மத்திய அரசின் பாதுகாப்புத்துறை நிறுவனமான டிஆர்டிஓ-வின் ரகசிய ஆவணங்களுடன் திரிணமூல் காங்கிரஸ் கட்சியின் பிரமுகர் கணவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
மேற்கு வங்க மாநிலம் டார்ஜிலிங்கை சேர்ந்தவர் அம்ரிதா எக்கா. இவர் திரிணமூல் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவராக இருக்கிறார். இவரது கணவர் பிரான்சிஸ் எக்கா.
இந்நிலையில் டார்ஜிலிங் பகுதியில் பிரான்சிஸ் எக்காவின் வீட்டில், டிஆர்டிஓ ரகசிய ஆவணங்கள், கோடிக்கணக்கான ரேடியோ கதிர்வீச்சு கருவிகளுடன் பிடிபட்டார். இதையடுத்து அவரை போலீஸார் கைது செய்துள்ளனர்.
இதுகுறித்து பாஜக தேசிய செய்தித் தொடர்பாளர் ஷெசாத் பூனாவாலா டெல்லியில் செய்தியாளர்களிடம் கூறியதாவது: தேசத்தின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் விடுக்கும் வகையில் திரிணமூல் காங்கிரஸ் கட்சியின் செயல்பாடுகள் உள்ளன. ஆபத்து மிகுந்த அணு சக்தி பொருட்கள், டிஆர்டிஓ ஆவணங்கள் திரிணமூல் காங்கிரஸ் கட்சித் தலைவரின் வீட்டில் இருந்துள்ளது. இதையடுத்து பிரான்சிஸ் எக்கா கைது செய்யப்பட்டுள்ளார்.
தேசப் பாதுகாப்பு சம்பந்தமான முக்கியமான ஆவணங்கள், ரேடியோ கதிர்வீச்சு கருவிகள் திரிணமூல் காங்கிரஸ் கட்சித் தலைவர் வீட்டுக்குச் சென்றது எப்படி? இதன்மூலம் அக்கட்சியினர் தேச விரோத நடவடிக்கையில் ஈடுபட்டு வருகிறார்கள் என்பது தெரியவந்துள்ளது.
ரோஹிங்கியா முஸ்லிம்களை, நமது நாட்டில் ஊடுருவ திரிணமூல் காங்கிரஸ் கட்சி அனுமதித்து வருகிறது. அவர்களுக்கு இங்கு புகலிடம் தருகிறது அந்தக் கட்சி. இதுதொடர்பாக மேற்கு வங்க அரசு தீவிர விசாரணை நடத்தவேண்டும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.