ஓ.எம்.ஆர் சாலையில் கார் மோதி ஐந்து பெண்கள் மரணம்… எதிர்பாராத விபத்து அல்ல… கொடூர கொலையே!

சாலைகளில் எதிர்பாராமல் நடப்பதுதான் விபத்து. ஆனால், கவனக்குறைவு, பொறுப்பற்றதனம், சாகசம், மது என ஓட்டுநர் செய்யும் குற்றங்களுக்கு உயிர்கள் பலியாவது, கொடூர கொலையே. அப்படித்தான் சில தினங்களுக்கு முன், செங்கல்பட்டு மாவட்டம், மாமல்லபுரம் அருகே ஓ.எம்.ஆர் சாலையோரம், வழக்கம்போல ஓய்வெடுத்துக் கொண்டிருந்த கால்நடை மேய்க்கும் பெண்கள் மீது அசுர வேகத்தில் காரை ஏற்றி, ஐந்து பெண்களை சம்பவ இடத்திலேயே கொலை செய்திருக்கிறார் அதன் ஓட்டுநர்.

விதிகள் என எதையுமே மதிக்காத அந்த கார்… 100 முதல் – 120 கி.மீ வேகத்தில் அன்றைய தினம் சீறிப் பாய்ந்துள்ளது. அந்தச் சாலையில், இப்படி நடப்பது வழக்கமாகவே இருக்கிறது என்பதுதான் வேதனை. ‘இந்தச் சாலையில் கார்கள் அதிவேகமாகத்தான் எப்போதும் இயக்கப்படுகின்றன. இதனால், அடிக்கடி உயிரிழப்புகள் நடக்கின்றன’ என்று பொங்கி எழுந்த மக்கள், அன்றைய தினம் சாலை மறியலில் ஈடுபட்டனர். ஆக, இது எதிர்பாராமல் நிகழ்ந்த விபத்தல்ல!

ஓ.எம்.ஆர் சாலை போன்றவை, நகர்ப்புற கட்டமைப்பு வளர்ச்சி காரணமாக, செம்மையாகப் போடப்பட்டவை. ஆனால், பணம் படைத்த சொகுசு கார் உரிமையாளர்கள், போக்குவரத்து என்பதைத் தாண்டி அத்தகைய சாலைகளெல்லாம் தங்களின் சாகச, சந்தோஷ பயணங்களுக்கானவை என்றே நினைக்கின்றனர். டிரைவிங் லைசென்ஸ் பெறும் வயது நிரம்பாத குழந்தைகளுக்கு, விலையுயர்ந்த பைக், சொகுசு கார் வாங்கிக்கொடுக்கும் பெற்றோர்களும் இதில் குற்றவாளிகளே.

இன்னும் கொடுமை, மது அருந்திவிட்டு கார் ஓட்டுபவர்கள். சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத்துறை அமைச்சகத்தின் 2022 அறிக்கையின்படி, அவ்வாண்டில் நடந்த சாலை விபத்துகளின் எண்ணிக்கை 4,61,312. இவற்றில் மது அருந்திவிட்டு வாகனம் ஓட்டியவர்களால் ஏற்பட்ட விபத்துகள் 10,080; மரணங்கள் 4,201.

மது அருந்திவிட்டு வாகனம் ஓட்டும் குற்றத்துக்கான சட்ட தண்டனை..? முதன்முறை என்றால், ரூ.10,000 அபராதம், ஆறு மாதங்கள் சிறை. இரண்டாம் முறை எனில் ரூ.15,000, இரண்டாண்டுகள் சிறை. மேலதிக முறை எனில், வாகனம் கைப்பற்றப்படும், வாகன உரிமை ரத்து செய்யப்படும். எல்லாவற்றுக்கும் மேலாக, `கண்டுகொள்ளாமல்’ இருக்க சில ஆயிரங்கள் லஞ்சம் கொடுத்தாலே போதும். எத்தனை கொலைகளை வேண்டுமானாலும் செய்யலாம்.

ஒரு விபத்தும், அதனால் ஏற்படும் பொருட்சேதம், உடல், உயிர் சேதமும் சம்பந்தப்பட்ட குடும்பங்களில் ஏற்படுத்தும் இழப்புகள் ஈடுசெய்ய முடியாதவை. தனி மனிதர்கள், தங்களின் பொறுப்பின்மையாலும் ஒழுக்கமின்மையாலும் இப்படி ‘விபத்து’ என்கிற பெயரில் செய்யும் கொலைகளை, ‘விபத்து’ என்றே இனியும் கடக்கக் கூடாது. இவற்றுக்கு எதிராக கடுமையான சட்ட தண்டனை வேண்டும் என்று அரசையும், சமூகத்தையும், குடும்பங்களையும் வலியுறுத்துவோம் தோழிகளே!

உரிமையுடன்,

ஸ்ரீ

ஆசிரியர்

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.