டிச.4-ல் நடைபெறுகிறது மகாராஷ்டிர முதல்வரை தேர்வு செய்யும் பாஜக சட்டமன்ற கட்சி கூட்டம்

மும்பை: மகாராஷ்டிர முதல்வரை தேர்வு செய்யும் பாஜக சட்டமன்றக் கட்சிக் கூட்டம் நாளை (டிசம். 4) நடைபெற உள்ளது. கூட்டத்தில் பங்கேற்க கட்சியின் சட்டமன்ற உறுப்பினர்களுக்கு பாஜக அழைப்பு விடுத்துள்ளது.

மகாராஷ்டிர சட்டப்பேரவைத் தேர்தலில் பாஜக தலைமையிலான மகாயுதி கூட்டணி வெற்றி பெற்று மீண்டும் ஆட்சி அமைப்பதற்கான வாய்ப்பை பெற்றுள்ளது. எனினும், புதிய முதல்வர் யார் என்ற கேள்விக்கு இதுவரை அதிகாரபூர்வமாக பதில் அளிக்கப்படவில்லை.

இந்நிலையில், பாஜக சட்டப்பேரவைக் கட்சித் தலைவரை தேர்வு செய்வதற்கான கூட்டம் நாளை (டிச.4) காலை நடைபெறும் என்றும் அதில் தவறாமல் பங்கேற்க வேண்டும் என்றும் கட்சி எம்எல்ஏக்களுக்கு பாஜக அழைப்பு விடுத்துள்ளது. மும்பையில் விதான் பவனில் இந்த கூட்டம் நடைபெறும் என கூறப்படுகிறது. இதில், கட்சியின் சட்டமன்றக் குழு தலைவராக தேவேந்திர ஃபட்னவிஸ் தேர்ந்தெடுக்கப்படுவார் என தகவல் வெளியாகி உள்ளது. இந்த கூட்டத்துக்கான மத்திய பார்வையாளர்களாக மத்திய நிதி அமைச்சரும் பாஜக மூத்த தலைவருமான நிர்மலா சீதாராமனும், குஜராத் முன்னாள் முதல்வரும் பஞ்சாப் மற்றும் சண்டிகர் பாஜக பொறுப்பாளருமான விஜய் ரூபானி ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.

இந்த கூட்டத்தில் சட்டமன்றக் கட்சித் தலைவராக தேவேந்திர ஃபட்னவிஸ் தேர்ந்தெடுக்கப்படும் பட்சத்தில் அவர் மாநிலத்தின் முதல்வராக டிச.5ம் தேதி பதவியேற்பார். பதவியேற்பு விழா மும்பையில் உள்ள ஆசாத் மைதானத்தில் நடைபெறும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து அங்கு மேற்கொள்ளப்பட வேண்டிய ஏற்பாடுகள் தொடர்பாக மும்பை பாஜக தலைவர் ஆசிஷ் ஷெலார், கட்சியினருடன் ஆலோசனை மேற்கொண்டு வருகிறார். இந்த மைதானத்தில் அதிகபட்சம் 40 ஆயிரம் பேர் வரை கூட முடியும். மைதானம் முழுமையாக நிரம்பும் வகையில் ஏற்பாடுகள் இருக்க வேண்டும் பாஜக திட்டமிட்டு வருகிறது.

சட்டப்பேரவை உறுப்பினர்கள் அனைவரும் பதவியேற்பு விழாவுக்கு மாலை 3.30 மணிக்குள் வந்துவிட வேண்டும் என்றும் மாலை 5 மணிக்கு பதவியேற்பு விழா நடைபெறும் என்றும் பெயர் வெளியிட விரும்பாத பாஜக நிர்வாகி ஒருவர் தெரிவித்துள்ளார். இவ்விழாவில், பிரதமர் நரேந்திர மோடி, உள்துறை அமைச்சர் அமித் ஷா, பாஜக தலைவரும் மத்திய அமைச்சருமான ஜெ.பி. நட்டா, பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், மத்திய சாலை போக்குவரத்துத் துறை அமைச்சர் நிதின் கட்கரி உள்ளிட்டோர் கலந்து கொள்ள இருப்பதாகவும் கூறப்படுகிறது.

பதவியேற்பு விழாவில் முதல்வர் மற்றும் இரண்டு துணை முதல்வர்கள் பதவியேற்பார்கள் என்றும், அமைச்சர்களும் அன்றைய தினமே பதவியேற்பார்களா என்பது குறித்து பாஜக, சிவ சேனா, தேசியவாத காங்கிரஸ் கட்சிகளின் ஆலோசனைக் கூட்டத்தில் முடிவு செய்யப்படும் என்றும் தகவல் வெளியாகி உள்ளது.

இதையடுத்து, மகாராஷ்டிர சட்டப்பேரவையின் சிறப்புக் கூட்டத் தொடர் டிசம்பர் 7-9 தேதிகளில் நடைபெறும் என்றும் அன்றைய தினம் புதிய உறுப்பினர்கள் பதவியேற்பார்கள் என்றும் இதையடுத்து குளிர்கால கூட்டத் தொடர் டிசம்பர் 16 முதல் 23 வரை நடைபெறும் என்றும் தகவல் வெளியாகி உள்ளது.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.