ஐபிஎல் 2025 மெகா ஏலத்தில் மும்பை இந்தியன்ஸ் அணியால் ஏலத்தில் எடுக்கப்பட்ட அர்ஜுன் டெண்டுல்கர் தனித்துவமான சாதனையை படைத்துள்ளார். முதல் சுற்றில் விற்கப்படாமல் போன அர்ஜுன் டெண்டுல்கர், கடைசி சுற்றில் மும்பை இந்தியன்ஸ் அணியால் அடிப்படை விலையான ரூ. 30 லட்சத்திற்கு ஏலத்தில் எடுக்கப்பட்டார். இடது கை வேகப்பந்து வீச்சாளரான அர்ஜுன் டெண்டுல்கரை முதலில் எந்த ஒரு அணியும் ஏலம் கேட்கவில்லை. இதனால் அவர் விற்கப்படாமல் போனார். பின்னர் வழக்கம் போல மும்பை இந்தியன்ஸ் அணி அவரை ஏலத்தில் எடுத்தது. இதன் மூலம் மும்பை இந்தியன்ஸ் அணி அர்ஜுன் டெண்டுல்கரை மூன்று வெவ்வேறு ஏலத்தில் வாங்கி உள்ளது.
அர்ஜுன் டெண்டுல்கரை மும்பை அணி முதன் முதலில் ஐபிஎல் 2021 மினி ஏலத்தில் அவரது அடிப்படை விலையான ரூ 20 லட்சத்தில் வாங்கியது. மேலும் கடைசியாக ஏலத்தில் வாங்கப்பட்ட வீரர் இவர் தான். பின்னர் ஐபிஎல் 2022 மெகா ஏலத்தில் அர்ஜுன் டெண்டுல்கரை மீண்டும் ஏலத்தில் எடுத்தது மும்பை அணி. எப்படியும் இவரை மும்பை அணி எடுப்பார்கள் என்று குஜராத் டைட்டன்ஸ் அணியும் அர்ஜுனை எடுக்க ஏலம் கேட்டனர். இதனால் அடிப்படை விலையான ரூ. 20 லட்சத்தில் இருந்து, ரூ. 30 லட்சத்திற்கு தங்கள் அணியில் எடுத்தது மும்பை அணி.
இருப்பினும் 2 சீசன்களாக அர்ஜுன் டெண்டுல்கருக்கு வாய்ப்பு வழங்கப்படவில்லை. இறுதியாக ஐபிஎல் 2023ல் தனது முதல் போட்டியில் விளையாடினார் அர்ஜுன் டெண்டுல்கர். அந்த சீசனில் மொத்தமாக நான்கு போட்டிகளில் விளையாடினார். பின்னர் ஐபிஎல் 2024ல் ஒரே ஒரு போட்டியில் மட்டுமே வாய்ப்பு கிடைத்தது. தற்போது ஐபிஎல் 2025 மெகா ஏலத்தில் அர்ஜுனை மீண்டும் ஏலத்தில் எடுத்தது மும்பை அணி. வேறு எந்த ஒரு அணியும் அர்ஜுன் டெண்டுல்கரை ஏலத்தில் எடுக்கவில்லை முன்வரவில்லை. இதனால் அவரது அடிப்படை விலையில் ஏலம் எடுக்கப்பட்டார்.
3 வெவ்வேறு ஏலத்தில் ஏலம் போன வீரர் என்ற தனித்துவமான சாதனையை அர்ஜுன் டெண்டுல்கர் படைத்துள்ளார். இதற்கு முன்னர் ஜெய்தேவ் உனத்கட், ஹர்பிரீத் ப்ரார் மற்றும் க்ளென் மேக்ஸ்வெல் ஆகியோர் 3 வெவ்வேறு ஏலங்களில் ஒரே அணியால் ஏலத்தில் எடுக்கப்பட்டுள்ளனர். ராஜஸ்தான் ராயல்ஸ் அணி உனட்கட்டை இரண்டு முறை மினி ஏலத்திற்கு முன்பு வெளியிட்டது. ஐபிஎல் 2018, 2019 மற்றும் 2020 ஏலங்களில் ராஜஸ்தான் அணிக்காக விளையாடினார். ஐபிஎல் 2021க்கு முன்பு அவரை தக்க வைத்துக் கொண்டது ராஜஸ்தான்.
ஹர்ப்ரீத் ப்ரார் ஐபிஎல் 2019, 2022 மற்றும் 2025 ஆகிய ஏலங்களில் பஞ்சாப் கிங்ஸ் அணியில் இணைந்தார். லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் மற்றும் மும்பை இந்தியன்ஸ் ஆகிய 2 அணிகளும் ஐபிஎல் 2025க்கு ஹர்ப்ரீத்தை ஒப்பந்தம் செய்ய விரும்பினர். ஆஸ்திரேலியாவின் மேக்ஸ்வெல் ஐபிஎல் 2014, 2020 ஆண்டுக்கு பிறகு தற்போது மீண்டும் 2025 ஏலத்தில் பஞ்சாப் கிங்ஸ் அணியில் இணைந்துள்ளார். கடந்த ஐபிஎல் 2021 முதல் 2024 வரை ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிக்காக விளையாடினார்.