நாட்டில் தடை செய்யப்பட்ட அமைப்பான விடுதலைப் புலிகள் அமைப்பின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனின் புகைப்படங்கள் மற்றும் காணொளிகள் முகநூல் ஒன்றினூடாக வெளியிடப்பட்டமை, மற்றும் கடந்த வருடங்களில் விடுதலைப்புலிகள் அமைப்பின் மாவீரர் தின கொண்டாட்டங்களின் போது எடுக்கப்பட்ட பழைய காணொளிகள், இந்த ஆண்டு கொண்டாடப்பட்ட நினைவேந்தல் தினம் என்று வெளிப்படுத்தி, முகநூல் வழியாக வதந்திகளை வெளியிட்டமை தொடர்பில் விசாரணைகளை மேற்கொண்டதில், குற்றப் புலனாய்வுத் திணைக்களம் மற்றும் பயங்கரவாதப் புலனாய்வுப் பிரிவின் யாழ்ப்பாணப் பிரிவினரால் சந்தேகத்தின் பேரில் மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர் என்று பொலிஸ் ஊடகப்பிரிவு அறிவித்துள்ளது.
கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள் 28, 35 மற்றும் 45 வயதுடைய மருதானை, சுன்னாகம் மற்றும் பத்தேகம ஆகிய பிரதேசங்களைச் சேர்ந்தவர்கள் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பொதுமக்களின் எதிர்ப்பைத் தூண்டுதல், தூண்டுவதற்கு முயற்சித்தல் மற்றும் தடைசெய்யப்பட்ட அமைப்பின் செயற்பாடுகளை ஊக்குவிக்கும் விதத்தில் முகநூல் ஊடாக பொய்யான பிரச்சாரங்களை மற்றும் காணொளிகளை வெளியிடுதல் ஆகியவற்றின் அடிப்படையில், தண்டனைச் சட்டக் கோவையின் 120 மற்றும் 1979 ஆம் ஆண்டின் 48 ஆம் இலக்க பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தின் தற்காலிக ஏற்பாடுகளின் 27ஆம் பிரிவுக்கமைய குற்றப்புலனாய்வுத் திணைக்களம் மற்றும் பயங்கரவாத புலனாய்வு பிரிவினரால் கைது செய்யப்பட்டு மேலதிக விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக பொலிஸ் ஊடகப் பிரிவு வெளியிட்டுள்ள அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.