ப்ப்ச்’விடுதலை 2′ திரைப்படத்தில் இளையாராஜாவின் இசையில் உருவாகியிருக்கும் `தினந்தினமும்’, `மனசுல’ ஆகிய இரண்டு மெல்லிசை பாடல்கள் பலரின் மனதையும் வருடிக் கொண்டிருக்கின்றன. மற்றொரு பக்கம் புரட்சிகரமான வரிகளில் கனல் போல வெளியாகியிருக்கிறது `பொறுத்தது போதும்’ பாடல். இந்தப் பாடலை ராப் பாடகர் யோகி.பி பாடியிருக்கிறார். தனது வழக்கமான ராப் வரிசைகளிலிருந்து வெளிவந்து, இப்பாடலைப் பாடியிருக்கிறார் யோகி.பி. மலேசியாவில் வசிக்கும் அவரை வீடியோ காலில் தொடர்புக் கொண்டு வாழ்த்துகளைக் கூறி சாட் போட்டோம்.
இளையராஜா இசையில… அதுவும் ராப் இல்லாமல் ஒரு பாடலைப் பாடியிருக்கீங்க… இந்த பாடல் அமைஞ்சது எப்படி?
எனக்கு வெற்றி மாறன் சார்தான் கால் பண்ணி அழைச்சாரு. அப்போ அவர் `விடுதலை – 2′ திரைப்படத்தைதான் டைரக்ட் பண்ணீட்டு இருந்தாரு. இருந்தாலும் ஒரு தெளிவுக்காக எந்த படத்துக்குனு கேட்டுகிட்டேன். ஏன்னா, அவர் நிறைய படங்கள் லைன் அப்ல வச்சிருக்கிறார். அப்புறம் அவர் `விடுதலை 2′ திரைப்படத்துக்கான பாடல்னு சொன்னதும் நான் ஷாக் ஆகிட்டேன். அந்த அதிர்ச்சியில இருந்து மீள்வதற்குள்ள அடுத்த அதிர்ச்சி ஒன்னு வந்தது. ஆமா, அப்போதான் படத்துக்கு ராஜா சார் மியூசிக் போடுறார்னு நினைவுக்கு வந்து இன்ப அதிர்ச்சியில உட்கார்ந்துட்டேன்.
வெற்றி மாறன் சார் எப்போ பாடல் பாடுறதுக்கு கேட்டாலும் நான் நோ சொல்லமாட்டேன். ஆனால், ஒரே ஒரு முறை நோ சொன்னேன். நான் இந்த மாதிரியான பாடல்கள் என் கரியர்ல பண்ணக்கூடாதுனு வச்சிருக்கேன். அந்த வரைமுறைய மீறும் பாடல்கள நான் பாட மாட்டேன். அப்ப ஒரு தடவ வெற்றிமாறன் ஒரு பாடல் பாட சொல்லி கேட்டார். ஆனால், அந்த பாடல் அப்படியான வரிசையில இருக்குனு சொன்னதும் வெற்றி சாரும் புரிஞ்சுகிட்டு வேணாம்னு சொல்லிட்டார். அதுக்கு அப்புறம் விடுதலை பார்ட் 2க்காக இந்த `பொறுத்தது போதும்’ பாடலுடைய டிராக் அனுப்பினாங்க. நானும் வெற்றி சார்கிட்ட இந்த பாடல்ல எந்த பகுதியில ராப் பண்ணனும்னு கேட்டேன். அவர் ` ராப் இல்லை. இந்த பாடலை நீங்கதான் பாடணும்’னு சொல்லி அதிர்ச்சியைக் கொடுத்திட்டார். எனக்கு ராப் இல்லாம் பாட தெரியாதுனு முதல்ல சொன்னேன். அந்த சூழலுக்கான பாடல்ல என்னுடைய குரல் இருந்தால் நல்லா இருக்கும்பு நினைச்சு கூப்பிட்டார். முயற்சி பண்ணுவோம்னு சென்னைக்குக் கிளம்பி வந்துட்டேன். ராஜா சார் ஸ்டுடியோவுக்கு போனதும் அவருடைய சுவரோவியம் ஒண்ணு அழகாக இருந்தது. ராஜா சாரை நேர்ல பார்க்கிறது ஆசீர்வாதமாக நினைச்சு பார்த்துட்டு இருந்தேன். அப்புறம் ரெக்கார்டிங்… இப்போ முழு பாடல் ரொம்பவே அருமையாக வந்திருக்கு.
ராஜா சார் பாடல் பாடுறதுக்கு முன்னாடியும் பாடல் பாடினதுக்குப் பிறகும் என்னென்ன விஷயங்கள் சொன்னார்?
அவர் எதுவுமே சொல்லல. அவர் மிகவும் அமைதியான நபர். சாரோட மகள் பவதாரணி இறந்த இரண்டு வாரங்கள்ல ராஜா சார் இந்த பாடலோட ரெக்கார்டிங்கிற்கு வந்துட்டார். இந்த பாட்டோட டியூன் முதலிலேயே கேட்டுட்டேன். அதன்பிறகு மொத்த பாடலையும் மிக்ஸிங் பண்ணினதுக்குப் பிறகு இப்போ கேட்கும்போது ரொம்ப அற்புதமாக இருந்தது. ராஜா சார் கைப்பட்டாலே அந்த டியூன் உலக லெவல்தான். இந்த சந்திப்பின்போது `மடை திறந்து’ பாடலைப் பற்றி எதுவுமே நான் பேசல. அந்தச் சூழலும் அப்போ இல்லை. அவருடைய சிம்போனியை அவர் முடிக்கணும். `விடுதலை 2′ படத்துக்கான வேலைகளை அவர் முடிக்கணும். இத்தனை வேலைகளும் அவருக்கு இருக்கு. அதை எண்ணி அவருடைய எண்ணத்துக்கு ஒரு இடைவெளி கொடுக்கணும்னு நினைச்சேன்.
பொல்லாதவன், ஆடுகளம்.. இப்போ விடுதலை… வெற்றி மாறன் உங்க மேல இப்படியான நம்பிக்கை வைக்கிறதுக்கு என்ன காரணம்?
என்னுடைய `மடை திறந்து’ பாடலும் என்னுடைய குரலும் அவருக்குப் பிடிக்கும்னு அப்போவே சொல்லியிருக்கார். இப்போ இந்தப் படத்துக்குப் புரட்சிகரமான வரிகளுக்கு என்னுடைய குரல் ஒரு வெறியைக் கொடுக்கும்னு நினைச்சுதான் எனக்கு கால் பண்ணினார். வெற்றி சார் கலை தொடர்பான அத்தனை விஷயங்களையும் ரசிப்பவர். அவர் நடக்குற அத்தனை விஷயங்களையும் நல்லா கவனிப்பார். ஒரு முறை லூடே கிறிஸ் என்கிற ஒரு ராப் பாடகரோட பாடல் சி.டியை ரெக்கார்டிங் ஸ்டுடியோவுல வச்சுட்டு போயிட்டேன். அதன்பிறகு அந்த சி.டி-யின் கவரை பார்த்த வெற்றி மாறன்`எங்கேயும் எப்போதும்’ பாடல்ல தனுஷூக்கு அந்த ராப் பாடகர் மாதிரியே ஹேர் ஸ்டைல் வச்சார். என்னுடைய குரல்ல இருக்கிற தன்மை அவரோட படங்கள்ல தேவைப்படும்போது எனக்கு கால் பண்ணி `உங்களுடைய குரல் தேவைப்படுது’னு சொல்வார். அவருடைய அத்தனை படங்களுக்கும் நான் மிகப்பெரிய ரசிகன்.
பொல்லாதவன் திரைப்படத்துக்கு உங்களைத் தேர்ந்தெடுத்ததற்கான காரணத்தை வெற்றி மாறனும் ஜி.வி.யும் சொல்லியிருக்காங்களா?
`பொல்லாதவன்’ திரைப்படத்துக்கு வெற்றி சார் ஒரு தனித்துவமான முடிவு எடுத்திருந்தார். அந்தப் படத்துக்கு அற்புதமான இசையை ஜி.வி கொடுத்திருந்தார். அந்தப் படத்துல வர்ற `எங்கேயும் எப்போதும்’ பாடலை நான்தான் மியூசிக் டைரக்ஷன் பண்ணினேன். `படிச்சு பார்த்தேன் ஏறவில்லை’ பாடலை தீனா சார் மியூசிக் டைரக்ஷன் பண்னியிருந்தார். நான்தான் `எங்கேயும் எப்போதும்’ பாடலை ரீமிக்ஸ் பண்ணி மியூசிக் டைரக்ஷன் பண்ணனும்னு வெற்றி சார் அப்போ என்கிட்ட சொன்னார். அந்தப் பாடலை யுகபாரதி சார் எழுதியிருந்தார். நான் ஆங்கில ராப் வரிகளை எழுதினேன். ராப் சந்தத்துக்கேற்ப வெற்றி சார் சொல்ல சொல்ல யுகபாரதி எழுதியதெல்லாம் மறக்கமுடியாத அனுபவம். ஒரு கவிஞரோட உட்கார்ந்து என்னுடைய ராப் சந்ததுக்கு அவர் வரிகள் கட்டமைச்சதெல்லாம் அற்புதமான விஷயம். யுகபாரதி சார் ஒரு மேஜிக்தான்.
`மடை திறந்து’ பாடலோட ஒரிஜினல் வெர்ஷன் எஸ்.பி.பி பாடியிருப்பார். `எங்கேயும் எப்போதும்’ பாடல் ரெக்கார்டிங் சமயத்துல ரீமிக்ஸ் பண்ணினதைப் பற்றி பேசியிருக்கீங்களா?
பேசியிருக்கேனே… அது ஒரு ஆசீர்வாதம்தான். முன்னாடி இருந்த ஜாம்பவான்களுக்கு ரீமிக்ஸ் பண்றது பிடிக்காது. ஆனால், இந்த விஷயத்துல நான் தப்பிச்சேன்னு நினைக்கிறேன். மடை திறந்து பாடல் ஹிட்டாகிடுச்சு. இந்த `எங்கேயும் எப்போதும்’ பாடலுக்குப் பிறகு எஸ்.பி.பி சார்கூட சேர்ந்து ஒரு விளம்பரப் படம் பண்ணினேன். அவர்கூட இருக்கிறதே எனக்கு ஒரு ஆசீர்வாதம்தான். எஸ்.பி.பி சார் அந்த ரீமிக்ஸ் பாடலை வெறுப்பாக நினைக்கவேயில்ல. அதன்பிறகு என்னுடைய ராப் பாடல்கள் பற்றி கங்கை அமரன் சார்கிட்ட பேசினதாக என்னுடைய நண்பர் மூலமாக நான் தெரிஞ்சுகிட்டேன்.
நீங்கள் விரும்பி படித்த தொடர்கள், இப்போது ஆடியோ வடிவில்… புத்தம் புதிய விகடன் ப்ளே… உங்கள் அன்றாட பணிகளை கவனித்துக் கொண்டே ரசித்து கேட்க, உடனே இன்ஸ்டால் செய்யுங்கள்…