கௌரவ முகம்மது சாலி நழீம் அவர்கள் பத்தாவது பாராளுமன்றத்தின் உறுப்பினராக சபாநாயகர் கௌரவ கலாநிதி அசோக ரன்வல முன்னிலையில் இன்று (03) பதவிப்பிரமாணம் செய்துகொண்டார்.
சபாநாயகர் முன்னிலையில் சத்தியப்பிரமாணம் செய்து கொண்டதன் பின்னர் பாராளுமன்ற செயலாளர் நாயகம் குஷானி ரோஹணதீர முன்னிலையில் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கான ஏட்டிலும் அவர் கையொப்பமிட்டார்.
ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸை பிரதிநிதித்துவப்படுத்தி தேசியப் பட்டியல் உறுப்பினராக கௌரவ முகம்மது சாலி நழீம் நியமிக்கப்பட்டுள்ளார்.
கடந்த நவம்பர் 21 ஆம் திகதி பத்தாவது பாராளுமன்றத்தின் முதலாவது அமர்வு இடம்பெற்றதுடன், அன்றைய தினம் புதிய உறுப்பினர்கள் பதவிப்பிரமாணம் செய்தனர்.
துவரை ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் தேசியப்பட்டியல் உறுப்பினர் பதவிக்கான பெயர் வர்த்தமானியில் வெளியிடப்பட்டிருக்கவில்லை. கடந்த 22 ஆம் திகதி ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸின் சார்பில் தேசியப்பட்டியல் உறுப்பினராக கௌரவ முகம்மது சாலி நழீம் அவர்களின் பெயரை தேர்தல்கள் ஆணைக்குழு வர்த்தமானியில் வெளியிட்டது. அதற்கமைய அவர் இன்று பத்தாவது பாராளுமன்றத்தின் உறுப்பினராக பதவிப்பிரமாணம் செய்துகொண்டார்.
இதற்கு முன்னர் அவர் ஏறாவூர் நகர சபையின் தவிசாளராகப் பணியாற்றியுள்ளார்.