, அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையத்தில் கடமைகளைப் பொறுப்பேற்றார். இந் நிகழ்வில் இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் விக்கும் லியனகே ஆர்டபிள்யூபீ ஆர்எஸ்பீ என்டியூ அவர்கள் கலந்து கொண்டார்.
நிகழ்வின் போது, அதிமேதகு ஜனாதிபதியும், இலங்கை ஆயுத படைகளின் சேனாதிபதியுமான அனுரகுமார திஸாநாயக்க, வினைத்திறனான அனர்த்த முகாமைத்துவத்திற்கு வெறுமனே நிறுவன கட்டமைப்பை வலுப்படுத்துவது போதாது என வலியுறுத்தினார். அடிமட்ட மட்டத்தில் நடைமுறை தீர்வுகளை வழங்குவதற்கான பொறிமுறைகளை ஏற்படுத்த வேண்டியதன் அவசியத்தை ஜனாதிபதி வலியுறுத்தினார்.
பிரதி பாதுகாப்பு அமைச்சர் அருண ஜயசேகரவின் பதவிப் பிரமாண நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். பாதிக்கப்படக்கூடிய பகுதிகளில் ஏற்படும் அனர்த்தங்களைத் தடுப்பதற்கும் புதுமையான தீர்வுகளை உருவாக்குவதற்கும் உள்ளூராட்சி நிறுவனங்களுக்கு அதிகாரமளிப்பதன் முக்கியத்துவத்தை ஜனாதிபதி திஸாநாயக்க எடுத்துரைத்தார்.
நாட்டின் அனர்த்த முகாமைத்துவ சட்டங்கள் கணிசமான ஆய்வின் பின்னரே உருவாக்கப்பட்டதாகவும், அவற்றை திறம்பட நடைமுறைப்படுத்துவது அதிகாரிகளின் பொறுப்பாகும் என்றும் ஜனாதிபதி குறிப்பிட்டார். நேர்மையுடன் தங்கள் கடமைகளை நிலைநிறுத்தும் எந்தவொரு அதிகாரிக்கும் தனது அசைக்க முடியாத ஆதரவை அவர் உறுதியளித்தார் மற்றும் தேவைப்பட்டால் சட்ட கட்டமைப்பை மேம்படுத்த முன்மொழியுமாறு அரசாங்க அதிகாரிகளுக்கு அழைப்பு விடுத்தார்.
அனர்த்த முகாமைத்துவம் அரசாங்கத்தின் மீது கணிசமான நிதிச்சுமையை சுமத்துவதாக ஜனாதிபதி திஸாநாயக்க சுட்டிக்காட்டினார். இருப்பினும், சட்டங்களை திறம்பட செயல்படுத்துவதன் மூலம், இந்த செலவுகளை கணிசமாக குறைக்க முடியும்.
இந்த நிகழ்வில் பொது பாதுகாப்பு மற்றும் பாராளுமன்ற அலுவல்கள் அமைச்சர் ஆனந்த விஜேபால, பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் எயார் வைஸ் மார்ஷல் சம்பத் துயகோந்த (ஓய்வு), பொது பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் ரவி செனவிரத்ன, பாதுகாப்பு பதவிநிலை பிரதானி ஜெனரல் சவேந்திர சில்வா, கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் பிரியந்த பெரேரா மற்றும் விமானப்படைத் தளபதி எயார் மார்ஷல் உதேனி ராஜபக்ச உட்பட முக்கிய பிரமுகர்கள் கலந்துகொண்டனர்.