அனர்த்த நிலைமைகள் தொடர்பாக ஆராய்வதற்காக கிழக்கு மாகாண ஆளுநர் மட்டக்களப்பு மாவட்ட செயலகத்திற்கு விஜயம்

நாட்டின் தற்போதைய அசாதாரண காலநிலை காரணமாக மட்டக்களப்பு மாவட்டமும் பெருமளவில் பாதிக்கப்பட்டது.

அதற்கிணங்க, மட்டக்களப்பு மாவட்டத்தின் வெள்ள நிலமைகள் மற்றும் அதன் பாதிப்புக்கள் தொடர்பாகக் கண்காணித்து, ஆராய்வதற்காக கிழக்கு மாகாண ஆளுநர் பேராசிரியர் ஜயந்த லால் ரத்னாயக்க இன்று (29) மட்டக்களப்பு மாவட்ட செயலகத்திற்கு விஜயம் செய்தார்.

இந்நிகழ்வில் மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் ஜெஸ்டினா முரளிதரன், மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் (காணி) நவரூபரஞ்சனி முகுந்தன், மாவட்ட அனர்த்த முகாமைத்துவ உதவிப் பணிப்பாளர் ஏ. எஸ்.எம்.சியாத், உட்பட்ட குழுவினருடன் ஆளுநர் கலந்துரையாடினார்.

இதன் போது, மாவட்டத்தின் பட்டிப்பளை, வெல்லாவெளி, வவுணதீவு, போரதீவுப்பற்று, கிரான், சித்தாண்டி, கிரான், வாகரை என சகல பகுதிகளிலும் பாதிக்கப்பட்ட மக்கள், அவர்களுக்கான போக்குவரத்து, சுகாதாரம், நீர் விநியோகம், அத்தியாவசிய தேவைகள் எவ்வாறு கிடைக்கின்றன, மற்றும் அமைக்கப்பட்டுள்ள 56 இடைத்தங்கல் முகாம்கள், எனபன போன்ற விடயங்கள் தொடர்பாக கிழக்கு மாகாண ஆளுநர் பேராசிரியர் ஜயந்த லால் ரத்னாயக்க கேட்டறிந்து கொண்டார்.

அத்துடன் காத்தான்குடிப் பிரதேசத்தில் வெள்ள நீரை விடவும் அதிகமாக வாவி நீர் ஊருக்குள் புகுந்ததனால், அதனை அண்டிய பகுதியில் பல வீடுகள் பாதிக்கப்பட்டன.

இதனால் அப்பகுதி மக்கள் அங்கிருந்து வெளியேற்றப்பட்டு, உறவினர் வீடுகளில் தங்க வைக்கப்பட்டனர்.

இவர்களுக்கான சமைத்த உணவுகளை பிரதேச செயலகம் உட்பட பள்ளிவாயல்கள், சமூக அமைப்புக்கள் வழங்குகின்றமை குறித்தும் ஆளுநருக்கு தெரிவிக்கப்பட்டது.

இதேவேளை மட்டக்களப்பு மாவட்டத்தில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு வழங்குவதற்காக ஆளுநர் 500 தொகை உலர் உணவுப் பொதிகளை மாவட்ட அரசாங்க அதிபரிடம் கையளித்தார்.

இதன் போது, மாவட்ட செயலகத்தில் வைத்து கிழக்கு மாகாண ஆளுநரை மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர்களான இராசமாணிக்கம் சாணக்கியன், டொக்டர் இளையதம்பி ஶ்ரீநாத், ஞானமுத்து ஶ்ரீநேசன், எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லாஹ் ஆகியோர் சந்தித்து, மாவட்டத்தில் சகல பிரதேசங்களிலும் ஏற்பட்ட அனர்த்த நிலைமைகள், மக்களின் அசௌகரியங்கள், குறிப்பாக வீதிகள், பாலங்கள் போன்றவற்றின் உடைவுகள், சந்திவெளி மற்றும் ஏனைய அவசியமான இடங்களுக்கான தற்காலிக படகு சேவை தொடர்பாகவும் தெளிவுபடுத்தினர்.

இதேவேளை கிழக்கு மாகாண ஆளுநர் பேராசிரியர் ஜயந்த லால் ரத்னாயக்கவினால் வழங்கப்பட்ட உலர் உணவுப் பொதிகளை அரசாங்க அதிபர் ஜஸ்டின் முரளிதரன் இடைத்தங்கல் முகாம்களில் தங்கியுள்ள மக்களுக்கு வழங்கியமை குறிப்பிடத்தக்கது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.