விசிக துணை பொதுச்செயலாளர் ஆதவ் அர்ஜுனா நிறுவனத்தின் அம்பேத்கர் குறித்த நூலை தவெக தலைவர் விஜய் வெளியிடுகிறார். இந்த விழாவை விசிக தலைவர் திருமாவளவன் புறக்கணித்துள்ளார்.
வார இதழ் மற்றும் விசிக துணை பொதுச்செயலாளர் ஆதவ் அர்ஜுனாவின் நிறுவனம் சார்பில் ‘எல்லோருக்குமான தலைவர் அம்பேத்கர்’ என்ற தொகுப்பு உருவாக்கப்பட்டுள்ளது. இத்தொகுப்புக்கு நீதிபதி சந்துரு, இந்து என்.ராம், விசிக தலைவர் திருமாவளவன், விசிக துணை பொதுச்செயலாளர் ஆதவ் அர்ஜுனா உட்பட 36 பேர் பங்களிப்பு செய்துள்ளனர். சென்னையில் வரும் டிச.6-ம் தேதி நடைபெறவுள்ள இந்நூல் வெளியீட்டு விழாவில் திருமாவளவன் பங்கேற்க இருந்த நிலையில், தவெக தலைவர் விஜய்க்கும் அழைப்பு விடுக்கப்பட்டது.
இதையடுத்து திமுகவை கடுமையாக விமர்சித்த விஜய்யும், திமுக கூட்டணியில் உள்ள விசிக தலைவர் திருமாவளவனும் ஒரே நிகழ்ச்சியில் பங்கேற்பதாக தகவல் வெளியாகி அரசியல் களத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது. இதற்கு பதிலளிக்கும் வகையில் நீண்ட அறிக்கையை திருமாவளவன் வெளியிட்டிருந்தார். அதில் கூறியிருப்பதாவது: கடந்த ஏப்ரலில் அம்பேத்கர் பிறந்தநாளையொட்டி நூலை வெளியிடுவதாக பதிப்பகத்தார் திட்டமிட்டனர். அப்போதே நான் அதில் பங்கேற்பதாக உறுதியளித்துவிட்டேன்.
மேலும் முதல்வர் ஸ்டாலின், காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி உள்ளிட்டோரை அழைக்க திட்டமிட்டிருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து நினைவு நாளையொட்டி விழா நடைபெறும் என அறிவித்து அழைப்பு கடிதத்தை அளித்தபோது நடிகர் விஜய்யும் நூல்வெளியீட்டு விழாவில் பங்கேற்கவிருக்கிறார் என்பதை கூறினர். அப்போதைய சூழலில் நடிகர் விஜய்யின் கட்சி மாநாடு நடைபெறவில்லை. தற்போது விஜய்யின் மாநாட்டு உரை தமிழக அரசியலில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்தச் சூழலை ஒரு வாய்ப்பாகப் பயன்படுத்தி சிலர் “மொட்டைத் தலைக்கும் முழங்காலுக்கும் முடிச்சுப் போட்டனர்” என தெரிவித்திருந்தார். மேலும், மாற்றுக் கருத்து அல்லது முரண்பாடான நிலைப்பாடு கொண்ட இன்னொரு கட்சியின் தலைவரோடு ஒரு நூல்வெளியீட்டு விழாவில் பங்பேற்பதாலேயே நாம் அணி மாறிவிடுவோம் என்பது என்ன வகையான உளவியல் என கேள்வியெழுப்பியதன் மூலம் அவர் விழாவில் கட்டாயம் பங்கேற்பார் என்பதை மறைமுகமாக உறுதி செய்வதாகவே பேசப்பட்டது.
இதையடுத்து விசிக மீது திமுக தலைமை அதிருப்தியில் இருப்பதாகவும், விழாவில் பங்கேற்க வேண்டாம் என திருமாவளவனுக்கு திமுக தரப்பில் மறைமுகமாக அழுத்தம் கொடுக்கப்பட்டதாகவும் கூறப்படுகிறது. இந்த சூழலில் திருமாவளவன் பங்கேற்ற அனைத்து நிகழ்ச்சிகள், தொண்டர்களுக்கு ஆற்றிய முகநூல் உரை ஆகியவற்றில் கூட்டணியில் தொடர்வதை மீண்டும் மீண்டும் உறுதிப்படுத்தும் நெருக்கடிக்கு திருமாவளவன் ஆளானார்.
இந்நிலையில் தற்போது வெளியாகியுள்ள விழாவின் அழைப்பிதழில் விசிக தலைவர் திருமாவளவன் பெயர் இடம்பெறவில்லை. இதன்மூலம் அவர் அம்பேத்கர் நூல் வெளியீட்டு விழாவை புறக்கணித்திருப்பது உறுதியாகியுள்ளது. விழாவில், தவெக தலைவர் விஜய் நூலை வெளியிட நீதிபதி கே.சந்துரு, அம்பேத்கரின் உறவினர் ஆனந்த் டெல்டும்டே ஆகியோர் பெறுகின்றனர். விசிக துணை பொதுச்செயலாளர் ஆதவ் அர்ஜுனா நூலின் நோக்கவுரையாற்றுகிறார்.
இதுகுறித்து விசிக நிர்வாகிகள் கூறும்போது, “அண்மையில் நடைபெற்ற வழக்கறிஞர்கள் நிகழ்ச்சியில் அதிமுக விடுத்த கூட்டணி அழைப்பை மேடையிலேயே திருமாவளவன் நிராகரித்தார். ஆனால், இவ்விழாவில் பங்கேற்றால் இறுதியாக விஜய் பேசும் நிலையில் திமுக மீதான அவரது விமர்சனத்துக்கு மேடையில் பதிலளிக்க முடியாத சூழல் உருவாகும். இது கூட்டணியில் மேலும் சலசலப்பை ஏற்படுத்தும் என்பதால் விழாவில் பங்கேற்க விசிக தலைவர் மறுத்திருக்கலாம்” என்றனர்.