12th fail திரைப்படத்தின் மூலம் இந்தியா முழுவதும் பிரபலமடைந்தவர் நடிகர் விக்ராந்த் மாஸ்ஸி. Dhoom Machao Dhoom நிகழ்ச்சி மூலம் சின்னத்திரைக்கு அறிமுகமான இவர், 2009-ம் ஆண்டு Balika Vadhu எனும் சீரியல் மூலம் இந்தி குடும்பங்களின் வீடுகளுக்குள் நுழைந்தார். 2016-ம் ஆண்டு வெளியான A Death in the Gunj எனும் திரில்லர் திரைப்படத்தில், தன் சிறப்பான நடிப்பால் திரைத்துறையில் கவனம் பெற்றார். அதைத் தொடர்ந்து Chhapaak, Ramprasad Ki Tehrvi, Haseen Dillruba, Gaslight போன்ற படங்களின் மூலம் தன் நடிப்புத் திறனை நிரூபித்து முன்னேறினார். Broken But Beautiful, Criminal Justice, Mirzapur போன்ற வெப் தொடர்களிலும் நடித்து தொடர்ந்து திரைக் களத்தில் தனித்து நின்றார்.
அதைத் தொடர்ந்துதான் 12th fail திரைப்படம் இந்தியா முழுவதும் பெரும் வரவேற்பைப் பெற்றது. இந்தப் படத்துக்கு அரசியல் பிரமுகர்கள் முதல் சாமானியர்கள் வரை பலரும் தங்களோடு தொடர்புடைய நிகழ்வுகளை பகிர்ந்து, பாராட்டினர். மேலும், விக்ராந்த் மஸ்ஸி செக்டர் 36, சபர்மதி எக்ஸ்பிரஸ் எனத் தன் சிறப்பான நடிப்பின் மூலம் தொடர்ந்து வெற்றி நாயகனாக தன் சினிமா பயணத்தைத் தொடர்ந்தார். கடந்த ஆண்டு NDTV Indian Of The Year நிகழ்ச்சியில் சிறந்த நடிகருக்கான விருதையும் வென்றார்.
தற்போது விக்ராந்த் மஸ்ஸி Yaar Jigri, Aankhon Ki Gustaakhiyan ஆகிய இரண்டு படங்களில் நடித்து வருகிறார். இந்த இரண்டு படங்களும் 2025-ல் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த நிலையில், நடிகர் விக்ராந்த் மஸ்ஸி தனது 37வது வயதில், நடிப்பிலிருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்து சினிமா உலகை அதிர்ச்சிக்குள்ளாக்கியிருக்கிறார்.
இது தொடர்பாக அவர் தன் இன்ஸ்டாகிராம் பக்கத்தில், “என்னுடைய வாழ்வில் கடந்த சில வருடங்கள் தனித்தன்மை வாய்ந்தவை. அதற்கான வாய்ப்பளித்த, ஆதரவளித்த உங்கள் அத்தனைப் பேருக்கும் நன்றி. அதே நேரம் ஒரு மகனாக, கணவனாக, தந்தையாக, ஒரு நடிகனாக என் வாழ்வை மறு பரிசீலனை செய்வதற்கான நேரமாக இதைக் கருதுகிறேன். எனவே, 2025-ம் வருடம் ஒருமுறை இறுதியாக உங்களை சந்திக்கிறேன். கடந்த இரண்டு படங்கள், மற்றும் பல வருட நினைவுகளுக்கு மீண்டும் ஒருமுறை நன்றி. நான் உங்களுக்கு என்றென்றும் கடன்பட்டவன்” எனக் குறிப்பிட்டிருக்கிறார். இவரின் இந்தப் பதிவு சமூக வலைதளங்களில் வைரலாகிவருக்கிறது.