திருவள்ளூர்: பிச்சாட்டூர் அணையிலிருந்து வெளியேற்றப்படும் உபரி நீரின் அளவு விநாடிக்கு 2 ஆயிரம் கன அடியாக அதிகரிக்கப்பட்டுள்ளது.
ஆந்திர மாநிலம்- நகரி அருகே உருவாகும் ஆரணி ஆற்றின் குறுக்கே ஆந்திர பகுதியில் உள்ளது பிச்சாட்டூர் அணை. திருவள்ளூர் மாவட்டம்- ஊத்துக்கோட்டையிலிருந்து, சுமார் 16 கி.மீ., தொலைவில் உள்ள இந்த அணைக்கு, நீர்ப்பிடிப்பு பகுதிகளில் இருந்து நீர் வரத்து அதிகரித்து வருகிறது.
ஆகவே, அணையின் பாதுகாப்பு கருதி, முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, ஆந்திர நீர் வளத்துறை அதிகாரிகள், பிச்சாட்டூர் அணையிலிருந்து நேற்று காலை முதல் உபரி நீரை திறந்து வருகின்றனர். தொடக்கத்தில் விநாடிக்கு 500 கன அடி என, திறக்கப்பட்டு வந்தது அந்த உபரி நீர். இந்நிலையில், பிச்சாட்டூர் அணைக்கு வரும் நீரின் அளவு தொடர்ந்து அதிகரித்த வண்ணம் இருந்தது. அந்த அளவு இன்று காலை 6 மணி நிலவரப்படி, விநாடிக்கு 3,500 கன அடியாக உள்ளது.
இதனால், 1.85 டி.எம்.சி., கொள்ளளவுக் கொண்ட பிச்சாட்டூர் அணையின் நீர் இருப்பு 1.54 டி.எம்.சி.யாக உள்ளது. ஆகவே, இந்த அணையிலிருந்து வெளியேற்றப்படும் உபரி நீரின் அளவை விநாடிக்கு 2 ஆயிரம் கன அடியாக அதிகரித்துள்ளனர் ஆந்திர நீர் வளத் துறை அதிகாரிகள். இந்த உபரி நீர் மற்றும் கும்மிடிப்பூண்டி, பொன்னேரி உள்ளிட்ட பகுதிகளில் உள்ள ஏரிகள், குளங்கள் நிரம்பி வெளியேறும் உபரி நீர், சுருட்டப்பள்ளி மற்றும் ஏ.என்.குப்பம், லட்சுமிபுரம் அணைக்கட்டுகள், அ.ரெட்டிப்பாளையம் மற்றும் ஆண்டார்மடம் தடுப்பணைகள் வழியாக விநாடிக்கு 3,449 கன அடி அளவில், பழவேற்காடு ஏரியில் கலந்து வருகிறது.
இதனால், ஆரணி கரையோரம் உள்ள பேரண்டூர், பேரிட்டிவாக்கம், காரணி, புதுவாயல், ஏலியம்பேடு, லட்சுமிபுரம், காட்டூர், ஆண்டார்மடம் உள்ளிட்ட கிராமங்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை ஏற்கெனவே விடப்பட்டுள்ளது. அதுமட்டுமல்லாமல், நீர் வள ஆதாரத் துறை, வருவாய்த் துறை மற்றும் உள்ளாட்சி துறையினர், போலீஸார், ஆரணி ஆற்றுக்கரையோரங்களில் தீவிர கண்காணிப்பு மற்றும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகின்றனர்.