லைகா புரொடக்ஷன்ஸ் தயாரிப்பில், மகிழ் திருமேனி இயக்கத்தில், அஜித், அர்ஜுன், த்ரிஷா, ரெஜினா உள்ளிட்டோரின் நடிப்பு மற்றும் அனிருத்தின் இசையில் உருவாகியிருக்கும் திரைப்படம் `விடாமுயற்சி’. வருடக்கணக்கில் எடுக்கப்பட்டு வரும் இப்படத்தின் அப்டேட்டுகள் எதுவும் வராமல் இருந்த நிலையில், சமூக வலைதளங்களில் `அஜித்தே… கடவுளே’ என்ற ஹேஷ்டேக் வைரலானது.
இவ்வாறிருக்க, விடாமுயற்சியின் டீசர் நேற்றிரவு 11:08 மணிக்கு வெளியானது. படத்தின் கதைக்களம் அஜர்பைஜான் நாட்டில் நகர்வதாக டீசரில் காண்பிக்கப்பட்டியிருக்கிறது. சேசிங், சண்டைக் காட்சிகள் மூலம் `விடாமுயற்சி’ ஒரு ஆக்ஷன் திரைப்படம் என்பதைக் காட்டும் இந்த டீசர், அஜித் உட்பட யாருடைய வசனமும் இன்றி முடிகிறது.
அதேசமயம், டீசரின் இறுதியில் `எல்லோரும் எல்லாமும் கைவிடும் போது உன்னை நம்பு’ என்ற வசனம் எழுத்தாக மட்டும் காண்பிக்கப்படும்போது, வரும் பின்னணி இசை சமீபத்தில் சமூக வலைதளங்களில் வைரலான `அஜித்தே… கடவுளே’ என்பதற்கு ஏற்ற பீட்டில் (Beat) அமைந்திருக்கும். இந்த நிலையில், விடாமுயற்சியின் அந்த தீம் மியூசிக் இணையதளத்தில் வெளியிடப்பட்டிருப்பதாக இப்படத்தின் இசையமைப்பாளர் அனிருத் எக்ஸ் தளத்தில் தெரிவித்திருக்கிறார்.
மேலும், அந்தப் பதிவில் அனிருத், “அனைவருக்கும் நன்றி. லவ் யூ ஆல். தியேட்டர்களில் தீம் மியூசிக்கின் இறுதியில் ரசிகர்களின் சத்தத்துக்காக ஆவலாக இருக்கிறேன்.” என்று பதிவிட்டிருக்கிறார். மறுபக்கம், நேற்றிரவு அந்த டீசர் வெளியானது முதலே, அந்த தீம் மியூசிக்குக்கு ரசிகர்கள் `அஜித்தே… கடவுளே’ என வைப் செய்ய ஆரம்பித்துவிட்டனர்.