கஞ்சா கடத்தல் வழக்கில் கைதான கர்ப்பிணி பெண்ணுக்கு பிரசவத்துக்காக 6 மாதம் ஜாமீன் வழங்க மும்பை உயர் நீதிமன்றத்தின் நாக்பூர் கிளை உத்தரவிட்டுள்ளது.
ரயில்வே பாதுகாப்பு படை போலீஸா் கடந்த ஏப்ரல் மாதம் ரயிலில் நடத்திய சோதனையில் ஒரு கும்பல் கஞ்சா கடத்தியது தெரியவந்தது. அவர்களிடமிருந்து 33 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டன. அவர்களில் ஒரு பெண் சுர்பி சோனி. அவரது பைகளில் 7 கிலோ கஞ்சா இருந்தது. கைது செய்யப்பட்டபோது அவர் 2 மாத கர்ப்பிணியாக இருந்தார்.
தற்போது அவர் பிரசவத்துக்காக தன்னை ஜாமீனில் விடுவிக்க வேண்டும் என மும்பை உயர்நீதிமன்றத்தின் நாக்பூர் கிளையில் மனுத்தாக்கல் செய்தார். இந்த மனு நீதிபதி ஊர்மிளா ஜோஷி-பால்கே முன் விசாரணைக்கு வந்தது. இவரை ஜாமீனில் விட எதிர்ப்பு தெரிவித்த அரசு தரப்பு வழக்கறிஞர், பிரசவத்துக்கு தேவையான சிகிச்சையை சிறை நிர்வாகமே பார்த்துக் கொள்ளும் என்றார்.
அதன்பின் நீதிபதி ஊர்மிளா அளித்த தீர்ப்பில் கூறியதாவது: குற்றவாளி சுர்பி சோனிக்கு போலீஸ் பாதுகாப்புடன் அரசு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்க முடியும் என்பது உண்மைதான். ஆனால் சிறைச் சூழலில் குழந்தை பெற்றுக்கொள்வது தாயுக்கும், குழந்தைக்கும் நிச்சயம் பாதிப்பை ஏற்படுத்தும். அதை கண்டுகொள்ளாமல் இருக்க முடியாது. கண்ணியத்திற்கான உரிமை சிறைக் கைதிக்கும் உண்டு. இந்த விஷயத்தில் மனிதாபிமான முறையில் நடவடிக்கை எடுக்க வேண்டும். விசாரணை, குற்றப்பத்திரிகை தாக்கல் ஆகியவை முடிவடைந்து விட்டதால், சுர்பி சோனியை ஜாமீனில் விடுவதால் எந்த பிரச்சினையும் இல்லை. அவருக்கு 6 மாத ஜாமீன் வழங்கப்படுகிறது. இவ்வாறு நீதிபதி ஊர்மிளா உத்தரவிட்டார்.