அதென்ன நவபாஷாணம்; அது கொடிய வியாதிகளையும் சரி செய்யுமா? – சித்த மருத்துவர் விளக்கம்

குரோம்பேட்டையை அடுத்த அஸ்தினாபுரத்தில் நவபாஷாண தண்டாயுதபாணி கோயிலில், நவபாஷாணத்தாலான முருகன் சிலை இருக்கிறது. இந்த சிலை சுரண்டப்பட்டதாக, செங்கல்பட்டு மாவட்ட ஆட்சித்தலைவரிடம் புகாரளிக்கப்பட்டிருக்கிறது.

பழனிமலைக் கோயில், கொடைக்கானல் அருகேயுள்ள பூம்பாறைக்கோயில் என தமிழ்நாட்டில் சில இடங்களில் நவபாஷாண சிலைகள் இருப்பதாகச் சொல்லப்பட்டு வருகிறது. இந்த சிலைகள் சேதப்படுத்தப்பட்டதாக, சுரண்டப்பட்டதாக அவ்வப்போது செய்திகள் வருவதுண்டு. இன்றைக்கும் இதேபோன்றதொரு செய்தி வந்திருக்கிறது. நவபாஷாண சிலைகள் என்றால் என்ன, அதில் மருத்துவ குணங்கள் இருப்பதாகச் சொல்லப்படுவது உண்மையா என்று சித்த மருத்துவர் செல்வ சண்முகத்திடம் கேட்றிந்தோம்.

சித்த மருந்து

”நவபாஷாணங்கள் என்பதற்கு கல், மருந்து, நஞ்சு என்று மூன்று அர்த்தங்கள் உண்டு. நவபாஷாணம் அல்லது நவபாடாணம் என்றும் சொல்லலாம். இது மிக மிக குறைவான அளவு மனித உடலுக்குள் சென்றாலும், மரணம் நிகழ்ந்துவிடும். சித்தர்களுடைய நூல்கள் பாஷாணங்களில் 64 வகைகள் இருக்கின்றதாக சொல்கின்றன. இதில் இயற்கையாக கிடைக்கக்கூடியவை 32, செயற்கையாக உருவாக்கக்கூடியவை 32. இவற்றில் லிங்கம், வீரம், பூரம், கந்தகம், கெளரி பாஷாணம், தாளகம், மனோசிலை, வெள்ளைப் பாஷாணம், தொட்டிப்பாஷாணம் ஆகிய 9 வகை பாஷாணங்கள் மிகக்கொடிய விஷத்தன்மையைக் கொண்டவை. அதே அளவுக்கு இந்தப் பாஷாணங்களில் மருத்துவத்தன்மைகளும் இருப்பதாகச் சித்தர்கள் ஆராய்ந்து தெரிந்துகொண்டதோடு, அவற்றை சித்த மருத்துவத்திலும் பயன்படுத்தியிருப்பதை சித்த மருத்துவ நூல்கள் தெரிவிக்கின்றன. இந்த நவபாஷாணங்களைத்தான் சிலை செய்யப் பயன்படுத்தியிருக்கிறார்கள். இவை தீர்க்கமுடியாத சில வியாதிகள் வராமல் தடுக்கும் என்பதையும் சித்தர்கள் கண்டறிந்திருக்கிறார்கள்.

நவபாஷாணங்களில் இருக்கிற மருத்துவ குணங்களை அறிந்துகொண்ட சித்தர்கள், அவற்றில் ஏன் சிலைகளை வடித்தார்கள் என்கிற கேள்வி நமக்கெல்லாம் எழும். அதற்கும் பதில் இருக்கிறது. சித்த மருந்துகளை எடுத்துக்கொள்பவர்களுக்கு நன்கு தெரிந்த ஒரு விஷயம், அவற்றை அனுபானங்களுடன் சேர்த்துதான் அருந்த வேண்டும் என்பது. அதென்ன அனுபானங்கள்…? பால், தேன், நெய், பழச்சாறுகள்தான் அந்த அனுபானங்கள். சித்த மருந்துகளின் தன்மைகளுக்கு ஏற்ப, அவற்றை பால், தேன் அல்லது நெய் என ஏதோவொரு அனுபானத்துடன் சேர்த்து சாப்பிட்டால் மட்டுமே, அதன் பலன் நோயாளிகளுக்கு முழுமையாக கிடைக்கும். இப்போது நவபாஷாண சிலைகளுக்கு வருவோம். நவபாஷாணத்தில் இருக்கிற மருத்துவ தன்மை, அதன் மீது சேர்க்கப்படுகிற அனுபானங்கள் என இங்கேயும் அதே கான்செப்ட் தான் நடக்கிறது. சித்த மருத்துவத்தில் பெரியளவில் ஆராய்ச்சிகள் நடத்தப்படாததால், இதைத்தாண்டிய தகவல்களை தெரிவிக்க முடியவில்லை.

செல்வ சண்முகம்

நவபாஷாண சிலைகள் மேல் ஊற்றப்பட்ட அனுபானங்களான பால், தேன், நெய் போன்றவற்றை சாப்பிட்டால், தீராத வியாதிகளும் சரியாகி விடுமா என்கிற கேள்வி இந்த இடத்தில் பலருக்கும் எழும். காப்பு, நீக்கம், நிறைப்பு என சித்த மருத்துவத்தில் 3 வகை மருந்துகள் இருக்கின்றன. காப்பு என்பது வருமுன் காப்பது, நீக்கம் என்றால் நோயை முழுமையாக நீக்குவது, நிறைப்பு என்றால் தாக்கிய நோய் சரியான பின்பு உடம்பின் கட்டமைப்பை பழையபடி மீட்டுருவாக்கம் செய்வதற்காக செய்யப்படுகிற சிகிச்சை. இதில் நவபாஷாண சிலைகள் மேல் ஊற்றப்பட்ட அனுபானங்களை அருந்துவது என்பது நோய் வராமல் தடுக்கிற ‘காப்பு’ மருத்துவ முறையைச் சேர்ந்தது” என்கிறார் சித்த மருத்துவர் செல்வ சண்முகம்.

Vikatan Play: நீங்கள் விரும்பி படித்த தொடர்கள், இப்போது ஆடியோ வடிவில்… புத்தம் புதிய விகடன் ப்ளே… உங்கள் அன்றாட பணிகளை கவனித்துக் கொண்டே ரசித்து கேட்க, உடனே இன்ஸ்டால் செய்யுங்கள்…

https://bit.ly/PesalamVaanga

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.