புபனேஸ்வர்: கடந்த 10 ஆண்டுகளாக அதிகாரத்தை இழந்துள்ளதால் அதிகாரம் தங்கள் பிறப்புரிமை என கருதுபவர்கள், நாட்டுக்கு எதிராக சதி செய்கிறார்கள் என்று ராகுல் காந்தி உள்ளிட்ட எதிர்க்கட்சித் தலைவர்களை பெயர் குறிப்பிடாமல் பிரதமர் மோடி குற்றம் சாட்டியுள்ளார்.
ஒடிசா தலைநகர் புவனேஸ்ரில் நடைபெற்ற பாஜக பொதுக் கூட்டத்தில் உரையாற்றிய நரேந்திர மோடி, “மகாராஷ்டிரா தேர்தல், நாடு முழுவதும் நடைபெற்ற இடைத்தேர்தல்கள், ஹரியானா தேர்தல் ஆகியவற்றின் முடிவுகளால் உங்கள் கண்களில் நம்பிக்கை நிறைந்துள்ளதை நான் காண்கிறேன். முதலில் ஒடிசா, பிறகு ஹரியானா, இப்போது மகாராஷ்டிரா. இதுதான் பாஜகவின் சிறப்பு; இதுதான் பாஜக தொண்டர்களின் பலம்.
நாட்டில் போராட்டங்கள் எப்பொழுதும் நடைபெற்று வந்துள்ளன. ஆனால், கடந்த சில காலமாக, நீங்கள் அனைவரும் ஒரு பெரிய மாற்றத்தைக் கண்டிருப்பீர்கள். அரசியலமைப்புச் சட்டத்தின் உணர்வு மிதிக்கப்படுகிறது. ஜனநாயகத்தின் மாண்பு நிராகரிக்கப்படுகிறது. அதிகாரத்தை தங்கள் பிறப்புரிமையாகக் கருதும் மக்கள், கடந்த பத்தாண்டுகளாக மத்தியில் அதிகாரத்தை இழந்துள்ளனர். தங்களுக்குப் பதிலாக வேறு ஒருவரை ஆசீர்வதித்ததற்காக மக்கள் மீதும் அவர்கள் கோபம் கொள்கிறார்கள். அவர்கள் கோபத்தால் நிறைந்துள்ளார்கள். இதனால், தேசத்துக்கு எதிராகவும் சதி செய்கிறார்கள்.
நாட்டை தவறான பாதையில் கொண்டு செல்வதற்காக மக்களை தவறாக திசை திருப்புகிறார்கள். இவர்களின் பொய்களும் வதந்திகளும் கடந்த 75 வருடங்களாக ஓடிக்கொண்டிருக்கின்றன. இவர்கள் தற்போது தங்கள் பணியை முடுக்கி விட்டுள்ளனர். நாட்டை நேசிக்கும் மக்களுக்கு அவர்களின் செயல்பாடுகள் பெரும் சவாலாக மாறி வருகின்றன. நாம் விழிப்புடன் இருந்து மக்களை விழிப்படையச் செய்ய வேண்டும் என்பதை அனைவருக்கும் கூற விரும்புகிறேன்.
ஒவ்வொரு பொய்யையும் நாம் வெளிக்கொணர வேண்டும். இந்த அதிகார வெறி கொண்டவர்கள் பொதுமக்களிடம் பொய்களை மட்டுமே கூறியுள்ளனர். ஒவ்வொரு முறையும் முன்பைவிடப் பெரிய பொய்யைக் கொண்டு வருகிறார்கள். 2019-ல் அவர்கள் யாரை ‘திருடன்’ என்றார்களோ அந்த ‘காவலர்’ 2024-ல் நேர்மையாளராகிவிட்டார். ஏனெனில், ‘காவலரை’ ஒருமுறை கூட ‘திருடன்’ என்று அவர்களால் சொல்ல முடிவதில்லை. நாட்டு மக்களை எப்படியாவது தவறாக வழிநடத்தி ஆட்சியைப் பிடிப்பது மட்டுமே அவர்களின் ஒரே நோக்கம்” என தெரிவித்தார்.