டாலருக்கு எதிராக செயல்பட்டால் பிரிக்ஸ் நாடுகளுக்கு 100 சதவீத வரி: ட்ரம்ப் எச்சரிக்கை

சர்வதேச வர்த்தகத்தில் டாலருக்கு மாற்றாக புதிய கரன்சியை கொண்டு வர திட்டமிட்டால் பிரிக்ஸ் நாடுகளின் மீது 100 சதவீத வரி விதிக்கப்படும் என்று புதிய அமெரிக்க அதிபராக தேர்வாகியுள்ள டொனால்டு ட்ரம்ப் மிரட்டல் விடுத்துள்ளார்.

இதுகுறித்து அவர் தனது சொந்த சமூக வலைதளமான ட்ரூத் சோஷியலில் சனிக்கிழமை வெளியிட்டுள்ள பதிவில் கூறியுள்ளதாவது: பிரேசில், ரஷ்யா, இந்தியா, சீனா, தென் ஆப்பிரிக்கா இவற்றுடன் சேர்த்து புதிய உறுப்பினர்களான ஈரான், எகிப்து, எத்தியோப்பியா, மற்றும் ஐக்கிய அரபு அமீரகம் (யுஏஇ) ஆகியவையும் பிரிக்ஸ் கூட்டணியில் இடம்பெற்றுள்ளது. இந்த நாடுகளின் கூட்டணி அமெரிக்க டாலருக்கு மாற்றாக புதிய பிரிக்ஸ் கரன்சியை உருவாக்கவோ அல்லது ஏதாவது ஒரு கரன்சியை மாற்றாக கொண்டு வர மாட்டோம் என்கிற உறுதிமொழியை அவர்கள் அமெரிக்காவுக்கு அளிக்க வேண்டும். அப்படி செய்யவில்லை என்றால் பிரிக்ஸ் கூட்டணி மற்றும் அதற்கு ஆதரவளிக்கும் நாடுகள் 100 சதவீத வரிவிதிப்பை எதிர்கொள்ள தயாராக இருக்க வேண்டும்.

டாலருக்கு மாற்றான கரன்சியை கொண்டு வரும் நடவடிக்கையில் ஈடுபட்டால் பிரிக்ஸ் நாடுகள் அமெரிக்க பொருளாதாரத்தை அணுகும் வாய்ப்பை இழக்க நேரிடும். அவர்கள் அனைவரும் தங்களது பொருட்கள் அல்லது தயாரிப்புகளை அற்புதமான அமெரிக்க பொருளாதாரத்தில் விற்பனை செய்வதற்கு குட்பை சொல்ல நேரிடும்.

சர்வதேச வர்த்தகத்தில் டாலருக்கு மாற்றாக வேறு ஒரு கரன்சியை உருவாக்கும் பிரிக்ஸ் நாடுகளின் நோக்கம் ஒருபோதும் வெற்றி பெறாது. அப்படி செய்யும் நாடுகளுக்கு அமெரிக்க பொருளாதாரத்தில் நிச்சயம் இடமில்லை. இவ்வாறு ட்ரம்ப் தனது பதிவில் தெரிவித்துள்ளார்.

ரஷ்யாவின் கசான் நகரில் பிரிக்ஸ் கூட்டணி நாடுகளின் உச்சி மாநாடு சமீபத்தில் நடைபெற்றது. இந்த உச்சி மாநாட்டில், டாலர் அல்லாத பரிவர்த்தனையை ஊக்குவிக்கவும், உள்ளூர் கரன்சிகளை வலுப்படுத்தவும் பிரிக்ஸ் உறுப்பு நாடுகள் முக்கிய ஆலோசனையை மேற்கொண்டன. ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் கூறுகையில், “ டாலரை ஆயுதமாக்கி நம்மை செயல்படவிடாமல் அமெரிக்கா தடுக்கிறது. இதனால், மாற்று வழிமுறையை தேட வேண்டிய கட்டாயத்துக்கு தள்ளப்பட்டுள்ளோம்” என்றார்.

டாலருக்கு மாற்றான கரன்சி உருவாக்கப்படும் நிலையில் அது, அமெரிக்க விதிக்கும் தடைகள் மற்றும் அது அறிவிக்கும் பணவியல் கொள்கையால் ஏற்படும் ஏற்றத்தாழ்வுகளிலிருந்து உள்ளூர் பொருளாதாரம் பாதுகாக்கப்படும் என்பது பிரிக்ஸ் உறுப்பு நாடுகளின் எண்ணமாக உள்ளது. இந்த நிலையில், டிரம்ப் 100 சதவீத வரிவிதிப்பை எதிர்கொள்ள நேரிடும் என மிரட்டியுள்ளது முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது.

உலக நாடுகளின் அந்நியச் செலாவணி கையிருப்பில் டாலரின் பங்களிப்பு 58 சதவீதமாக உள்ளது. எனவே, குறுகிய மற்றும் நடுத்தர கால பயன்பாட்டில் டாலரின் பங்கு தவிர்க்க முடியாதது என அட்லாண்டிக் கவுன்சில் ஆய்வு சுட்டிக்காட்டியுள்ளது.

டாலர் ஆதிக்கத்துக்கு முடிவு கட்ட பிரிக்ஸ் கூட்டணி மற்றும் வளரும் நாடுகள் அழைப்பு விடுத்துள்ள போதிலும், இன்னும் சர்வதேச அளவில் கச்சா எண்ணெய் போன்ற முக்கிய பொருட்களின் வர்த்தகம் அமெரி்க்க டாலரில்தான் மேற்கொள்ளப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.