`லக்கி பாஸ்கர்’ திரைப்படத்தின் கதாபாத்திரங்களைப் பற்றிய மீம்ஸ்தான் தற்போதைய சமூக வலைதளப் பக்கங்களில் வைரல்.
திரையரங்கத்தைத் தொடர்ந்து ஓ.டி.டி-யிலும் படம் அதிரடியான ஹிட்டடித்திருக்கிறது. `நாமும் வாழ்க்கையில் பாஸ்கராகி சாதிக்க வேண்டும், நம் வாழ்க்கையிலும் ஆண்டனிபோல ஒரு வழிக்காட்டி வரவேண்டும்!’ என அதகள, ரணகள் மீம்ஸ்கள் தற்போது ஷேர் செய்யப்பட்டு வருகின்றன. `அதெல்லாம் தப்பு மை சன்’ என அட்வைஸ்களும் மறுபுறம் குவிகின்றன. இப்படி சகல ஏரியாக்களிலும் கவனம் பெற்றிருக்கிறது லக்கி பாஸ்கர் படம்.
மற்றொரு பக்கம் `ஜெயிலர்’ ரித்விக்கை பாராட்டியும் பலர் பதிவிட்டு வருகிறார்கள். `ஜெயிலர்’ படத்திற்குப் பிறகு ஒரு குறுகிய இடைவெளி எடுத்துக்கொண்டு டோலிவுட் அறிமுகம் கண்டிருக்கிறார். படத்திற்கு வாழ்த்துகளைக் கூறி ரித்விக்கிடம் பேசினோம். கூடவே, ரித்விக்கின் தந்தையும் இணைந்து கூடுதல் தகவல்களை நமக்காகச் சொன்னார்.
பேசத் தொடங்கிய ரித்விக் , “ஹாய்…எப்படி இருக்கீங்க? லக்கி பாஸ்கர் படத்துக்கு பலரும் எனக்கு விஷ் பண்றாங்க. எனக்கு சந்தோஷமாக இருக்கு. ஸ்கூல்ல என்னுடைய நண்பர்கள் எல்லோரும் படத்தை பார்த்துட்டு என்னை பாராட்டினாங்க. டீச்சர்ஸும் படம் பார்த்துட்டு என்னை வாழ்த்தினாங்க.” என்றவர், “துல்கர் சல்மான் சார் ரொம்ப அன்பாகப் பழகுவார். நிறைய விஷயங்கள் என்கிட்ட பேசுவார். எனக்கு பிடிச்ச ஃபுட்ஸெல்லாம் அவர் வாங்கித் தருவார். நான் டிராயிங் பண்ணின படங்களையெல்லாம் அவர்கிட்ட காட்டுவேன்.
மீனாட்சி செளத்ரி மேமும் ரொம்ப பாசத்தோட இருப்பாங்க. முக்கியமாக அவங்க எனக்கு ஜோக்ஸ்லாம் சொல்லுவாங்க. `ஜெயிலர்’, `சர்தார்’ படத்துல வேலைப் பார்த்தவங்களெல்லாம் இப்போ `லக்கி பாஸ்கர்’ படம் பார்த்துட்டு பாராட்டினாங்க. துல்கர் சாரும் புரோமோஷன் ஈவென்ட்ஸ்ல என்னைப் பத்தி அதிகமாகப் பேசினார்.” என ரித்விக் பேசியதும் அவரின் தந்தை, `துல்கர் சார் எதாவது டென்ஷன்ல இருந்தாலும் ரித்விக்கை பார்த்தவுடனே ரிலாக்ஸாகி பேச ஆரம்பிச்சுடுவார். இவங்க ரெண்டு பேருக்கு இடையிலயும் கெமிஸ்ட்ரி நல்லா இருக்கும். துல்கர் சாருக்கும் ஒரு சின்ன பெண் குழந்தை இருக்காங்க. அவங்ககிட்ட எப்படி இருப்பாரோ… அப்படியேதான் ரித்விக்கிட்டையும் இருந்தாரு.
இப்போ சோசியல் மீடியாவுல தம்பியைப் பற்றி அதிகமாக மீம்ஸ் போடுறாங்க. நல்ல வரவேற்பைப் பெறக்கூடிய கதாபாத்திரங்கள் தம்பிக்குத் தொடர்ந்து அமையுறது சந்தோஷம். சோசியல் மீடியாவுல முகம் தெரியாத நபர்கள் பலரும் வாழ்த்துறது ரொம்பவே சந்தோஷத்தை எனக்குக் கொடுக்குது. `ஜெயிலர்’ படத்துக்குப் பிறகு ஒரு சின்ன இடைவெளி எடுத்துட்டு ஒரு நல்ல படம் பண்ணியிருக்கிறது ஒரு ஆனந்தத்தையும் திருப்தியையும் கொடுக்குது.
`ஜெயிலர்’ படத்துக்குப் பிறகு ரித்விக்கிற்கு அதிகளவிலான வாய்ப்புகள் தொடர்ந்து வருது. `ஜெயிலர்’ படம் தமிழ் மொழியைத் தாண்டி தெலுங்குலயும் நல்ல ஹிட்டாச்சு. அந்தப் படத்தைப் பார்த்துட்டுதான் இயக்குநர் வெங்கி அத்லூரி `லக்கி பாஸ்கர்’ திரைப்படத்தோட மகன் கதாபாத்திரத்திற்கு ரித்விக்கைத் தேர்ந்தெடுத்திருப்பார்னு நினைக்கிறேன்.” என்றவர், “இப்போ உங்ககிட்ட ரொம்ப கம்மியா பேசுறான். ஷூட்டிங் ஸ்பாட்ல தம்பிக்கு ஒரு நாள்தான் தயக்கம் இருக்கும்.
நடிகர்கள் இவன்கிட்ட பேசும்போது கலகலப்பாக இரண்டாவது நாள்ல இருந்து பேச ஆரம்பிச்சுடுவான். ரித்விக்கின் யூட்யூப் வீடியோஸ் பலருக்கும் ரொம்ப ஃபேவரைட். கார்த்தி சார்கூட `சர்தார்’ படத்தோட படப்பிடிப்பு தளத்துல என்கிட்ட `எப்படி அப்படியே அசலா பண்றான்’னு கேட்டாரு. இவனுடைய லேடி கெட்டப் கார்த்தி சாருக்குப் பிடிக்கும். அது தொடர்பாகவும் பேசியிருக்கார். படப்பிடிப்பு தளத்துல ரித்விக்கை அவர் அக்கறையாகவும் பார்த்துகிட்டாரு.
அதுமட்டுமல்ல ரொம்ப எளிமையாக பழகி ரித்விக்குக்கு சப்போர்ட் பண்ணினார்.” என இவர் பேசியதும் ரிதிவிக்கிடம், “ ரித்விக்…யூட்யூப்ல சின்ன இடைவெளிக்குப் பிறகு இப்போ தீபாவளி சமயத்துல வீடியோ போட்டிருந்தீங்க, எப்போ முன்னாடி மாதிரி வீடியோஸ் பண்ணப் போறீங்க?” என எழுப்பிய கேள்விக்கு மழலை புன்முறுவலோடு பதிலளிக்க தொடங்கிய அவர், “ இப்போ ரெகுலராக ஸ்கூலுக்குப் போயிட்டு இருக்கேன். அப்போ கேப் கிடைச்சது வீடியோ பண்ணினோம். ஷூட்டிங் தொடர்ந்து இருக்கிறதுனால முன்னாடி மாதிரி பண்ண முடியல. பெரிய லீவ் கிடைச்சா முன்னாடி மாதிரி வீடியோ பண்ணத் தொடங்கிடுவோம்.” என உற்சாகமாகப் பேசினார் ரித்விக்.