கலைஞர் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகிக் கொண்டிருக்கும் `ரஞ்சிதமே’ தொடரில் நடித்துக் கொண்டிருந்தவர் நடிகர் நேத்ரன். டான்ஸர், நடிகர் எனப் பன்முகம் கொண்டவர். கிட்டத்தட்ட 25 ஆண்டுகளுக்கும் மேலாக சின்னத்திரையில் பரிச்சயமான நடிகர். இவருடைய காதல் மனைவி தீபா. சன் டிவியில் ஒளிபரப்பாகிக் கொண்டிருக்கும் ‘சிங்கப்பெண்ணே’ தொடரில் நடித்துக் கொண்டிருக்கிறார். இவரும் சின்னத்திரையில் பரிச்சயமானவர்.
நேத்ரன் – தீபா தம்பதிக்கு இரண்டு மகள்கள். மூத்த மகள் அபிநயா `கனா காணும் காலங்கள் சீசன் 2′ வெப் சீரிஸில் நடித்திருந்தார். சமீபத்தில் அபிநயா அவருடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ‘அப்பாவுக்கு கேன்சர் பாசிட்டிவ். சர்ஜரி பண்ணிட்டாங்க. கல்லீரல் டேமேஜ் ஆகியிருக்குன்னு மறுபடி ஐசியூவில் வச்சிருக்காங்க. அப்பா சீக்கிரம் சரியாகி வரணும்! நீங்க எல்லாரும் ப்ரே பண்ணிக்கோங்க!’ எனக் கூறியிருந்தார்.
இந்நிலையில் இன்று நேத்ரன் இயற்கை எய்தியிருக்கிறார். அவருடைய மறைவு பலருக்கும் அதிர்ச்சியையும், சோகத்தையும் உண்டாக்கியிருக்கிறது. இது தொடர்பாக நேத்ரனின் நண்பரும் நடிகருமான டிங்கு அவருடைய ஃபேஸ்புக் பதிவில், ‘ என் நண்பனின் மறைவு சோகத்தை ஏற்படுத்தியிருக்கிறது. Rest In Peace My friend’ என்கிற கேப்ஷனுடன் அவருடன் எடுத்துக் கொண்ட புகைப்படத்தை பதிவிட்டிருக்கிறார்.
சின்னத்திரை நடிகர்கள், அவருடைய ரசிகர்கள் எனப் பலரும் அவருடைய மறைவுக்கு இரங்கல்கள் தெரிவித்து வருகின்றனர்.
ஆழ்ந்த இரங்கல்கள்!