புதுடெல்லி: இந்திய கடற்படைக்காக புதிதாக 26 ரஃபேல் போர் விமானங்கள் வாங்கப்பட உள்ளன என்று கடற்படை தளபதி தினேஷ் குமார் திரிபாதி தெரிவித்துள்ளார்.
இந்திய கடற்படை தினம் நாளை கொண்டாடப்பட உள்ளது. இதையொட்டி கடற்படை தளபதி தினேஷ் குமார் திரிபாதி டெல்லியில் நேற்று நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:
இந்திய கடற்படைக்காக 62 போர்க்கப்பல்கள், ஒரு நீர்மூழ்கியை தயாரிக்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. அடுத்த ஆண்டில் ஒவ்வொரு மாதமும் புதிதாக ஒரு போர்க்கப்பல் கடற்படையில் இணைக்கப்படும்.
ஐஎன்எஸ் விக்ராந்த் போர்க்கப்பலுக்காக பிரான்ஸிடம் இருந்து ரஃபேல் போர் விமானங்களை வாங்க கடந்த 2023-ம் ஆண்டு ஜூலையில் மத்திய பாதுகாப்புத் துறை ஒப்புதல் வழங்கியது. இதன்படி இந்திய கடற்படைக்காக பிரான்ஸிடம் இருந்து புதிதாக 26 ரஃபேல் போர் விமானங்கள் வாங்கப்பட உள்ளன. இதற்கான ஒப்பந்தம் வரும் ஜனவரியில் கையெழுத்தாகும். பிரான்ஸிடம் இருந்து 3 அதிநவீன நீர்மூழ்கிகளை வாங்கவும் திட்டமிடப்பட்டு உள்ளது. இதற்கான ஒப்பந்தமும் ஜனவரியில் கையெழுத்தாகக்கூடும்.
பாகிஸ்தான் கடற்படையில் புதிதாக போர்க்கப்பல்கள் சேர்க்கப்படுவதை உன்னிப்புடன் கவனித்து வருகிறோம். அவர்களால் மிக அதிக எண்ணிக்கையில் போர்க்கப்பல்களை தயாரிக்க முடியாது. சீனாவின் உதவியோடு போர்க்கப்பல்கள் தயாரிக்கப்பட்டு பாகிஸ்தான் கடற்படையில் சேர்க்கப்பட்டு வருகின்றன. மக்கள் நலனைவிட ஆயுதங்களை கொள்முதல் செய்வதில் பாகிஸ்தான் அதிக அக்கறை செலுத்துகிறது.
இந்திய பெருங்கடலின் சர்வதேச எல்லைப் பகுதிகளில் சீன போர்க்கப்பல்கள் ரோந்து வருவது குறித்து மிகவும் உன்னிப்பாக கண்காணித்து வருகிறோம். போர்க்கப்பல்கள் மட்டுமன்றி ஆராய்ச்சிக் கப்பல்களின் நடவடிக்கைகளையும் கண்காணித்து வருகிறோம். இந்தியாவின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டால் உரிய நடவடிக்கை எடுக்கப்படும்.
இவ்வாறு கடற்படை தளபதி தினேஷ் குமார் திரிபாதி தெரிவித்தார்.
நீர்மூழ்கியில் இருந்து கலாம் 4 ஏவுகணை சோதனை நடத்தப்பட்டதை இந்திய கடற்படை அதிகாரப்பூர்வமாக அறிவிக்கவில்லை. இதுகுறித்து கடற்படை தளபதி தினேஷ் குமார் திரிபாதியிடம் நிருபர்கள் நேற்று கேள்வி எழுப்பினர். அப்போது நீர்மூழ்கியில் இருந்து அதிநவீன கலாம் 4 ஏவுகணை சோதனை செய்யப்பட்டதை அவர் உறுதி செய்தார்.