மகாராஷ்டிர முதல்வராக பதவியேற்க தேவேந்திர ஃபட்னாவிஸுக்கு ஆளுநர் அழைப்பு

மும்பை: மகாராஷ்டிர முதல்வராக நாளை பதவியேற்க தேவேந்திர ஃபட்னாவிஸுக்கு ஆளுநர் சி.பி. ராதாகிருஷ்ணன் அழைப்பு விடுத்துள்ளார்.

மகாராஷ்டிராவில் நடந்து முடிந்த சட்டப்பேரவைத் தேர்தலில் பாஜக தலைமையிலான மகாயுதி கூட்டணி அறுதிப் பெரும்பான்மையுடன் வெற்றி பெற்றதை அடுத்து, முதல்வர் யார் என்பதை அறிவிப்பதில் இழுபறி நிலவி வந்தது. இந்நிலையில், மும்பையில் இன்று கூடிய பாஜக எம்எல்ஏக்களின் கூட்டத்தில் கட்சியின் சட்டமன்றக் குழு தலைவராக தேவேந்திர ஃபட்னாவிஸ் ஒருமனதாக தேர்ந்தெடுக்கப்பட்டார். குஜராத் முன்னாள் முதல்வரும் மத்திய பார்வையாளருமான விஜய் ரூபானி இதனை அறிவித்தார். அப்போது பேசிய மற்றொரு மத்திய பார்வையாளரான நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன், மகாராஷ்டிராவை நாட்டின் முதல் மாநிலமாக நாம் உருவாக்குவோம் என குறிப்பிட்டார்.

இதையடுத்துப் பேசிய தேவேந்திர ஃபட்னாவிஸ் “எந்தவொரு மத புத்தகத்தையும் விட, இந்திய அரசியலமைப்புச் சட்டமே தனக்கு முக்கியமானது என்பதை பிரதமர் நரேந்திர மோடி எப்போதும் வலியுறுத்துவார். சட்டப்பேரவை கட்சித் தலைவராக தேர்வு செய்யப்பட்டிருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது. அதனுடன் மகத்தான பொறுப்பும் வந்துள்ளது. இதை நான் அங்கீகரிக்கிறேன்” என குறிப்பிட்டார்.

அமைச்சரவை தொடர்பான கேள்விக்கு பதில் அளித்த விஜய் ரூபானி, “இது தொடர்பாக கூட்டணி கட்சிகளுடன் கலந்து பேசி முடிவு செய்யப்படும். மகாயுதி கூட்டணியில் எந்த கருத்து வேறுபாடும் இல்லை. அனைவரும் மகிழ்ச்சியாக இருக்கிறார்கள். அனைத்தும் நன்றாக நடந்து கொண்டிருக்கிறது” என கூறினார்.

பாஜக சட்டப்பேரவைக் கட்சித் தலைவராக தேவேந்திர ஃபட்னாவிஸ் தேர்ந்தெடுக்கப்பட்டதை அடுத்து அவரை ஆதரித்து சிவ சேனா மற்றும் தேசியவாத காங்கிரஸ் எம்எல்ஏக்கள் கையெழுத்திட்ட கடிதம் தயாரிக்கப்பட்டது. இதன் தொடர்ச்சியாக, நிர்மலா சீதாராமன், விஜய் ரூபானி, தேவேந்திர ஃபட்னாவிஸ், ஏக்நாத் ஷிண்டே, அஜித் பவார் உள்ளிட்டோர் ராஜ்பவனுக்குச் சென்று ஆளுநரைச் சந்தித்தனர். அப்போது தேவேந்திர ஃபட்னாவிஸ் முறைப்படி ஆட்சி அமைக்க உரிமை கோரி கடிதத்தை அளித்தார். இதனையடுத்து, ஆட்சி அமைக்க ஆளுநர் அழைப்பு விடுத்தார்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய ஃபட்னாவிஸ், “நான் முதல்வராக பதவியேற்பதை ஆதரித்து கடிதம் அளித்ததற்காக தற்காலிக முதல்வர் ஏக்நாத் ஷிண்டே மற்றும் என்சிபி தலைவர் அஜித் பவார் ஆகியோருக்கு நன்றி. முதல்வர் அல்லது துணை முதல்வர் என்பதெல்லாம் வெறும் தொழில்நுட்ப ஏற்பாடுதான். நான், ஏக்நாத் ஷிண்டே மற்றும் அஜித் பவார் ஆகிய மூவரும் இதுவரை செயல்பட்டதைப் போல ஒன்றாகச் செயல்படுவோம்; கூட்டாக முடிவுகளை எடுப்போம்.

நான் நேற்று ஷிண்டேவை சந்தித்து அரசாங்கத்தின் ஒரு அங்கமாக இருக்குமாறு கேட்டுக் கொண்டேன். சிவசேனா எம்.எல்.ஏ.க்களும் இந்த கூட்டுத் தலைமையை ஆதரிக்கின்றனர். மகாராஷ்டிராவிற்கு சிறந்த அரசாங்கத்தை வழங்கவும், எங்கள் வாக்குறுதிகள் அனைத்தையும் நிறைவேற்றவும் நாங்கள் பாடுபடுவோம்” என்று தெரிவித்தார்.

அப்போது பேசிய ஏக்நாத் ஷிண்டே, “முதல்வராக நியமிக்கப்பட்ட தேவேந்திர ஃபட்னாவிஸுக்கு எனது முழு ஆதரவு உண்டு. இரண்டரை ஆண்டுகளுக்கு முன்பு நான் முதல்வராக பதவியேற்பதை ஆதரித்து தேவேந்திர ஃபட்னாவிஸ் ஆளுநரிடம் கடிதம் கொடுத்தார். இன்று, நான் அவருக்கு அதையே செய்துள்ளேன்.

எங்கள் கூட்டணி உறுதியாக உள்ளது. முதல்வர் பதவியைப் பொறுத்தவரை, பிரதமர் நரேந்திர மோடி, அமித் ஷா மற்றும் ஜேபி நட்டா எடுக்கும் எந்த முடிவையும் சிவசேனா முழுமையாக ஆதரிக்கும் என்று நான் முன்பே கூறியிருந்தேன். மகாராஷ்டிரா மக்களுக்கு சிறந்ததை வழங்குவதில் எங்களின் ஒரே கவனம் எப்போதும் இருந்து வருகிறது.

வளர்ச்சி மற்றும் நலத் திட்டங்களில் நாங்கள் இணைந்து பணியாற்றியுள்ளோம். தனிப்பட்ட முறையில் எனக்கு என்ன கிடைத்தது என்பது முக்கியமல்ல. எங்களின் முயற்சியால் மகாராஷ்டிர மக்கள் என்ன பெற்றார்கள் என்பதுதான் முக்கியம்” என கூறினார்.

அப்படியானால் துணை முதல்வராக நீங்கள் பதவியேற்க இருக்கிறீர்களா என செய்தியாளர்கள் கேட்டதற்கு, “அது விரைவில் தெரியவரும்” என்று ஷிண்டே பதிலளித்தார். இருப்பினும், அஜித் பவார், “நான் பதவிப் பிரமாணம் எடுத்துக்கொள்ளப் போகிறேன்” என்று குறுப்பிட்டார். உடனடியாக குறுக்கிட்ட ஷிண்டே, “தாதாவுக்கு (அஜித் பவார்) காலையிலும் மாலையிலும் பதவிப் பிரமாணம் எடுத்த அனுபவம் உண்டு” என்று கிண்டலாகக் கூறினார்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.