அமெரிக்க அதிபராக ஜனவரி 20-ம் தேதி பதவி ஏற்கவுள்ளார் டொனால்டு ட்ரம்ப். அதற்கு முன்பே அவரது அதிரடி திட்டங்கள் பெரும் சலசலப்பை ஏற்படுத்த தொடங்கிவிட்டன. அதில் மிக முக்கியமான ஒன்றுதான் சீனா, மெக்சிகோ, கனடா நாடுகளில் இருந்து அமெரிக்காவில் இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு மிக அதிக அளவிலான கூடுதல் வரி விதிக்கும் முடிவு.
முதல்முறை அதிபராக பதவி வகித்த காலத்தில் கூட இத்தகைய கூடுதல் வரி விதிப்பு தொடர்பாக ட்ரம்ப் சில முன்னெடுப்புகளை மேற்கொண்டார். ஆனால், அது அமெரிக்க பொருளாதாரத்திலோ, சர்வதேச அளவிலோ குறிப்பிடத்தக்க தாக்கத்தை ஏற்படுத்தவில்லை. ஆனால், இம்முறை அப்படி இருக்காது என்று அடித்துச் சொல்கிறார்கள் சர்வதேச வர்த்தக நிபுணர்கள்.
மெக்சிகோ மற்றும் கனடா நாடுகளிலிருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு தலா 25 சதவீதமும், சீனாவின் இறக்குமதிக்கு 10 சதவீதமும் கூடுதல் வரி விதிக்க ட்ரம்ப் திட்டமிட்டுள்ளதாக உறுதியான தகவல்கள் தெரிவிக்கின்றன. இதன்மூலம், உற்பத்தி துறைக்கான வேலைவாய்ப்புகளை மீண்டும் அமெரிக்காவுக்கே திரும்ப கொண்டு வரவும், வர்த்தக பேரங்களை அதிகரிக்கவும் ட்ரம்ப் திட்டமிட்டுள்ளராம்.
‘இது வெறும் ட்ரெய்லர்தான், முழு பிக்சர் வேற லெவலில் இருக்கும்’ என்கிற ரீதியில் செயல்படத் தொடங்கியிருக்கிறது ட்ரம்பின் புதிய நிர்வாக டீம். அமெரிக்காவுக்குள் எல்லை தாண்டிய குடியேற்றங்களைத் தடுத்து நிறுத்த மெக்சிகோ ஒப்புக்கொண்ட போதிலும்கூட ட்ரம்ப் நிர்வாகக் குழு சும்மா விடுவதாகத் தெரியவில்லை.
இதன் தொடர்ச்சியாக, ‘அமெரிக்கா புதிய வரிவிதிப்பை அமல்படுத்தினால், நாங்களும் சாத்தியமான பதிலடி வரிவிதிப்பு முறையை கையாளத் தயாராக இருக்கிறோம்’ என்று மெக்சிகோ எச்சரித்துள்ளது. அதேபோல், ட்ரம்பின் கூடுதல் வரிக்கு பதிலடியாக எந்த வகையான பொருளாதாரக் கொள்கைகளை முன்வைக்கலாம் என்று கனடாவும் தீவிரமாக ஆராய்ந்து வருகிறது. மெக்சிகோவும் கனடாவும் இவ்வாறு நிதானமாக ரியாக்ட் செய்ய, சீனாவோ பகிரங்க எச்சரிக்கையை விடுத்துள்ளது இங்கே கவனிக்கத்தக்கது.
அமெரிக்காவுக்கு பெருமளவிலான போதைப் பொருள்கள், மெக்சிகோ வழியாக கடத்தப்படுவதாக புகார் உள்ளது. இது தொடர்பாக பலமுறை எச்சரித்தும் சீன அரசு நடவடிக்கை எதுவும் எடுக்கவில்லை என்பது ட்ரம்ப் முன்வைக்கும் குற்றச்சாட்டு. எனவே, போதைப்பொருள் கடத்தலை தடுக்கும் வரை சீன இறக்குமதிக்கு கூடுதல் வரி விதிக்க ட்ரம்ப் திட்டமிட்டுள்ளாராம்.
‘அமெரிக்காவின் போதைப்பொருள் புகழக்கம் தொடர்பான பிரச்சினையில் எங்களை பலிகடா ஆக்காதீர்கள்’ என்று கொந்தளிக்கும் சீனா, போதைப்பொருள் தடுப்புக்கு எதிராக தாங்கள் நல்கும் ஒத்துழைப்பு நடவடிக்கைகளையும் சுட்டிக்காட்டியுள்ளது.
‘சீனப் பொருட்களுக்கு அமெரிக்கா கூடுதலாக வரி விதிக்கும் ட்ரம்பின் திட்டம் செயல்படுத்தப்பட்டால், அது இரு நாடுகளுக்குமே பொருளாதார அழிவுக்கு வித்திடும்’ என்றும் சீனா எச்சரித்துள்ளது.
சீன அரசு மற்றும் ஆளும் கம்யூனிஸ்ட் கட்சியின் அதிகாரபூர்வ பத்திரிகைகள் மூலம் விடுக்கப்படும் இவ்வித எச்சரிக்கைகளில் மேலும் சில அம்சங்களும் இடம்பெற்றுள்ளன.
“சீனாவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பொருள்களுக்கு கூடுதல் வரிவிதிப்பு என்ற தனது நிலைப்பாட்டை நியாயப்படுத்த அமெரிக்க அதிபராக பதவியேற்கவுள்ளவர் கூறியுள்ள சாக்குப்போக்கு முழுக்க முழுக்க பொய்யானது” என்ற கதறலும் மேலோங்கி இருக்கிறது.
அதேவேளையில், ‘இறக்குமதி வரிவிதிப்பு போரில் வெற்றியாளர்கள் யாருமே கிடையாது. சுங்க வரியை ஆயுதமாக்குவதன் மூலம் அமெரிக்கா தொடர்ந்து பொருளாதார, வர்த்தக நடவடிக்கைகளை அரசியலாக்கினால், அது எதிராளியை எந்த வகையிலும் பாதிக்காது’ என்றும் சீன தரப்பு கூறியுள்ளது, தங்களால் ட்ரம்பின் வியூகங்களை எதிர்கொள்ள முடியும் என்ற சவாலையே காட்டுகிறது.
ட்ரம்பின் வரிக்கொள்கை நகர்வுகளின் எதிரொலியாக, சீனாவின் பொருளாதார வளர்ச்சியின் இலக்கு குறித்த கணிப்புகளை சர்வதேச வர்த்தக நிபுணர்கள் சற்றே குறைக்கத் தொடங்கிவிட்டனர். அதேவேளையில், சீனாவைச் சேர்ந்த பொருளாதார நிபுணர்களின் பார்வை என்பது வேறாக இருக்கிறது.
சீனப் பொருள்கள் மீதான கூடுதல் இறக்குமதி வரி விதிப்புக்கு போதைப்பொருள் பிரச்சினையை சுட்டிக்காட்டுவது எந்த வகையிலும் ஏற்க முடியாதது என்று கூறும் சீன பொருளாதார வல்லுநர்கள், அமெரிக்காவின் புதிய வரிவிதிப்புக் கொள்கையை எதிர்கொள்வதற்கு உரிய உத்திகளுடன் சீனா தயாராகி வருவதாக குறிப்பிட்டுள்ளனர்.
இது ஒருபுறம் என்றால், ட்ரம்பின் வரிவிதிப்பு நடவடிக்கையால் அமெரிக்காவில் ஏற்படக் கூடிய பொருளாதாரத் தாக்கம் குறித்த தகவல்களும் கவனம் ஈர்த்துள்ளன.
டொனால்டு ட்ரம்ப்பின் புதிய வரிவிதிப்பு அமல்படுத்தப்பட்டால், அமெரிக்க அரசுக்கு பல நூறு பில்லியன் டாலர்கள் கூடுதலாக வருவாய் கிடைக்கும் என்பது உறுதி. ஆனால், அமெரிக்க இறக்குமதியாளர்கள், உள்நாட்டு, வெளிநாட்டு நிறுவனங்கள் தங்களது லாபங்களில் பெருமளவு இழக்க வேண்டியிருக்கும். அதேபோல், அமெரிக்க குடும்பங்களின் மாதாந்திர பட்ஜெட் தாறுமாறாக உயரும் வகையில் விலைவாசி பிரச்சினை ஏற்படும் என்றும் அலர்ட்கள் வந்தவண்ணம் உள்ளன.
குறிப்பாக, ‘விலைவாசி உயர்வை எதிர்கொள்ள அமெரிக்க மக்கள் தயாராக இருக்க வேண்டும்’ என்று பணவீக்க அதிகரிப்பு கணிப்புகளை முன்வைத்து சர்வதேச பொருளாதார நிபுணர்கள் சிலர் எச்சரித்துள்ளனர். அதாவது, ட்ரம்ப்பின் நடவடிக்கையால் அமெரிக்காவில் வாகனங்கள், காலணிகள், வீடுகள் மற்றும் மளிகைப் பொருள்களின் விலை அதிகரிக்கப்புக்கு வழிவகுக்கும் என்றும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இதன் காரணமாகவே, அமெரிக்க நாடாளுமன்றத்தின் ஒப்புதல் இல்லாமல் அதிபர் தனது அதிகாரத்தைப் பயன்படுத்தி வரிவிதிப்புகளில் மாற்றம் செய்ய முடியாத வகையில் சட்டத் திருத்தம் கொண்டுவர ஜனநாயகக் கட்சி போராடி வருகிறது.
இந்தத் தாக்கங்கள் ஒருபுறம் இருக்க, சீனப் பொருட்களுக்கு கூடுதல் வரி விதிக்கப்படுவதன் எதிரொலியாக, இந்தியாவுக்கு ஆதாயம் கிட்ட வாய்ப்பு உள்ளது என்ற கருத்தும் நிலவுகிறது.
ட்ரம்ப் தனது தேர்தல் பிரச்சாரங்களில், அமெரிக்கா உடன் இந்தியா மிகப்பெரிய வர்த்தக துஷ்பிரயோகத்தில் ஈடுபட்டு வருவதாக குற்றம்சாட்டி இருந்தாலும், தற்போதைய கூடுதல் வரி விதிப்பு என்பது சீனா, மெக்சிகோ மற்றும் கனடாவை மட்டும் குறிவைத்துள்ளது.
எதிர்காலத்தில் இந்தியாவுக்கும் கூடுதல் வரி விதிக்கலாம் என்ற பேச்சு இருந்தாலும், மோடியுடன் நெருக்கம் காட்டி வரும் ட்ரம்ப்பிடம், இந்தியாவுக்கு வரியை உயர்த்த சரியான காரணம் ஏதும் இல்லை என்பதை நிபுணர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.
ஆக, ட்ரம்பின் இந்த அதிரடியால் இந்தியாவுக்கு நிச்சயம் நேரடியாகவும் மறைமுகமாகவும் பொருளாதாரப் பலன் கிட்டும் என்ற கருத்தும் வலுத்துள்ளது.