பேச்சு சுதந்திரத்தை உறுதிப்படுத்துவதற்கு அரசாங்கம் நடவடிக்கை – நீதி அமைச்சர்

பேச்சு சுதந்திரம் அவசியமானது என்றும், அரசாங்கம் அதனை உறுதிப்படுத்துவதற்கு எப்பொழுதும் செயற்படும் எனவும் நீதி மற்றும் தேசிய ஒருமைப்பாட்டு அமைச்சர் சட்டத்தரணி ஹர்ஷண நாணயக்கார இன்று (04) பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.

ஜனாதிபதியினால் கடந்த நவம்பர் 21ஆம் திகதி பாராளுமன்றத்தில் முன் வைக்கப்பட்ட அரசாங்கத்தின் கொள்கைப் பிரகடனம் தொடர்பான விவாதத்தின் இரண்டாம் நாளான இன்று விவாதத்தில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அமைச்சர் இதனைக் குறிப்பிட்டார்.

சட்டத்தின் ஆட்சியை நிலை நாட்டுதல் மற்றும் நாட்டின் வளங்களை அழித்த ஊழல்வாதிகளுக்குத் தண்டனை வழங்குதல், இன வேறுபாடு, சமய வேறுபாடு என்பவற்றை இல்லாதொழித்தல் ஆகியன மக்களுக்கு வழங்கிய பிரதான வாக்குறுதிகள் என்றும், மக்களுக்கு வழங்கிய அவ்வாக்குதிகள் கட்டாயமாக நிறைவேற்றப்படும் எனவும் அமைச்சர் சுட்டிக்காட்டினார்.

தேசிய ஒற்றுமையை கட்டியெழுப்புவதற்கு நடவடிக்கை எடுக்கப்படுவதாகவும், சமய தீவிரவாதம் தலை தூக்குவதற்கு எச்சந்தர்ப்பத்திலும் இடம் அளிக்கப்பட மாட்டாது எனவும் அவர் வலியுறுத்தினார்.

தொடர்ந்து உரையாற்றிய அமைச்சர்;

“ஒரு நாட்டிற்கு பொருளாதார மற்றும் சமூகத்தை கட்டியெழுப்புவதற்கு சட்டத்தின் ஆட்சி மிகவும் முக்கியமானது. சட்டத்தின் உரிமை மக்களுக்கு உரியது. செல்வம் மற்றும் அதிகாரத்திற்கு இணங்க மாற்றமடையும் சட்டம் ஒன்று அல்லது நபரொருவரின் தராதரம் பார்த்து மாற்றமடையும் சட்டம் இனியும் இருக்காது என்றும் ஜனாதிபதி அந்தக் கொள்கைப் பிரகடனத்தில் முன் வைத்தார்.”

என நீதி மற்றும் தேசிய ஒருமைப்பாட்டு அமைச்சர் சட்டத்தரணி ஹர்ஷண நாணயக்கார மேலும் வலியுறுத்தினார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.