சீக்கிய அமைப்பு விதித்த தண்டனையை ஏற்று கழிப்பறையை சுத்தம் செய்த பஞ்சாப் முன்னாள் துணை முதல்வர்

புதுடெல்லி: ஷிரோமணி அகாலி தள் ஆட்சிக் காலத்தில் சீக்கிய மதத்துக்கு எதிராக செய்த செயல்களுக்காக மத குருமார்களால் விதிக்கப்பட்ட தண்டனையை ஏற்று பஞ்சாப் முன்னாள் துணை முதல்வர் சுக்பிர் சிங் பாதல் உள்ளிட்டோர் பாத்திரங்களை கழுவி, கழிப்பறையை சுத்தம் செய்தனர்.

பஞ்சாபில் கடந்த 2007 முதல் 2012 வரை சிரோமணி அகாலி தள் ஆட்சியில் இருந்தது. அப்போது பிரகாஷ் சிங் பாதல் முதல்வராகவும், அவரது மகனான சுக்பிர் சிங் பாதல் துணை முதல்வராகவும் இருந்தனர். 2007ல் சீக்கிய மதத்தை அவமதித்துப் பேசிய தேரா சச்சா சவுதா அமைப்பின் தலைவர் குர்மீத் ராம் ரஹீமுக்கு மத நிந்தனை வழக்கில் மன்னிப்பு வழங்கப்பட்டது, அவர் தண்டிக்கப்படாதது உள்ளிட்ட குற்றங்கள் அப்போதைய ஆட்சியாளர்களுக்கு எதிராக முன்வைக்கப்பட்டு, அது குறித்து சீக்கிய மதத்தின் உயர் அதிகார அமைப்பான அகால் தக்த் விசாரணை நடத்தியது. இதில், பிரகாஷ் சிங் பாதல், சுக்பிர் சிங் பாதல், அப்போது அமைச்சர்களாக இருந்தவர்கள், சிரோமணி அகாலி தள் கட்சியின் உயர் பொறுப்பில் இருந்தவர்கள் ஆகியோர் குற்றவாளிகளாக அறிவிக்கப்பட்டு அவர்களுக்கான தண்டனையும் அறிவிக்கப்பட்டது.

பிரகாஷ் சிங் பாதல் மறைந்துவிட்டதை அடுத்து, அவருக்கு முன்பு வழங்கப்பட்ட சீக்கிய சமுதாயத்தின் பெருமை எனும் பட்டம் திரும்பப் பெறப்பட்டது. சுக்பீர் சிங் பாதல் உள்ளிட்டோர் பொற்கோவில் சமையலறையில் பாத்திரங்களை சுத்தம் செய்ய வேண்டும், பக்தர்களின் காலணிகளை துடைக்க வேண்டும் என தண்டனை விதிக்கப்பட்டது. சுக்பீர் சிங் பாதல் சிரோமணி அகாலி தள் கட்சித் தலைவர் பொறுப்பில் இருந்து விலக வேண்டும் என்றும் 5 பேர் கொண்ட உயர் மத தலைவர்கள் தண்டனை விதித்தனர்.

தங்கள் மீதான குற்றத்தை ஏற்பதாக சுக்பிர் சிங் பாதல் உள்ளிட்டோர் ஒப்புக்கொண்டனர். தண்டனையை ஏற்கும் விதமாக அவர்கள் அமிர்தசரசில் உள்ள பொற்கோவிலுக்கு வந்து தங்கள் குற்றத்தை ஒப்புக்கொண்டதற்கான அட்டையை கழுத்தில் மாட்டிக்கொண்டு சமையலறையில் பாத்திரங்களை சுத்தம் செய்தனர். கழிவறைகளையும் சுத்தம் செய்தனர்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.