புதுடெல்லி: முதல் முறையாக தேர்தலில் போட்டியிட்டு நாடாளுமன்றத்துக்குள் நுழைந்த காங்கிரஸ் பொது செயலர் பிரியங்கா காந்தி (52), அரசியல் சாசன புத்தகத்தை கையில் ஏந்தி வயநாடு தொகுதி மக்களவை எம்.பி.யாக வியாழக்கிழமை பதவியேற்றுக் கொண்டார். இவருக்கு, மக்களவை தலைவர் ஓம் பிர்லா பதவிப் பிரமாணம் செய்து வைத்தார்.
சோனியா, ராகுல் காந்தி ஏற்கெனவே எம்.பி.யாக உள்ள நிலையில், ஒரே குடும்பத்தை சேர்ந்த மூன்றாவது எம்.பி.யாக பிரியங்கா காந்தி நாடாளுமன்றத்துக்குள் நுழைந்துள்ளார். இது, அசாதாரணமான நிகழ்வாக கருதப்படுகிறது. தீவிர அரசியலில் ஈடுபட்டு ஐந்து ஆண்டுகளுக்குப் பிறகு தேர்தலில் போட்டியிட்ட அவர் தற்போது எம்.பி.யாக தேர்வாகியுள்ளார்.
இந்தப் பதவியேற்பு நிகழ்வின்போது பிரியங்கா காந்தி, கேரள மாநிலத்தின் பாரம்பரியத்தை போற்றும் வகையில் கசவு புடவையை அணிந்திருந்தார். இவரது பதவியேற்பு விழாவில், காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, அவரது தாயார் சோனியா காந்தி, கணவர் ராபர்ட் வதேரா, மகன் ரெய்ஹான் மற்றும் மகள் மிராயா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
முன்னதாக, நாடாளுமன்றத்துக்குள் நுழைந்த பிரியங்காவுக்கு காங்கிரஸ் உள்ளிட்ட பல்வேறு கட்சிகளை சேர்ந்த தலைவர்கள் தங்களது வாழ்த்துகளை பரிமாறிக்கொண்டனர். பதவியேற்புக்கு பிறகு தனது சகோதரரும், மக்களவை எதிர்க்கட்சி தலைவருமான ராகுல் காந்தியை சந்தித்து வாழ்த்துப் பெற்றார். அதேபோன்று, மகாராஷ்டிர மாநிலம் நான்தேட் மக்களவை தொகுதிக்கு நடைபெற்ற இடைத்தேர்தலில் காங்கிரஸ் சார்பில் போட்டியிட்டு வெற்றிபெற்ற ரவீந்திர சவான் மராத்தி மொழியில் பதவிப் பிரமாணம் செய்து கொண்டார்.
மகத்தான வெற்றி: வயநாடு எம்.பி. பதவியை ராகுல் காந்தி ராஜிநாமா செய்ததைத் தொடர்ந்து அங்கு நடைபெற்ற இடைத் தேர்தலில் அவரது தங்கை பிரியங்கா காந்தி போட்டியிட்டார். இவரை எதிர்த்து அந்த தொகுதியில் கம்யூனிஸ்ட் கட்சியைச் சேர்ந்த சத்யன் மொகேரி, பாஜகவின் நவ்யா ஹரிதாஸ் உட்பட 16 பேர் போட்டியிட்டனர். ஆனால், 4.10 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் பிரியங்கா காந்தி மாபெரும் வெற்றியினை தக்கவைத்தார். ஹரியானா மற்றும் மகாராஷ்டிர மாநில தேர்தல்களில் காங்கிரஸ் கட்சி படுதோல்வியை சந்தித்துள்ள நிலையில், பிரியங்கா காந்தியின் வரவு அக்கட்சிக்கு மிகப் பெரும் பலமாக கருதப்படுகிறது.
உங்களின் குரலாக ஒலிப்பேன்… – பிரியங்கா தனது நன்றி உரையில், “எனது அன்புக்குரிய வயநாடு சகோதர, சகோதரிகளே! என் மீது நீங்கள் வைத்திருக்கும் நம்பிக்கையால் நான் நன்றியில் முழ்கித் திழைக்கிறேன். காலப்போக்கில் எனது இந்த வெற்றியை உண்மையில் உங்களின் வெற்றியாக நான் உணரச் செய்வேன். உங்களை பிரதிநிதித்துவப்படுத்த நீங்கள் தேர்ந்தெடுத்த நபர் உங்களின் நம்பிக்கைகளையும் கனவுகளையும் புரிந்து கொண்டவர், உங்களில் ஒருவராக உங்களுக்காக போராடுகிறார் என்பதையும் உணரச் செய்வேன். நாடாளுமன்றத்தில் உங்களின் குரலாக ஒலிப்பேன். இந்த மரியாதையை நீங்கள் எனக்கு அளித்ததற்கும், நீங்கள் எனக்கு அளித்த அளவு இல்லாத அன்புக்கும் நன்றி.” எனக் குறிப்பிட்டிருந்தார். இந்நிலையில் நடப்பு குளிர்கால கூட்டத்தொடரில் அவர் முதலில் எழுப்பும் குரல் மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.