டெங்கு கட்டுப்பாட்டுக்கு கியூபா அரசு ஆதரவு 

அவ்வப்போது தலைதூக்கும் டெங்குவை முழுமையாக கட்டுப்படுத்துவதற்காக புதிய அரசாங்கம் திட்டமிட்டுள்ள வேலை திட்டத்தினுள், சிகிச்சை சேவைகளை வலுப்படுத்துவதற்கு, நுளம்புக் குடம்பி பரவுதலைக் கட்டுப்படுத்துவதற்கு மற்றும் முறையான மருத்துவப் பாவனை போன்ற விடயங்கள் தொடர்பாக கியூபா அரசின் நிபுணத்துவம், தொழில்நுட்பக் கருவிகள் மற்றும் அனுபவத்தை நேரடியாகப் பயன்படுத்த சுகாதார மற்றும் ஊடகத்துறை அமைச்சர் டொக்டர் நலிந்த ஜயதிஸ்ஸ தீர்மானித்துள்ளார்.

சுகாதார மற்றும் ஊடகத்துறை அமைச்சர் டொக்டர் நளிந்த ஜயதிஸ்ஸ மற்றும் இலங்கைக்கான கியூபா தூதுவர் Andres Marcelo Gonzales Gorrido ஆகியோருக்கு இடையில் சுகாதார அமைச்சில் இடம்பெற்ற விசேட சந்திப்பில் இந்த விடயங்கள் வெளிப்படுத்தப்பட்டுள்ளன.

இச்சந்திப்பில் கியூபா தூதுவர் டெங்கு நோயைக் கட்டுப்படுத்துவதில் கியூபாவின் வெற்றியை விளக்கியதுடன், இலங்கையில் டெங்கு தொற்றை ஒழிக்கும் நோக்கில் பொது சுகாதாரத் திட்டங்களுக்குத் தேவையான நிபுணத்துவம் மற்றும் தொழில்நுட்ப அறிவைப் பரிமாறிக் கொள்ள கியூபா அரசாங்கம் தயாராக இருப்பதாக தெரிவித்தார். நுளம்புக் குடம்பிகளை கட்டுப்படுத்த கியூபாவில் பயன்படுத்தப்படும் சில பொருட்கள் தொடர்பிலும் தூதுவர் சுகாதார அமைச்சருக்கு அறிவித்தார்.

இலங்கையில் டெங்கு நுளம்பு பரவுவதைக் கட்டுப்படுத்தவும் சிகிச்சைச் சேவைகளை வலுப்படுத்தவும் சுகாதார அமைச்சு முறையான வேலைத்திட்டத்தை நடைமுறைப்படுத்தியுள்ளதை வலியுறுத்திய சுகாதார அமைச்சர், இவற்றை வலுப்படுத்த இரு நாடுகளுக்கிடையிலான ஒருங்கிணைப்பு மிகவும் முக்கியமானது என சுட்டிக்காட்டினார். இலங்கையில் டெங்கு ஒழிப்பு நடவடிக்கைகளுக்காக கியூபா நிபுணர்கள் மற்றும் தொழில்நுட்ப அறிவை பரிமாறிக் கொள்ள கியூபா அரசாங்கம் விருப்பம் தெரிவித்தமைக்கு அமைச்சர் நன்றி தெரிவித்தார்.

டெங்கு நோயைக் கட்டுப்படுத்துவதற்காக இலங்கை முன்னெடுக்கும் விசேட வேலைத்திட்டத்திற்கு கியூபா அரசாங்கத்தின் தொடர்ச்சியான ஆதரவைப் பெற்று, இரு நாடுகளுக்குமிடையிலான நீண்டகால இராஜதந்திர உறவுகளையும் நட்புறவையும் வலுப்படுத்தும் நோக்கில் இந்த சந்திப்பு இடம்பெற்றது.

சுகாதார அமைச்சின் பதில் செயலாளர் வத்சலா பிரியதர்ஷனி, சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் டொக்டர். அசேல குணவர்தன, தொற்றுநோயியல் திணைக்களத்தின் பிரதான தொற்றுநோயியல் நிபுணர், விசேட வைத்தியர். ஹசித திசேரா, டெங்கு கட்டுப்பாட்டுப் பிரிவின் பணிப்பாளர் டொக்டர். சுதத் சமரவீர, கியூபா தூதரகத்தின் முதல் செயலாளர், Maribel Duarte Gonzalez ஆகியோர் இந்த சந்திப்பில் கலந்துகொண்டனர்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.