புதுடெல்லி: இந்தியா மற்றும் ரஷ்யா இணைந்து உருவாக்கிய பிரம்மோஸ் சூப்பர்சோனிக் ஏவுகணையை வாங்க யுஏஇ, வியட்நாம், இந்தோனேசியா ஆகிய 3 நாடுகள் விருப்பம் தெரிவித்துள்ளன.
இந்தியாவும் ரஷ்யாவும் இணைந்து பிரம்மோஸ் சூப்பர்சோனிக் ஏவுகணையை தயாரித்துள்ளன. இந்தியாவின் டிஆர்டிஓ ரஷ்யாவின் என்பிஓ ஆகியவை இணைந்து இதை தயாரிக்கின்றன. இந்தியாவின் பிரம்மபுத்ரா மற்றும் ரஷ்யாவின் மோஸ்கா ஆறுகளின் பெயரை தழுவி பிரம்மோஸ் என பெயரிடப்பட்டுள்ளது.
நிலம் மற்றும் போர்க்கப்பல்களில் இருந்து இதை ஏவ முடியும். ஒலியைப் போல 3 மடங்கு வேகத்தில் சீறிப் பாயும் இது, இந்திய ராணுவம், கடற்படை மற்றும் விமானப்படையில் சேர்க்கப்பட்டுள்ளன.
ரூ.3,100 கோடி: இந்த பிரம்மோஸ் ஏவுகணையை வாங்க பல நாடுகள் விருப்பம் தெரிவித்து வருகின்றன்றன. அந்த வகையில் பிரம்மோஸ் ஏவுகணையை வாங்க ரூ.3,100 கோடி மதிப்பிலான ஒப்பந்தத்தில் பிலிப்பைன்ஸ் கையெழுத்திட்டுள்ளது. இது முதல் சர்வதேச ஒப்பந்தம் ஆகும். முதல் தொகுப்பு இந்த ஆண்டின் தொடக்கத்தில் பிலிப்பைன்ஸ் வசம் ஒப்படைக்கப்பட்டது.
பேச்சுவார்த்தை: இந்நிலையில், வியட்நாம், இந்தோனேசியா மற்றும் ஐக்கிய அரபு அமீரகம் (யுஏஇ) ஆகிய 3 நாடுகள், பிரம்மோஸ் ஏவுகணையை வாங்க ஆர்வமாக உள்ளதாக, பிரம்மோஸ் ஏரோஸ்பேஸ் நிறுவனத்தின் இணை நிர்வாக இயக்குநர் அலெக்சாண்டர் மாக்சிசேவ் ரஷ்ய செய்தி நிறுவனத்திடம் (டாஸ்) தெரிவித்துள்ளார். இந்த 3 நாடுகளுடன் பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாகவும் விரைவில் ஒப்பந்தம் கையெழுத்தாகும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
பிலிப்பைன்ஸ், இந்தோனேசியா, வியட்நாம், சவுதி அரேபியா, ஐக்கிய அரபு அமீரகம் மற்றும் தென்னாப்ரிக்கா ஆகிய நட்பு நாடுகள் பிரம்மோஸ் ஏவுகணையை வாங்கும் என கடந்த 2021-ல் இந்திய அரசு தெரிவித்திருந்தது. அந்த பட்டியலில் பின்னர் அல்ஜீரியா, கிரீஸ் மற்றும் மலேசியா போன்ற நாடுகளும் இடம்பெற்றன. இதுபோல, தென் கொரியா, எகிப்து மற்றும் தாய்லாந்து உள்ளிட்ட பல நாடுகளின் பிரதிநிதிகள் பிரம்மோஸ் ஏவுகணையை வாங்க ஆர்வம் கொண்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.