அரசு முறை பயணமாக தமிழ்நாட்டிற்கு வருகை தந்திருக்கும் குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு ஊட்டியில் உள்ள ராஜ்பவனில் தங்கி நிகழ்ச்சிகளில் பங்கேற்று வருகிறார். குன்னூர், வெலிங்டன் பகுதியில் உள்ள முப்படை அதிகாரிகளுக்கான பயிற்சி கல்லூரியில் நடைபெற்ற விழாவில் சிறப்பு விருந்தினராக பங்கேற்று சிறப்புரை நிகழ்த்தினார்.
பயிற்சி அதிகாரிகள் முன்னிலையில் உரை நிகழ்த்திய குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு, “நாட்டிலேயே முதன்மையான இந்த பயிற்சி கல்லூரியில் 26 நாடுகளைச் சேர்ந்த 38 அதிகாரிகள் பயிற்சி பெறுகின்றனர்.
இந்த கல்லூரியில் பயிற்சி பெற்று தேர்ச்சியடைந்த அதிகாரிகளுக்கு மனமார்ந்த பாராட்டுகள். அந்த அதிகாரிகளின் அனுபவத்தை கேட்டு மகிழ்ச்சி அடைகிறேன். மேலும், பெண் அதிகாரிகளும் பயிற்சி பெறுவது இன்றியமையாதது. இனி வரும் காலங்களில் அதிகளவில் பெண்கள் பாதுகாப்பு படை பயிற்சிகளில் இடம் பெறுவார்கள் என எதிர்பார்கிறேன். பெண்கள் நாட்டுக்காக சேவை புரிவது பாராட்டுக்குரியது.
பெண்கள் அனைத்து துறைகளிலும் சாதனை படைத்து வருகின்றனர். பாதுகாப்பு துறைகளிலும் கால்பதித்து வருகின்றனர். உலகின் உயரமான போர்களமான சியாச்சினில் பணிபுரிந்து வரும் பெண் அதிகாரிகளை சந்தித்துள்ளேன்.
முப்படைகளிலும் முக்கிய பொறுப்புகளில் பெண்கள் பணிபுரிந்து வருகின்றனர். குறிப்பாக இந்திய கடற்படையில் முதன்முறையாக ஒரு பெண் அதிகாரி ஒருவர் காமாண்டிங் அதிகாரியாக நியமிக்கப்பட்டுள்ளார்.
இம்மாத தொடக்கத்தில் கோவாவில் ஐ.என்.எஸ் விக்ராந்த் கப்பலில் பணிபுரியும் பெண் அக்னி வீரர்கள் மற்றும் மாலுமிகளைச் சந்தித்தேன். பெண்கள் அனைத்து துறைகளிலும் அதிகரித்து வரும் நிலையில், இளம் தலைமுறை பெண்களுக்கு ஊக்கமாக உள்ளது.
மேலும் பல பெண்கள் முப்படைகளிலும் இணைவார்கள் என எதிர்பார்க்கிறேன். இந்திய வரலாற்றில் பெண்கள் முப்படைகளிலும் பெரும் பங்காற்றி, சாதனை புரிந்து வருகின்றனர்.
வெலிங்டன் முப்படை அதிகாரிகள் பயிற்சி கல்லூரி, இந்தியா மற்றும் நட்பு நாடுகளைச் சேர்ந்த பாதுகாப்புத்துறையில் திறமையான அதிகாரிகளை உருவாக்குவதில் பெரும் பங்கு வகித்து வருகிறது.
70 ஆண்டுகளாக இந்த முப்படை அதிகாரிகள் பயிற்சி கல்லூரி நவீன தொழில்நுட்பத்துடன், டிஜிட்டல் மயத்துடன் சிறப்பாக உள் கட்டமைப்புடன் பயிற்சி அளித்து வருவது மகிழ்ச்சி அளிக்கிறது ” என்றார்.
வளர்ந்து வரும் இந்தியா போன்ற நாட்டில் பெண் குடியரசுத் தலைவர் ஒருவர் பாதுகாப்புத் துறையில் பெண்களின் பங்களிப்பு மற்றும் முக்கியத்துவம் குறித்து அழுத்தமாக பேசியிருப்பது பெரும் வரவேற்பைப் பெற்றிருக்கிறது.
நீங்கள் விரும்பி படித்த தொடர்கள், இப்போது ஆடியோ வடிவில்… புத்தம் புதிய விகடன் ப்ளே… உங்கள் அன்றாட பணிகளை கவனித்துக் கொண்டே ரசித்து கேட்க, உடனே இன்ஸ்டால் செய்யுங்கள்…