கடந்த சில ஆண்டுகளாக முன்னெப்போதும் இல்லாத வகையில் அம்பேத்கரிய / தலித்திய சினிமாவின் எழுச்சி அலை பரவலாக அதிகரித்து காணப்படுகிறது.
வடக்கில் நாகராஜ் மஞ்சுளே, நீரஜ் கய்வான், தமிழில் பா.ரஞ்சித் போன்றோரின் வருகைக்குப் பிறகு அம்பேத்கரை, அவரது கொள்கைகளை திரையில் முன்னிலைப்படுத்துவதில் குறிப்பிடத்தக்க அளவில் முன்னேற்றம் தெரிகிறது. சமீபத்திய உதாரணங்களாக இதில் மாரி செல்வராஜ் படங்கள், ஞானவேலின் ‘ஜெய்பீம்’ போன்ற படங்களையும் சேர்த்துக் கொள்ளலாம்.
ஆனால், இது கடந்த 10 அல்லது 15 ஆண்டு நிலவரம் மட்டுமே. இந்திய அரசியலைமைப்பின் தந்தை என்று போற்றப்படும் பாபாசாகேப் அம்பேத்கரை இந்திய சினிமா பல தசாப்தங்களாக ஒதுக்கியே வைத்திருந்தது என்பதே சுடும் உண்மை. நீண்ட காலமாக சுதந்திர போராட்டம், தேச விடுதலை குறித்த வரலாற்று திரைப்படங்களில் கூட மருந்துக்கும் அம்பேத்கரை பற்றி தகவல்கள் இடம்பெற்றிருக்காது. மகாத்மா காந்தி, ஜவஹர்லால் நேரு, பகத் சிங் முதலானோரின் தியாகங்களை திரும்பத் திரும்ப பேசிய திரைப்படங்கள் வசதியாக அம்பேத்கரை மட்டும் மறந்து விட்டன.
இத்தகைய படங்களில் நீதிமன்றங்களிலும், போலீஸ் ஸ்டேஷன்களிலும் போட்டோ வடிவில் இடம்பெறுவதோடு அம்பேத்கரின் பங்கு முடிந்துவிடும். தமிழ் சினிமாவில் திராவிட சினிமாவின் அலை வீசியபோதும் கூட நிலைமை பெரிதாக மாறவில்லை. ஆனால் தமிழில் சாதியக் கட்டமைப்பை கேள்விக்குட்படுத்திய எத்தனையோ திரைப்படங்கள் வெளியாகவே செய்தன. அவையும் கூட நேரடியாக அம்பேதகரிய அரசியலை முன்வைக்கவில்லை. 1990-களின் தொடக்கம் வரை இந்தியா முழுவதுமே இதுதான் நிலைமையாக இருந்தது.
தலித் மக்கள் மீதான ஒடுக்குமுறைகளையும், வன்முறைகளையும் பதிவு செய்த கலைப் படைப்புகள் சில திரை வடிவம் பெற்றாலும் கூட, அவற்றிலும் அம்பேத்கரும், அவரது சிந்தனையும் புறக்கணிக்கப்பட்டன.
1990-க்குப் பிறகு இந்த நிலைமையில் சிறிய மாற்றம் ஏற்பட்டது. மராத்தி, தெலுங்கு உள்ளிட்ட மொழிகளில் அம்பேத்கரின் வாழ்க்கை வரலாற்று திரைப்படங்களாக வெளியாகின. ஆனால் அவை பிராந்திர திரைப்படங்கள் என்ற அளவிலேயே குறுகிவிட்டன. இந்திய அளவில் அவற்றுக்கு எந்த கவனமும் கிடைக்கவில்லை. மகாத்மா காந்தியின் வாழ்க்கையை மிகச் சிறப்பாக காட்சிப்படுத்தி ஆஸ்கரை அள்ளிய டேவிட் அட்டன்பரோ கூட தனது ‘காந்தி’ திரைப்படத்தில் அம்பேத்கரை கண்டுகொள்ளவில்லை.
1994-ல் பூலான் தேவியின் வாழ்க்கையை அடிப்படையாகக் கொண்டு வெளியான ‘பாண்டிட் குயின்’ அப்போதைய காலகட்டத்தில் ஒரு குறிப்பிடத்தக்க தலித் சினிமாவாக அறியப்பட்டது. 2000-ம் ஆண்டு ஜப்பார் படேல் இயக்கத்தில் மம்மூட்டி அம்பேத்கராக நடித்த ‘பாபாசாகேப் அம்பேத்கர்’ திரைப்படம் அம்பேத்கரிய அரசியலை வெகுஜன சினிமாவில் முழுமையான பேசியது எனலாம்.
ஆரம்ப நாள்களில் இருந்து இந்தியாவின் பிரதான சினிமாத் துறையாக கருதப்பட்ட பாலிவுட் சாதி ஒடுக்குமுறைகள் குறித்து பாராமுகமாகவே இருந்தது. மற்ற மொழிகளில் அங்கொன்றும் இங்கொன்றுமாக வைக்கப்பட்ட தலித் பிரதிநிதித்துவம் கூட இந்தி சினிமாவில் அறவே இடம்பெற்றிருக்கவில்லை. 2000-ல் வெளியான ‘பவந்தர்’, 2011-ல் வெளியான ‘ஆராக்ஷன்’ போன்ற விரல் விட்டு எண்ணக்கூடிய படங்களே தலித்திய பார்வையில் வெளிப்படையான கருத்துகளை முன்வைத்தன.
இப்படியான சூழலில்தான் 2013-ல் நாக்ராஜ் மஞ்சுளே இயக்கத்தில் வெளியான ‘ஃபாண்ட்ரி’ (Fandry) திரைப்படம் ஒரு முழுமையான தலித் அரசியல் பேசிய சினிமாவாக வெளியானது. பன்றி மேய்க்கும் குடும்பத்தில் பிறந்த சிறுவன் ஒருவனின் பார்வையில் விரியும் கதை, தலித் மக்கள் மீதான இந்திய மக்களின் பார்வையை அச்சு அசலாக படம்பிடித்து காட்டியது. குறிப்பாக, படத்தின் இறுதி 20 நிமிடங்கள் பார்ப்பவர்களை ஓர் உலுக்கு உலுக்கி விடும். இதனைத் தொடர்ந்து ஏராளமான வெகுஜன தலித்திய திரைப்படங்களின் வருகையும் அதிகரித்தது.
2012-ல் ‘ஷூத்ரா: தி ரைசிங்’ (Shudra: The Rising) எனும் இந்தி திரைப்படம் மிக முக்கியமானது. பல்வேறு எதிர்ப்புக் குரல்களுக்கு இடையே வெளியான அப்படம், இந்தியாவில் மட்டுமின்றி உலக அளவில் தீவிரத் திரை ரசிகர்களை வெகுவாக ஈர்த்தது. இந்து வர்ணாசிரம முறை உள்ளிட்ட இந்தியாவில் சாதிய அடுக்குமுறையை அழுத்தமாகப் பேசிய அந்தப் படத்தை அம்பேத்கருக்காக அர்ப்பணித்தார் இயக்குநர் சஞ்சீவ் ஜெய்ஸ்வால். இதே சஞ்சீவ் ஜெய்ஸ்வால் இயக்கத்தில் 2022-ல் ஓடிடியில் நேரடியாக வெளியான ‘கோட்டா: தி ரிசர்வேஷன்’ (Quota:The Reservation) படம், கார்ப்பரேட் நிறுவனங்களில் தலித் ஊழியர்கள் எதிர்கொள்ளும் சமகால தீண்டாமையைப் பேசி கவனம் ஈர்த்தது.
ஆரம்ப கால வர்த்தக சினிமா வரிசையில் வந்த தலித் திரைப்படங்களில் தாழ்த்தப்பட்டவர்களுக்காக ‘மீட்பர்’ ஆக நாயக பிம்பத்துடன் கூடிய ப்ரோட்டாகனிஸ்ட்களே (Protagonist) அதிகம் இருந்தனர். அதையும் உடைத்து தலித் சினிமாவில் தலித் கதாபாத்திரங்களே ப்ரொட்டாகனிஸ்ட் ஆக வலம் வரும் காலமும் வந்தது. அந்த வகையில், ‘தாஹத்’ (Dahaad), ‘கத்தல்’ (Kathal), ‘பீட்’ (Bheed) முதலான படைப்புகள் மிக முக்கியமானவை. அதேபோல், அம்பேத்கர் வடித்த சட்டப்பிரிவுகளின் மிக முக்கியமானது ‘ஆர்ட்டிகிள் 15’. மதம், இனம், சாதி, பாலின ரீதியில் பாகுபாடு காட்டுவதைத் தடுக்கும் அரசமைப்பின் 15-வது சட்டப்பிரிவின் முக்கியத்துவதை உணர்த்த அதே தலைப்பில் வெளியாகி, பாக்ஸ் ஆஃபிஸிலும் வெற்றி கண்டது அந்த இந்திப் படம். அதுவே தமிழில், உதயநிதி ஸ்டாலின் நடிப்பில் ‘நெஞ்சுக்கு நீதி’ ஆக ரீமேக்கும் ஆனது.
இந்தியில் நீரஜ் கய்வானின் ‘மாஸான்’ (Massan), பா.ரஞ்சித்தின் ‘காலா’, ‘கபாலி’, வெற்றிமாறனின் ‘அசுரன்’ போன்ற படங்களின் தலித் நாயகர்களை முன்னிறுத்தி அரசியல் பேசின.
தமிழ் சினிமாவில் பா.ரஞ்சித்தின் வருகைக்குப் பிறகு நிகழ்ந்த மாற்றம் குறித்து குறிப்பிடவேண்டியதும் இங்கே அவசியமாகிறது. அம்பேத்கரையும், தலித் அரசியலையும் நேரடியாக பேசுவதற்கு தமிழ் சினிமாவில் இருந்த தயக்கத்தை உடைத்தெறிந்தவர் பா.ரஞ்சித். அதன் பிறகே தலித் பார்வையிலான திரைப்படங்கள் தமிழில் பெருமளவில் வரத் தொடங்கின. தனது முதல் படமான ‘அட்டகத்தி’ படத்திலும், அடுத்த படமான ‘மெட்ராஸ்’ படத்திலும் கிடைத்த வாய்ப்புகளில் எல்லாம் அம்பேத்கரை குறியீடுகளாக முன்னிலைப்படுத்திய பா.ரஞ்சித், ரஜினி நடிப்பில் வெளியான ‘கபாலி’, ‘காலா’ படங்களில் நேரடியாக அம்பேத்கரிய அரசியலை முன்வைத்தார். குறிப்பாக கபாலியில் அம்பேத்கரின் ‘கோட்’ குறித்து ரஜினி பேசும் வசனம் பரவலான கவனம் பெற்றது.
ரஞ்சித்தின் வருகைக்குப் பிறகே தமிழில் அதிகமாக அம்பேத்கர், பெரியார் கொள்கைகளை பேசும் திரைப்படங்கள் முன்பை விட அதிகமாக வரத் தொடங்கின என்பது யாராலும் மறுக்கமுடியாத உண்மை. ‘அசுரன்’ படத்தின் மூலம் வெற்றிமாறன் தலித் அரசியல் மற்றும் அவர்கள் சந்திக்கும் ஒடுக்குமுறைகளை நேரடியாக பேசியிருந்தார். இதனையடுத்து 2021-ல் த.செ.ஞானவேல் இயக்கத்தில் வெளியான ‘ஜெய் பீம்’ திரைப்படம் தமிழில் மட்டுமின்றி இந்திய அளவில் வெளியான ஒரு முக்கியமான அம்பேத்கரிய சினிமா. கலாச்சார அரசியல், கஸ்டடி மரணம், சாதிய ஒடுக்குமுறை ஆகியவற்றை முடிந்தவரை கமர்ஷியல் கலப்பு எதுவும் இன்றி ஓரளவு துல்லியமாக காட்டிய படைப்பு.
‘பரியேறும் பெருமாள்’ படத்தில் அம்பேத்கரிய சிந்தனையின் முக்கியத்துவத்தை வசனங்களாலும் காட்சிகளாலும் காட்டிய மாரி செல்வராஜ், 2023-ல் வெளிவந்த ‘மாமன்னன்’ படத்தில் தலித் நாயகனின் அரசியல் எழுச்சியைக் காட்டி அடுத்தக்கட்டம் நோக்கி நகரச் செய்திருப்பார். அண்மையில் தமிழரசன் பச்சமுத்து இயக்கத்தில் வெளிவந்த ‘லப்பர் பந்து’ கூட தலித் அரசியலை வெகுஜன ரசிகர்களை சென்றடையும் வகையில் பேசியது குறிப்பிடக்கத்தக்கது. ஓடிடி தளங்களின் வருகையும் அம்பேதரிய படைப்புகளுக்கான வாயிலை திறந்துவைத்துள்ளன. சென்சார் போன்ற முட்டுக்கட்டைகள் இல்லாததால் இயக்குநர்கள் தங்களுடைய படைப்புச் சுதந்திரத்தை இவற்றின் வழியே முழுமையாக செயல்படுத்த முடிகிறது. இந்தியில் வெளியான ‘டாக்டர் அம்பேத்கர் – ஏக் மஹாநாயக்’, ‘ரிமெம்பரிங் அம்பேத்கர்’ போன்ற வெப் தொடர்களை இதற்கு உதாரணமாக சொல்லலாம்.
‘மேட் இன் ஹெவன்’ வெப் தொடரில் நீரன் கய்வான் இயக்கிய ‘தி ஹார்ட் ஸ்கிப்பட் எ பீட்’ என்ற பகுதி இந்திய திருமணங்களில் நிலவும் சாதிய பிரச்சினைகளை பேசியது. இவை தவிர ஓடிடி படைப்புகளான ‘தாஹத்’, ‘சீரியஸ் மென்’, ‘பாதாள் லோக்’, ‘கத்தல்’, ‘பரீக்ஷா’ போன்றவையும் தலித்திய / அம்பேத்கரிய பார்வைகளை முன்வைத்தன. நீண்டகாலமாக ஒடுக்கப்பட்ட மக்கள் வெறும் பார்வையாளர்களாகவே இருந்து வந்த இந்திய திரைத் துறையில், இந்தப் புதிய பாய்ச்சல் என்பது அவர்கள் தங்கள் பார்வைகளையும் முன்வைப்பது அவசியம்.
இப்படியான தலித்திய / அம்பேத்கரிய படங்கள் வெளியாகும்போது சமூக வலைதளங்களில் ‘நசுக்கப்பட்டோம், பிதுக்கப்பட்டோம் என்று புலம்புகிறார்கள்’ என்று சிலர் கொச்சையான முறையில் கேலி செய்வதை அண்மைக் காலமாக பார்க்க முடிகிறது. அப்படியான கொக்கரிப்புகளை எல்லாம் இடக்கையால் புறந்தள்ளி, ஒடுக்கப்பட்ட மக்களின் இன்னல்களை பேசும் படைப்புகள் இன்னும் அதிகமாக வரவேண்டும்.!