மகாராஷ்டிரா சட்டமன்றத் தேர்தலில் பா.ஜ.க கூட்டணி அமோக வெற்றி பெற்றுள்ள போதிலும் ஆட்சியமைப்பதில் இழுபறி நீடித்து வருகிறது. முதல்வர் ஏக்நாத் ஷிண்டே மற்றும் ஆளும் கூட்டணியான மஹாயுதி கட்சித் தலைவர்கள் டெல்லியில் மத்திய அமைச்சர் அமித் ஷாவை நேற்று (நவம்பர் 28) இரவு சந்தித்துப் பேசினர். இந்த சந்திப்புக்குப் பிறகு நிருபர்களுக்குப் பேட்டியளித்த ஏக்நாத் ஷிண்டே, “அமித் ஷாவுடனான சந்திப்பு சாதகமாகவும், நன்றாகவும் இருந்தது. முதல்வர் பதவி தொடர்பாக மும்பையில் நடக்கும் மஹாயுதி கூட்டத்தில் முடிவு செய்யப்படும். புதிய அரசு அமைக்கும் விவகாரத்தில் பிரதமர் நரேந்திர மோடி மற்றும் அமித் ஷா எடுக்கும் முடிவுக்கு நான் தடையாக இருக்கமாட்டேன்” என்றார்.
இலாகா ஒதுக்கீடு தொடர்பாக இன்று (நவம்பர் 29) மும்பையில் முக்கிய பேச்சுவார்த்தை நடப்பதாக இருந்தது. இலாகா ஒதுக்கீடு தொடர்பாக நடந்த ஆரம்பக்கட்ட பேச்சுவார்த்தையில் தங்களுக்கு உள்துறை உட்பட 12 அமைச்சர் பதவி கொடுக்க வேண்டும் என்று ஏக்நாத் ஷிண்டே கேட்டுக்கொண்டார்.
ஆனால் உள்துறை அமைச்சகத்தை பா.ஜ.க வைத்துக்கொள்ளத் திட்டமிட்டுள்ளது. இதனால் இன்று மும்பையில் நடக்க இருக்கும் கூட்டத்தை ரத்து செய்துவிட்டு ஏக்நாத் ஷிண்டே தனது சொந்த ஊரான சதாராவிற்குப் புறப்பட்டுச் சென்றுவிட்டார். அவர் திரும்ப வந்த பிறகுதான் அடுத்த கட்ட பேச்சுவார்த்தை நடைபெறும் என்று பா.ஜ.க தலைவர்கள் தெரிவித்தனர். சிவசேனாவிற்குக் கொடுக்கப்படும் துணை முதல்வர் பதவியை ஏற்றுக்கொள்ள ஏக்நாத் ஷிண்டே தயாராக இல்லை என்று கூறப்படுகிறது. தனது கட்சியைச் சேர்ந்த ஒருவருக்கு அப்பதவியைக் கொடுக்க முடிவு செய்துள்ளார். அஜித்பவாருக்கு துணை முதல்வர் பதவியும் நிதித்துறையும் கொடுக்க பா.ஜ.க முடிவு செய்துள்ளது. ஏற்கனவே தேவேந்திர பட்னாவிஸ் முதல்வராக, தனது கட்சி ஆதரவு கொடுக்கும் என்று அஜித்பவார் குறிப்பிட்டு இருந்தார். புதிய அரசு வரும் 2ஆம் தேதி பதவியேற்கும் என்று பா.ஜ.க வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
இது குறித்து சிவசேனா எம்.பி. தையரியசீல் மானே கூறுகையில், ”ஏக்நாத் ஷிண்டே தொடர்ந்து மகாராஷ்டிரா அரசியலில் இருக்க முடிவு செய்துள்ளார். ஆனால் தனது மகனுக்கு மத்திய அமைச்சரவையில் வாய்ப்பு கொடுக்கும்படி கேட்டுக்கொள்வார் என்று தெரிகிறது. அமைச்சரவையில் முக்கிய இலாகா குறித்து கூட்டணித் தலைவர்கள் சந்தித்துப் பேசியிருக்கின்றனர். இவ்விவகாரத்தில் இரண்டு நாளில் ஒரு தெளிவு கிடைக்கும்” என்றார்.
நீங்கள் விரும்பி படித்த தொடர்கள், இப்போது ஆடியோ வடிவில்… புத்தம் புதிய விகடன் ப்ளே… உங்கள் அன்றாட பணிகளை கவனித்துக் கொண்டே ரசித்து கேட்க, உடனே இன்ஸ்டால் செய்யுங்கள்…