புதுடெல்லி: விபத்தைத் தவிர்ப்பதில் முக்கிய பங்காற்றும் கவாச் தொழில்நுட்பம் தென் மத்திய மற்றும் வடக்கு ரயில்வேயில் சுமார் 1548 கிலோமீட்டர் தொலைவுக்கு செயல்படுத்தப்பட்டுள்ளது. டெல்லி – மும்பை, டெல்லி – ஹவுரா மார்க்கத்தில் சுமார் 3000 கிலோ மீட்டர் ரயில் பாதையில் கவாச் தொழில் நுட்பத்தை செயல்படுத்தும் பணிகள் நடந்து வருகிறது என்று மாநிலங்களவையில் திமுக எம்.பி. கனிமொழி என்.வி.என்.சோமு எழுப்பிய கேள்விக்கு, ரயில்வேத் துறை அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் பதிலளித்துள்ளார்.
நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் நடைபெற்று வருகிறது. மாநிலங்களவையில் திமுக எம்.பி. கனிமொழி என்.வி.என்.சோமு, கடந்த ஓராண்டில் நடைபெற்ற ரயில் விபத்துக்கள், அதற்கான காரணம், பலியானவர்கள் எத்தனை பேர்? இனி விபத்துக்கள் நடக்காமல் இருக்க எடுக்கப்பட்ட நடவடிகைகள் என்ன என்பது குறித்து கேள்வி எழுப்பி இருந்தார்.
அதற்கு மத்திய ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ், “ரயில் பயண பாதுகாப்புக்காக மத்திய அரசு எடுத்துவரும் தொடர் நடவடிக்கைகள் காரணமாக கடந்த பத்தாண்டுகளில் ரயில் விபத்துக்கள் வெகுவாகக் குறைந்துள்ளன. 2014-15 ம் ஆண்டில் 135 விபத்துக்களாக இருந்தது, 2023-24 ம் ஆண்டு 40 விபத்துகளாகக் குறைந்துள்ளது. 2004-14 காலகட்டத்தில் 1711 ரயில் விபத்துக்கள் மூலம் 904 பேர் பலியாகினர். 3155 பேர் காயமடைந்தனர். கடந்த பத்தாண்டுகளில் அரசு எடுத்த நடவடிக்கைகள் காரணமாக 2014-24 காலகட்டத்தில் 678 விபத்துக்களாக அது குறைந்தது. இதில்; 748 பேர் பலியாகினர். 2087 பேர் காயமடைந்தனர்.
கடந்த ஓராண்டில் ஏற்பட்ட 29 விபத்துகள் மூலம் 17 பேர் பலியாகினர்; 71 பேர் காயமடைந்தனர். மனித உயிர்களுக்கு ஏற்பட்ட சேதங்களுடன் ரயிவேக்கும் விபத்துக்களால் இழப்பு ஏற்படுகிறது. கடந்த ஐந்தாண்டுகளில் விபத்துக்களால் ரயில்வேக்கு ஏற்பட்ட இழப்பு 313 கோடி ரூபாய்.விபத்துக்களால் உயிரிழப்பு மற்றும் காயமடைந்தவர்களுக்கான இழப்பீட்டை ரயில்வே நடுவர் மன்றம் முடிவு செய்கிறது. கடந்த ஓராண்டில் மட்டும் இழப்பீடாக 26.22 கோடி ரூபாய் வழங்கப்பட்டுள்ளது.
ஒவ்வொரு விபத்தின்போதும், அதற்கான காரணங்களைக் கண்டறிய நிபுணர் குழு அமைக்கப்படுகிறது. அந்த அறிக்கையின்படி மேல் நடவடிக்கைகள் எடுக்கப்படுகின்றன. பெரும்பாலான ரயில் விபத்துகளுக்கு ரயில் பெட்டிகள், பாதைகள், கருவிகள் பழுதாவது மற்றும் மனிதத் தவறுகளே முக்கிய காரணம். இவற்றை சரிசெய்யவும், பாதுகாப்பான ரயில் பயணத்தை உறுதி செய்யவும் இந்த ஆண்டு பட்ஜெட்டில் ஒரு லட்சத்து எட்டாயிரம் கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
ரயில் பாதை புனரமைப்பு, புதிய கருவிகள் வாங்குவது, தேவையான இடங்களில் பாலங்கள் கட்டுவது போன்ற பணிகள் இந்த நிதியிலிருந்து மேற்கொள்ளப்படும். ரயில் பாதைகளை அமைக்கும் பணியில் தானியங்கி இயந்திரங்களைப் பயன்படுத்துவதன் மூலம் அந்தப் பணியில் மனிதத் தவறுகளுக்கு வய்ப்பில்லாத நிலையை அரசு ஏற்படுத்தியிருக்கிறது. மனிதத் தவறுகளால் ஏற்படும் விபத்துக்களைக் குறைக்கும் வகையில் நாடு முழுவதும் 6608 ரயில் நிலையங்களில் எலெக்ட்ரானிக் இன்டர் லாக்கிங் சிஸ்டம் அமல்படுத்தப்பட்டுள்ளது.
சுமார் பதினோராயிரம் லெவல் கிராசிங்குகளிலும் இந்த சிஸ்டம் அமல்படுத்தப்பட்டதன் மூலம் பெருமளவு விபத்தைக் குறைக்க முடிகிறது.பனிக்காலத்தில் ரயில் டிரைவர்களுக்கு உதவும் வகையில் ஜிபிஎஸ் கருவி உதவியிலான பாதுகாப்பு கருவிகள் வழங்கப்பட்டுள்ளன. ஆளில்லாத லெவல் கிரஸிங்கே இல்லை என்ற நிலையை ஐந்தாண்டுகளுக்கு முன்பே எட்டிவிட்டோம். அடிமட்ட பாலங்கள், மேம்பாலங்கள் போன்றவற்றை அமைத்து பணியாளர் உள்ள சுமார் ஏழாயிரம் லெவல் கிராஸிங்குகள் நீக்கப்பட்டுள்ளன.
விபத்தைத் தவிர்ப்பதில் முக்கிய பங்காற்றும் கவாச் தொழில்நுட்பம் தென் மத்திய மற்றும் வடக்கு ரயில்வேயில் சுமார் 1548 கிலோமீட்டர் தொலைவுக்கு செயல்படுத்தப்பட்டுள்ளது. டெல்லி – மும்பை, டெல்லி – ஹவுரா மார்க்கத்தில் சுமார் 3000 கிலோ மீட்டர் ரயில் பாதையில் கவாச் தொழில் நுட்பத்தை செயல்படுத்தும் பணிகள் நடந்து வருகின்றன. இதுதவிர ரயில் பாதைகளில் தொடர்ச்சியான ரோந்துப் பணிகளும் தொய்வின்றி நடக்கின்றன. இதில் ரயில் பாதைகளில் ஏற்படும் விரிசல்கள் கண்டறியப்பட்டு சரிசெய்யப்படுகிறது,” என்று அவர் பதில் அளித்துள்ளார்.