ஸ்ரீநகர்: “முஸ்லிம்கள் பாதுகாப்பற்றவர்களாக உணர்கிறார்கள் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. அவர்களை எந்தப் பாகுபாடும் இல்லாமல் சமமாக நடத்த வேண்டும். நாட்டில் வகுப்புவாத பதற்றத்தைத் தூண்டும் செயல்களுக்கு மத்திய அரசு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும்” என்று தேசிய மாநாட்டு கட்சித் தலைவர் ஃபரூக் அப்துல்லா தெரிவித்துள்ளார்.
இது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், “முஸ்லிம்கள் பாதுகாப்பற்றவர்களாக உணர்கிறார்கள் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. உத்தரப் பிரதேசத்தில் சம்பல் பகுதியில் நடைபெற்றதைப் போன்ற வன்முறைகளை மத்திய அரசு நிறுத்த வேண்டும். முஸ்லிம்களை கடலில் தூக்கி வீச முடியாது என்பதால், இந்திய அரசிடம் அத்தகைய செயல்களை நிறுத்தச் சொல்கிறேன். 24 கோடி முஸ்லிம்களை எங்கே தூக்கி எறிவார்கள்?
எந்தப் பாகுபாடும் இல்லாமல் முஸ்லிம்களை சமமாக நடத்த வேண்டும். அதைத்தான் நமது அரசியல் சாசனம் குறிக்கிறது. நமது அரசியலமைப்பில் மத அடிப்படையில் எந்த பாகுபாடும் இல்லை. அவர்கள் அரசியலமைப்பை அழித்துவிட்டால், இந்தியா எங்கே இருக்கும்? நாட்டில் வகுப்புவாத பதற்றத்தைத் தூண்டும் செயல்களுக்கு மத்திய அரசு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும்.
காஷ்மீர் பண்டிட்கள் இங்கு திரும்பி வருவதை யார் தடுப்பது? ஒவ்வொரு அரசியல் கட்சியும் அவர்கள் திரும்பி வர வேண்டும் என்றுதான் கூறியுள்ளனர். அவர்கள் எப்போது திரும்ப வேண்டும் என்பது அவர்களின் முடிவு. அவர்களுக்காக நாங்கள் காத்திருக்கிறோம். நான் முதல்வராக இருந்தபோதும்கூட அவர்களை திரும்ப அழைத்து வரவே முயற்சி செய்தோம். இஸ்ரேல் – லெபனான் போர்நிறுத்தத்தை வரவேற்கிறேன். ஆனால் காசா, சிரியா மற்றும் ஈரான் மீதான தாக்குதல்களை நிறுத்த வேண்டும். ஜம்மு – காஷ்மீரில் இடஒதுக்கீடு குறித்து மறுஆய்வு செய்யப்படும். அனைத்து சமூகத்தினருக்கும் சம வாய்ப்பு அளிக்கப்பட வேண்டும்” என்றார்.