ஜம்முவிலிருந்து டெல்லிக்கு வழக்கை மாற்றக் கோரும் சிபிஐ மனு மீது பதில் அளிக்க காஷ்மீர் பிரிவினைவாதி யாசின் மாலிக் உள்ளிட்டோருக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
ஜம்மு காஷ்மீர் விடுதலை முன்னணி தலைவர் யாசின் மாலிக். காஷ்மீரை தனி நாடாக அறிவிக்கக் கோரும் இவரது அமைப்பு தீவிரவாத செயலில் ஈடுபட்டு வந்தது. தீவிரவாத செயலுக்கு நிதியுதவி வழங்கிய வழக்கில் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்ட மாலிக் டெல்லி திஹார் சிறையில் உள்ளார்.
காஷ்மீர் முன்னாள் முதல்வர் முப்தி முகமது சையதுவின் மகள் ரூபையா கடத்தல் மற்றும் 4 விமானப்படை வீரர்கள் கொல்லப்பட்ட வழக்கில் யாசின் மாலிக்கை நேரில் ஆஜர்படுத்த ஜம்மு சிறப்பு நீதிமன்றம் கடந்த 2022-ம் ஆண்டு உத்தரவிட்டிருந்தது. இதை எதிர்த்து சிபிஐ தரப்பில் உச்ச நீதிமன்றத்தில் முறையிடப்பட்டது. யாசின் மாலிக்கை நேரில் ஆஜர்படுத்தினால் பாதுகாப்பு பிரச்சினை எழும் என அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது. இந்த மனுவை விசாரித்த நீதிபதிகள் அபய் எஸ் ஓகா, அகஸ்டின் ஜார்ஜ் மாசி ஆகியோர், “யாசின் மாலிக்கிடம் விசாரணை நடத்த திஹார் சிறையிலேயே சிறப்பு நீதிமன்றத்தை ஏற்படுத்தலாம்” என கடந்த வாரம் தெரிவித்தனர்.
இந்நிலையில், யாசின் மாலிக் உள்ளிட்ட சிலர் மீதான 2 வழக்குகள் மீதான விசாரணையை ஜம்முவிலிருந்து டெல்லி மாற்ற உத்தரவிடக் கோரி சிபிஐ தரப்பில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இந்த மனு நீதிபதிகள் அபய் எஸ் ஓகா, அகஸ்டின் ஜார்ஜ் மாசி முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது, இந்த மனு குறித்து வரும் டிசம்பர் 18-ம் தேதிக்குள் பதில் அளிக்குமாறு யாசின் மாலிக் உள்ளிட்டோருக்கு நீதிபதிகள் உத்தரவிட்டனர்.