தொடர் கனமழையின் காரணமாக, திருவண்ணாமலையில் மண் சரிவு ஏற்பட்டுள்ளது.
நேற்று மாலை மண் அரிப்பு காரணமாக திருவண்ணாமலை மலையில் இருந்து ராட்சதப் பாறை ஒன்று சரிந்திருக்கிறது. இதனால், பெரும் மண் குவியல் மலை அடிவாரத்தில் உள்ள வ.உ.சி நகர் மக்களின் வீடுகளின் மீது சரிந்திருக்கிறது. அந்த மண் சரிவில் வீடு ஒன்று முழுமையாக மண்ணில் புதைந்துள்ள நிலையில், அந்த வீட்டில் இருந்த 7 பேரின் நிலை என்ன என்பது இன்னும் கேள்விக்குறியாகவே இருக்கிறது.
இந்நிலையில் எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி தனது எக்ஸ் தளத்தில், “திருவண்ணாமலை தீபமலை அடிவாரத்தில் நேற்று மாலை நடைபெற்ற நிலச்சரிவால், மண்குவியல் மூடியதில் 5 குழந்தைகள் உட்பட 7 பேர் மண்ணுக்குள் சிக்கிக்கொண்டிருக்கும் செய்தி மிகுந்த அதிர்ச்சியையும் வேதனையையும் தருகிறது.
நிலச்சரிவு ஏற்பட்டு 18 மணி நேரம் ஆகியும் மண்ணில் புதையுண்டவர்கள் இன்னும் மீட்கப்படவில்லை என்று செய்திகள் வருகின்றன. அரசும், தேசிய பேரிடர் மீட்புப் படையும் விரைந்து செயல்பட்டு இப்பேரிடரில் சிக்கித்தவிப்போரை உயிருடன் மீட்க விரைவாக செயல்பட வேண்டும் என வலியுறுத்துவதுடன், நிலச்சரிவில் சிக்கிய அனைவரும் பூரண நலத்துடன் மீட்கப்பட வேண்டும் என எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகிறேன்” என்று பதிவிட்டிருக்கிறார்.
நீங்கள் விரும்பி படித்த தொடர்கள், இப்போது ஆடியோ வடிவில்… புத்தம் புதிய விகடன் ப்ளே… உங்கள் அன்றாட பணிகளை கவனித்துக் கொண்டே ரசித்து கேட்க, உடனே இன்ஸ்டால் செய்யுங்கள்…